இலங்கையில் ராய்டர்ஸ் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு - கட்டான - திம்பிரிகஸ்கட்டுவ பகுதியிலுள்ள மாரிஸ் ஸ்டேலா பாடசாலைக்குள் நேற்று பிற்பகல் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நடமாடுவதாக பாடசாலையின் அதிபரினால் கட்டான போலீஸாருக்கு முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதான சித்திக் அஹமத் தனுஷ்க் என்ற ராய்டர்ஸ் புகைப்பட ஊடகவியலாளர் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் நேற்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் வெளிவிவகார அமைச்சை தொடர்புக் கொண்டு பேசியது.
குறித்த ஊடகவியலாளர் உரிய ஆவணங்களுடனேயே நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டது.
தொடர்பாடல் பிரச்சனையே ராய்டர்ஸ் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
எனினும், வெளிவிவகார அமைச்சு இன்றைய தினம் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல்செய்து, குறித்த ஊடகவியலாளரை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெரும்பாலும், இன்றைய தினத்திற்குள் அந்த ராய்டர்ஸ் ஊடகவியலாளர் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ராய்டர்ஸ் ஊடகவியலாளரை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வெளிவிவகார அமைச்சகம் மேற்கொண்டு வருவதாக அமைச்சக பேச்சாளர் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.
Thanks bbc
0 comments:
Post a Comment