ஏறத்தாழ ஒரு தசாப்தம் ஆகிவிட்டது. ஆனால், இன்று வரை மறக்காத பேட்டி இது. முகஸ்துதி இல்லாத கேள்விகள்...
பளிச்சென பதில்கள்... என்று ஆழமான நேர்காணல். கேள்வி கேட்ட கரண் தப்பார் மட்டும் அல்ல... பதில் சொன்ன ஜெயலலிதாவும் மழுப்பவில்லை. நேர்காணல் ஒளிப்பரப்பான நேரத்தில் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
பளிச்சென பதில்கள்... என்று ஆழமான நேர்காணல். கேள்வி கேட்ட கரண் தப்பார் மட்டும் அல்ல... பதில் சொன்ன ஜெயலலிதாவும் மழுப்பவில்லை. நேர்காணல் ஒளிப்பரப்பான நேரத்தில் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
ஜெயலலிதா சில ஆண்டுகளுக்கு முன் பி.பி.சிக்கு அளித்த நேர்காணலின்... எழுத்து வடிவம்...
இன்று நம் நிகழ்ச்சியில் நாம் சந்திக்கப் போகும் விருந்தினர் தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சரான 'ஜெ.ஜெயலலிதா'. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டசபை தேர்தலில் 80% பெரும்வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தவர். ஆனால் 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட்டைக் கூட பெறமுடியாமல், வெற்றியைத் தவற விட்டார். எப்படி இத்தனை வித்தியாசம்? எப்படி அவரது மக்கள் செல்வாக்கு தலைகீழாக மாறியது? இதற்கு அவர் கூற விரும்புவது என்ன?
இதற்குக் யார் காரணம்? மக்கள் இவரை சரியாக புரிந்து கொள்ளவில்லையா? அல்லது இவர் உண்மையில் தவறு செய்துள்ளாரா? இந்த இரண்டு கேள்விகள் தான் முதலமைச்சர் ஜெயலலிதா முன்பு எடுத்து வைக்க விரும்புகிறேன்.
செல்வி. ஜெயலலிதா, இந்த நம்ப முடியாத தோல்வியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களது கட்சி ஒரு சீட்டைக்கூட பெற முடியாமல் போனதே?
ஜெயலலிதா பதில்: இது நம்ப முடியாத தோல்வி என்று நாங்கள் கருதவில்லை. ஏனென்றால் எங்கள் கட்சிக்கு மட்டும் ஒரு கோடி வாக்குகளுக்கு மேல் கிடைத்தது. அது மக்கள் எங்கள்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.
ஆனால் உங்களுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லையே?
ஆம் ஏனென்றால் நாங்கள் பெரும்பாலான கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை.
அப்படியென்றால் வாக்களிக்கும் முறையும் வாக்களிப்பும் உங்களுக்கு எதிராக செயல்பட்டதா?
எங்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்காளர்களை நாங்கள் தவற விடவில்லை. ஆனால் எங்களுக்கு எதிராக அமைந்த கூட்டணி வல்லமை மிகுந்ததாக இருந்தது.
அடுத்து, ஊடகங்கள் உங்களைப் பற்றி உருவாக்கிய பிம்பத்தைப் பற்றி பேசலாம். ஏனெனில் மக்களும் அதை நம்பி இந்தமுறை உங்களுக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக ஊடகங்கள் உங்களைப் பற்றி கூறியது, ஜனநாயகமற்ற ஆட்சியை நடத்துவதாகவும், பொறுப்பற்ற, பகுத்தறிவற்ற, பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்து கொள்வதாகவும் கூறப்படுகின்றன.
இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் தவறாக நடந்து கொண்டார்களா? இல்லை, உங்கள் தவறை ஏற்றுக் கொள்கிறீர்களா?
நான் பொறுப்பற்றவள் அல்ல. அது உண்மையும் அல்ல. நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன். இதற்குக் காரணம், ஊடகங்கள்தான். இது கடந்த 3 ஆண்டுகள் மட்டுமல்ல, நான் அரசியலில் நுழைந்த காலம் முதல் இப்படித்தான்.
இதற்குக் காரணம். ''உலகமே ஒரு நாடகமேடை, அதில் எல்லோரும் நடிகர்கள். இந்த நாடக மேடையில் எனக்கு நடிக்கத் தெரியவில்லை. நான் ஓரங்கட்டப்பட்டேன். எனக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று பேச வராது. இந்த நாடகமேடையின் ஒரே விதி நடிக்கத் தெரிய வேண்டும். அதனால்தானோ என்னவோ, நான் சாதாரண அரசியல்வாதியாக இருக்க முடியவில்லை. நான் கேமரா முன்பு மட்டும்தான் நடித்துள்ளேன். நிஜ வாழ்க்கையில் நடிக்க வரவில்லை.
இதற்குக் காரணம் உங்கள் நேர்மையும், வெளிப்படை பேச்சும் தானா?
ஆம் நான் நேர்மையானவள் தான். உண்மையைச் சொல்கிறேன். நான் அரசியலில் இருக்க ஆசைப்படுகிறேன். உண்மை மட்டுமே பேச நினைக்கிறேன். இதற்கு நான் தகுதியானவள் இல்லை என்று மற்றவர்கள் நினைத்தால் கவலையில்லை. என்னை பலர் தவறாக நினைப்பதற்கு ஊடகங்கள் ஒரு காரணம்.
நீங்கள் பொறுப்பானவர் என்கிறீர்கள். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி தோல்வியடைந்த 5 நாட்களிலேயே நீங்கள், கடந்த ஆண்டு எடுத்த பல முக்கியமான முடிவுகளில் இருந்து பின்வாங்கி விட்டீர்களே?
நான் எடுத்த முடிவுகளில் மாற்றம் செய்ததற்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்தான் காரணம் என்றும், அதனால் நான் பின்வாங்குகிறேன் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் அது உண்மையல்ல.
இந்த மாற்றங்களை நான் 2001-ம் ஆண்டிலேயே செய்திருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. இதற்குக் காரணம், கடந்த ஆட்சியில் இருந்த தி.மு.க, மாநில கருவூலத்தில் நிதியை சிறிதும் விட்டு வைக்கவில்லை. பல முக்கியமான ஃபைல்கள், பில்கள் பாஸ் செய்யாமல் விடப்பட்டிருந்தன. நிதிப் பற்றாக்குறையை ஆய்வு செய்து, சரி செய்வதில் முனைப்பாக இருந்தேன்.
இது ஒரு முதலமைச்சரின் கடமை என்பது எனக்குத் தெரியும். 2003-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்படாத தொகை எல்லாம் வசூலிக்கப்பட்டது. 2003-04-ம் ஆண்டில் நிதி நிலை சரிசெய்யப்பட்டது. திவாலாக வேண்டிய நிலையில் இருந்த தமிழகத்த்தின் நிதிநிலையை மீட்டெடுத்தேன். இது எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே சீர்செய்யப்பட்டது.
ஊடகங்களில், நீங்கள் மக்கள் மத்தியில் உங்களின் புகழை உயர்த்திக் கொள்ளவே அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே ?
நான் இதை மறுக்கிறேன். நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் தமிழ்நாடு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கடும் வறட்சியில் இருந்தது. விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், ஏழைகள் என சமூகத்தின் அடித்தட்டு மக்கள் ஊதியம் இன்றி மிகவும் சிரமப்பட்டார்கள். வெளியில் எனது நடவடிக்கைகள் எவ்வாறு விமர்சிக்கப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரையில், விவசாயிகளையும் ஏழை மக்களையும் பாதுகாக்க நான் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறேன். மற்ற மாநிலங்களில் வறட்சியின்போது பட்டினிச் சாவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் அந்த நிலை வர, நான் விடவில்லை.
மத மாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்தது மக்களிடம் அதீத பிரபலமடைவதற்காகத்தானே ?
அது பொருளாதாரக் கொள்கையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லையே. அதோடு இது ஊடகங்களில் தவறாகப் பரப்பப்பட்டது. நிறைய மக்களும் தவறாகவே புரிந்து கொண்டார்கள். அது மத மாற்ற தடைச் சட்டம் கிடையாது; கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் என்பதை, திரித்துச் சொல்லி விட்டார்கள்.
ஆனால், அது இரண்டு வருடங்களுக்குத் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. நீங்களேகூட தேர்தல் தோல்விக்குப் பிறகு தானே அதை மாற்றிச் சொன்னீர்கள்?
இல்லை. முழுக்க முழுக்க இது ஊடகங்களின் தவறால் நிகழ்ந்தது தான். ஏன் ஊடகங்கள் எப்போதும் ஒருதலைப்பட்சமாகவே செயல்படுகின்றன? அதற்கான காரணத்தையும் நான் அறிவேன். நான் சுயமாக உருவானவள். அரசியல் என்பது எப்போதும் ஆண்களுக்கானதாகவே இருந்திருக்கிறது. அதை இந்திரா காந்தி மாற்றினார். ஆனால், அவருக்கு அதற்குரிய பின்புலம் எல்லாம், தானாகவே அமையப்பெற்று இருந்தது. அவரது குடும்பம், கட்சி அதற்கான தளத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. ஆனால், எனக்கு அப்படி இல்லை. இதை நான் ஒரு பெண் என்பதற்காக சொல்லவில்லை. எனக்கு அப்படிப்பட்ட பின்புலம் இல்லை என்பதால் சொல்கிறேன். இந்திரா காந்தியின் தந்தை இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு, ஸ்ரீமதி பண்டாரநாயகே இலங்கைப் பிரதமராக இருந்த பண்டாரநாயகேவின் மனைவி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோ, முசாபிர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா. ஆனால், இந்த மாதிரியான எந்தப் பின்புலமும் எனக்கு இல்லை. எனக்கு எதுவும் தங்கத் தட்டில் கிடைத்து விடவில்லை. அதனால் கூட, ஊடகங்கள் எனது விஷயத்தில் அப்படி நடந்து கொண்டிருக்கின்றனவா என்று நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்.
நான் தினமும் காலை 4 மணிக்கு எழுந்து விடுகிறேன். அதில் இருந்து தொடர்ந்து உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு யார் மீதும் பரம்பரைப் பகை கிடையாது.
(பேட்டியாளர் குறுக்கீடு ) பரம்பரைப் பகை கிடையாது என்கிறீர்கள். ஆனால், நீங்கள் தானே முன்னாள் முதல்வர் கருணாநிதியை நடுராத்திரியில் இரண்டு மணிக்குக் கைது செய்தீர்கள் ?
தி.மு.க அரசு, என் மீது பொய்யான வழக்குகள் போட்டது. அதற்காக என்னை ஜெயிலில் 28 நாட்கள் அடைத்தார்கள். அந்த வழக்கில் தேவை இல்லாமல் நான் குற்றவாளி ஆக்கப்பட்டேன். அப்போது ஊடகங்கள் இதை ஏதோ மிகப்பெரிய செய்தியாக சித்தரித்தன. தீய சக்திக்கு எதிரான போராட்டம் என்று அவரை பாராட்டின. ஆனால், பிற்காலத்தில் கருணாநிதியின் உண்மை முகம் வெளிவந்தது. மக்களும் அதை உணர்ந்து, 2001-ல் என்னை மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைத்தார்கள். நான் முதல்வராகி கருணாநிதியை ஒரு ஊழல் வழக்கில் கைது செய்தபோது, அவர்களுடைய குடும்ப செய்தித் தொலைக்காட்சி நிறுவனமான சன் டி.வி, இதை மிகவும் தந்திரமாக காட்சிப்படுத்தி .....
(பேட்டியாளர் குறுக்கீடு ) நீங்கள் எழுதி வைத்ததைப் பார்த்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள் ....
(ஜெயலலிதா கோபமாக)
நான் உங்களை நேருக்கு நேர் பார்த்து தான் பேசிக் கொண்டிருக்கிறேன். குறிப்புகள்தான், நான் வைத்திருக்கிறேன். எதையும் எழுதி வைத்துப் படிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..
ஒரு முன்னாள் முதல்வர், அதுவும் 77 வயதானவர் அவரை ....
ஊழல் செய்தவருக்கு வயது வித்தியாசம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நானும் கூட முதல்வராக இருந்தவள் தான், அவர்கள் என்னை அப்படி நடத்தினார்களா ?
அப்போது அது பழிவாங்கும் நடவடிக்கையா?
கிடையாது. அவர் ஊழல் செய்திருக்கிறார். குற்றவாளியாகத்தான் பார்க்கவேண்டும்.
அதற்காக நீங்கள் வருத்தப்பட்டீர்களா ?
இல்லை. சன் டி.வி வீடியோவில் காட்டப்பட்டது போல, அவர் மோசமாக நடத்தப்படவில்லை. மக்களுக்குக் காட்டப்பட்டது நன்றாக எடிட் செய்யப்பட்ட ஒரு நாடகம். அதை மக்களுக்கு திரும்பத் திரும்ப போட்டுக் காட்டப்பட்டது.
சரி... உங்களின் நிலையற்றத் தன்மையை விமர்சிக்கிறார்களே ? சோனியா காந்தியுடனான உங்கள் நட்புறவு என்பது உள்ளே வெளியே என்பது போல இருக்கிறதே ?
சோனியா காந்தி பற்றி இந்த பேட்டியில் பேச நான் விரும்பவில்லை. இந்த பேட்டியில் நான் என்ன பேச வேண்டும், எந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்கிற உரிமை எனக்கு இருக்கிறது. நீங்கள் கேட்பதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
கண்டிப்பாக இருக்கலாம். ஆனால், இதைப் பார்க்கும் மக்கள் இந்த கேள்விக்கு பதிலை எதிர்பார்ப்பார்கள் தானே ? அவரோடு இருந்து முரண்பட்டு, பி.ஜே.பி கூட்டணிக்கு 2003-ல் போன நீங்கள், தற்போது மீண்டும் காங்கிரஸோடு சேருவதற்கு முயற்சி செய்வது போல தெரிகிறதே?
நான் அப்படி எதுவும் முயற்சி செய்யவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் அவரோடு எந்த விரோதமும் கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணியே தவிர, தனிநபர் கூட்டணி கிடையாது. இப்போது நீங்கள் எழுதி வைத்ததைப் பார்த்து படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இல்லை. இல்லை. நீங்கள் பயன்படுத்திய வார்த்தை. அப்படியே படிக்கிறேன் கேளுங்கள். 1998-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும், 2003-ல் சோனியா காந்தி பிரதமர் ஆவது என்பது நாட்டிற்கே அவமானம் என்று நீங்கள் பேசினீர்களே ?
அந்த விவகாரத்தில் என்னுடைய உணர்வை நான் வெளிப்படுத்தினேன். இந்தியாவை வேறு ஒரு நாட்டைச் சேர்ந்தவர் ஆள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அன்று பேசிய வார்த்தைகள் எனக்கு நினைவிருக்கிறது. இன்னமும் அந்த நிலைப்பாட்டில்தான் நான் இருக்கிறேன்.
அப்படி என்றால் சோனியா காந்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் முடிவாக இருக்கிறீர்களா ?
சோனியா காந்தி என்று இல்லை. வேறு நாட்டைச் சேர்ந்த யாரும் ஆளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
ஊடகங்கள் உங்களை ஜனநாயக முறையற்றவர் என்றும், சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் என்றும் சொல்கின்றனவே ?
மக்கள் தான் சிறந்த நீதிபதிகள். அவர்களுக்குத் தெரியும். ஊடகங்களுக்கு என்னைப் பற்றிச் சொல்வதற்கு வேறு விஷயங்கள் இல்லை போலும். நான் எது பேசினாலும், நீங்கள் குறுக்கிடுவதைப் போல, அவர்களும் செய்கிறார்கள். எனக்கு தமிழ்நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம். அதற்காகத்தான் நான் உழைக்கிறேன். அதைத் தவிர எனக்கு வேறு வேலை எதுவும் இல்லை.
ஆனால், எதற்காக உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.,க்களும், மந்திரிகளும், எம்.பி.,க்களும் உங்கள் முன் மண்டியிட்டு காலில் விழுகிறார்கள் ?
மற்ற கட்சிகளிலும், கருணாநிதி அவர்களின் கட்சியிலும் கூட அப்படித்தான் காலில் விழுகிறார்கள். அங்கு எல்லாம் அது பெரிய விஷயமாக்கப்படுவது இல்லை. ஆனால், நான் என்றால் மட்டும் அது மிகப்பெரிய செய்தி. வயதில் மூத்தவர்களிடம் காலில் விழுந்து ஆசி பெறுவது இந்திய மரபு. நீங்களும் இந்தியர் தான். கண்டிப்பாக இந்திய மரபு, பாரம்பர்யம் பற்றி எல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். எந்த அமைச்சரையும் நான் காலில் விழச் சொல்லவில்லை. முதலில் செய்தார்கள். இப்போது கடந்த மூன்று, நான்கு வருடங்களாக பொதுவில் அவர்கள் அப்படிச் செய்வது இல்லை.
நீங்கள் அடிக்கடி உங்கள் மந்திரி சபையை மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லப்படுகிறதே ?
அது என்னுடைய நிர்வாகத் தேவைகளுக்காக செய்ய வேண்டி இருக்கிறது. என் தேவைக்கு ஏற்பவும், இந்த மாநிலத்தின் நலனுக்காகவும் நான் அதைச் செய்ய வேண்டி இருக்கிறது. நான் எது செய்தாலும் குற்றம் சொல்பவர்களுக்காக, எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு என்னால் செயல்படாமல் இருக்க முடியாது.
ஆனால், நீங்கள் அவர்களைத் தன்னிச்சையாக செயல்பட விடாமல் உங்களை நம்பியே வைத்திருக்க வேண்டி, அப்படிச் செய்வதாகச் சொல்லப்படுகிறதே ?
அப்படி ஆதாரமற்ற கூற்றுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
இப்போது கொஞ்சம் உங்களைப் பற்றி பேசலாம். உங்கள் கட்சியான அ.இ.அ.தி.மு.க முன்பு திராவிட இயக்கத்தின் ஒரு அங்கமாக இருந்தது. கடவுள் மறுப்பு, பகுத்தறிவுக் கொள்கைகளை முன்வைத்த.....
.
மன்னிக்கவும். இப்போதும் திராவிட இயக்கத்தின் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறது. முதலில் திராவிட இயக்க வரலாற்றை முழுவதுமாகப் படியுங்கள். அது நாத்திக இயக்கம் கிடையாது. அண்ணாவே சொல்லி இருக்கிறார் ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று. அப்படி என்றால் கடவுள் என்கிற ஒன்று இருப்பதாகத் தானே அர்த்தம்.
நியூமராலஜி, ஜாதகத்தின் மீது இருக்கும் நம்பிக்கை எல்லாம் உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தவில்லையா ?
யார் சொன்னது நான் அதை எல்லாம் நம்புகிறேன் என்று? ஊடகங்கள் தானே அதையும் சொல்கின்றன. இதை எல்லாம் வாஜ்பாயிடமோ, அத்வானியிடமோ நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா?
நான் வேண்டுமென்றே சொல்லவில்லை. வசுந்தரா ராஜே சிந்தியா சொல்லி இருக்கிறார். நீங்கள் அதீத கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று சொல்லி இருக்கிறார்?
கிடையாது. நான் ஒன்றும் மூடநம்பிக்கை கொண்டவள் இல்லை. இந்த பேட்டியால் நான் மிகுந்த மன உளைச்சல் அடைகிறேன். எல்லா கேள்விகளும் ஊடகங்கள் சொல்கிறது, பத்திரிகைகளில் வந்திருக்கிறது என்று தான் இருக்கிறது. அது உண்மை இல்லை. அப்படி இருந்தால் நான் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
அப்படி என்றால் இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லமுடியுமா? எண் கணிதத்தின் மீது நம்பிக்கை இல்லாத நீங்கள் ஏன் உங்கள் பெயரை மாற்றம் செய்து கொண்டீர்கள் ?
அது என் தனிப்பட்ட விஷயம். அதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. வை.கோபால்சாமி ஏன் வைகோ ஆனார் என்று கேட்பீர்களா ? என் மீது ஊடகங்கள் வைக்கும் எல்லா குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன். என்னைத் தவிர, தமிழ்நாட்டில் எந்த முதல்வரும் இதுபோல் கண்டிப்பாக உழைத்திருக்க முடியாது. இந்த தேர்தலில் ஜெயிக்காததைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் ஜெயிக்க வேண்டிய அவசியம் இல்லையே. என் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளையும் நான் சந்தித்து வருகிறேன். எங்கும் ஒளிந்து ஓடவில்லை.
உங்களின் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் பற்றி....
அதைப்பற்றி எந்தக் கருத்தும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
2006 தேர்தலில் வெற்றி பெறுவீர்களா ?
நான் முன் கூட்டியே சொல்லிவிட்டேன். எனக்கு ஜாதகத்தின் மீது நம்பிக்கை இல்லை. தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பாருங்கள்.
நன்றி.. உங்களை சந்தித்து பேட்டி எடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்..
இது ஒன்றும் மகிழ்ச்சி தரக்கூடிய பேட்டியாக எனக்கு அமையவில்லை. நமஸ்தே !
Thanks vikatan
Thanks vikatan
0 comments:
Post a Comment