ஜனாதிபதி கௌரவ மைத்ரிரிபால சிறிசேன அவர்கள் கடந்த 01ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

எமது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு துறை குறித்து இன்று
கலந்துரையாடப்படுகிறது. தேசிய நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள இடர் முகாமைத்துவ அமைச்சு என்பன மிகுந்த முக்கியத்துவம் பெற்ற விடயங்களாகும். 

இடர் முகாமைத்துவம் பெரும்பாலும் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் ஒரு அமைச்சாகும். தேசிய ஐக்கியம், நல்லிணக்கம் இல்லாத ஒரு நாட்டில் இனங்களுக்கிடையே ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான நிகழ்ச்சித்திட்டம் இல்லையென்றால் அது ஒரு பாரிய அனர்த்தமாகவே இருக்கும். 

உலக நாடுகளில் மொழிப் பிரச்சினை, மதப் பிரச்சினை மற்றும் தொழிநுட்ப முன்னேற்றங்கள் அதிகரித்துள்ள போதும் அபிவிருத்திசார்ந்த பிரச்சினைகள் என ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பும் கூட மொழி, சமயம், கலாசாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து பேச முடியும். உலக வரலாற்றில் இலட்சக்கணக்கான உயிர்ப்பலிகள் ஏற்பட்டு இரத்த ஆறுகள் ஓடிய சோகமான நிகழ்வுகள் குறித்தும் பேச முடியும். 

எமது நாட்டில் உள்ள பிரச்சினை இன்று நேற்று ஏற்பட்ட ஒரு பிரச்சினையல்ல என்பதை நாம் அறிவோம்


1930 முதல் 1980 வரையான எட்டு தசாப்தங்களை எடுத்துக்கொண்டால் சிங்கள, முஸ்லிம் கலவரங்கள் மற்றும் சிங்கள, தமிழ் கலவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

அவற்றின் மூலம் ஏற்பட்ட பொருளாதார அழிவுகளைப் பார்க்கிலும் மிக மோசமாக மக்கள் மத்தியில் ஐக்கியம் சீர்குலைதல், அச்சமும் பீதியும் ஏற்படுதல், சுதந்திரம் ஜனநாயகம் மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதன் காரணமாக சமூகம் சின்னாபின்னமடைந்து போகிறது. 

1930 இல் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் கலவரம் எமது நாட்டு வரலாற்றில் ஒரு மிகப்பெரும் அனர்த்ததமாக பதிவானது. சிங்கள தமிழ் கலவரத்திற்குப் பின்னர் வடக்கு தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஆட்சிக்குவந்த அனைத்துத் தலைவர்களும் தாம் அதிகாரத்திற்கு வருவதற்காக் பயன்படுத்திக்கொண்டது தொடர்பில் எமக்கு நிறைய அனுபவங்கள் உள்ளன.


எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவுக்கும் செல்வநாயகத்திற்குமிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்ற விடவில்லை. 

எமது மதிப்பிற்குரிய தேரர்கள் ரோஸ்மிட் பிளேசில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் முன்னால் போராட்டம் நடத்தினர். பண்டாரநாயக்க தமது வீட்டிலிருந்து வீதிக்கு வந்து அவரது சட்டைப்பையில் இருந்த லைட்டரை எடுத்து மகாசங்கத்தினர் முன்னால் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்;தை அவரே தீவைத்து நீங்கள் எதிர்ப்பதாக இருந்தால் நான் அதனைச் செய்யப்போவதில்லை எனக்கூறினார். 

1965 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டட்லி செல்வநாயகம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்துக்கும் இதேபோன்ற எதிர்ப்புகள் எழுந்தன. டட்லி செல்வநாயகம் ஒப்பந்தமும் இரத்தானது. பிரச்சினைகள் மேலும் மேலும் அதிகரித்தன. நாட்டின் அபிவிருத்தி பாதிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சிக்குவந்த அனைத்து அரசாங்கங்களும் அமைச்சரவையை அமைத்தபோது எத்தனை அமைச்சுக்களை வடக்குக்கும் கிழக்கிற்கும் வழங்கினார்கள் என்ற கேள்வி உள்ளது. அப்பகுதியில் நியாயமான அபிவிருத்திகள் மேற்கேள்ளப்படாமைக்கு இதுவே போதுமான சான்றாகும்.


80 களில் நாட்டில் மிக மோசமான பல பிரச்சினைகள் தலைதூக்கின. 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேயர் துரையப்பா படுகொலையும் அதற்குப் பின்னர் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கறுப்பு ஜுலை கலவரமும் இந்த நாட்டில் ஏற்பட்ட மிகமோசமான துரதிஷ்ட நிகழ்வுகளாகும். பிரபாகரனின் தலைமையில் எல்ரிரிஈ பயங்கரவாதம் உருவான நிலைமையையும் நாம் அறிவோம். நாம் அவற்றுக்கு முகங்கொடுத்துள்ளோம். எனது பொலன்னறுவை மாவட்டத்தில் பல இறந்த உடல்களை தோளில் தூக்கிச்சென்றுள்ளேன். 

எல்லைக் கிராமங்களில் மக்களைக் கண்டபடி வெட்டியும் கொத்தியும் கிராமங்களைச் சீரழித்ததையும் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி யுத்தம் கொழும்பு நகரத்தையும் தெற்கில் மாத்தறை வரையிலும் கண்டி தலதா மாளிகைக்கும் சென்றதை நாம் அறிவோம். 

இந்த மோசமான அனுபவங்களுக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம். ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்தன அன்று இருந்த நிலைமையில் இந்து – லங்கா ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தார். 

இந்த நாட்டில் இந்த பிரச்சினைகளை சாதாரணமாகவும் இலகுவானதாகவும் பார்க்கின்றவர்கள் இருக்கிறார்கள். நாம் வழங்கப்போகும் புதிய அரசியலமைப்பு தீர்வுகளை மலினப்படுத்தும் வகையில் அதனை தரக்குறைவாகப் பேசுவது இந்த நாட்டில் எதிர்காலத்தில் மீண்டும் இரத்த ஆறுகள் ஓடுவதை விரும்புகின்றவர்களாகும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவேண்டும். 

இந்து – லங்கா உடன்படிக்கைக்கு அன்று இந்த நாட்டில் எதிர்ப்புகள் இருந்தன. ஜே ஆர் ஜயவர்த்தனவின் பிரதமர் பிரேமதாச அதனை எதிர்த்தார். அவரது அமைச்சரவை அதனை எதிர்த்தது. நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புக்கு பகலில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து ராஜீவ் காந்தியுடன் ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்த்தன இந்து - லங்கா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இதன் பெறுபேறாக 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு அதன் மூலம் மாகாண சபைகள் முறைமை ஏற்படுத்தப்பட்டது. 

எனினும் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சினை ஒரு தேசிய பிரச்சினையாக மாற்றம் பெற்றது மட்டுமன்றி அது சர்வதேச பிரச்சினையாகவும் மாறியது. யுத்தத்தின் காரணமாக அநேகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். 

 இன்றும்கூட தென்னிந்தியாவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அகதி முகாம்களில் தங்கியுள்ளார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. இது எமது நாட்டுக்கு அபகீர்த்தியாகும். சர்வதேச மாநாடுகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுக்கு முன்னால் சென்று பேசும்போது இது ஒரு அபகீர்த்தி என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


யுத்த காலத்தில் நான் புலிகளின் ஐந்து தாக்குதல்களுக்கு முகங்கொடுத்துள்ளேன். என்னை தாக்குவதற்காக வந்த அனைத்து எல்ரிரிஈ பயங்கரவாதிகளும் இறந்து விட்டனர். பொலன்னறுவையிலும் சிலர் சயனைட் அருந்தி இறந்து விட்டனர். என்னை குண்டுவைத்துத் தாக்குவதற்காக வந்தவர்கள். தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த நாட்டில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச முதல் கிளேன்சி பெர்ணாந்து வரை கடற்படைத் தளபதி முதல் அரசியல்வாதிகள், பாதுகாப்புத் தலைவர்கள் எமது நாட்டின் சிரேஷ்ட படைவீரர்களின் உயிர்த்தியாகங்களின் காரணமாக யுத்தத்தில் பௌதீக ரீதியாக வெற்றி பெற்றோம். 

துப்பாக்கிச் சத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். பிரச்சினை தீர்ந்து விடவில்லை என்பதை நாம் அறிவோம். துப்பாக்கிச் சத்தப் பிரச்சனையை வெற்றிகொண்டபோதும் நாடு பிளவுபடும் என்ற கருத்தை தோற்கடிப்பதற்கு இன்னும் முடியவில்லை. இந்த நாட்டில் ஒரு உண்மையான சமாதானம் ஏற்பட்டுள்ளது என்ற கருத்தில் நான் உடன்படவில்லை. சமாதானம் குறித்த பிரச்சினையை மனச்சாட்சிக்கு ஏற்புடையவாறு பேசுவதற்கு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் இந்த நாட்டை பிளவுபடுத்துவது தொடர்பில் எல்ரிரிஈ அல்லது ஈழம் குறித்து பேசுபவர்களின் கருத்தை தோற்கடிப்பதன் மூலமாகும். புதிய அரசியல்யாப்பு தொடர்பாக நாம் கலந்துரையாடி ஒரு சிறந்த நிலையை அடைந்துள்ளோம். 

பண்டாரநாயக்க யுகம், டட்லி சேனாநாயக்க யுகம், ஜே ஆர் ஜயவர்த்தன யுகம், மற்றும் சந்திரிக்கா யுகத்தில் அரசியல் தீர்வைப்பெற்றுக் கொள்ளும் முயற்சியில் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்களை குறைத்துமதிப்பிட்டு நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

எமது நாட்டில் சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை விதைக்கின்றனர். மதிப்;பிற்குரிய மகாசங்கத்தினரிடத்தில் பிழையான கருத்துக்களை ஏற்படுத்துகின்றனர். நாட்டுக்கு வெளியே உள்ள இலங்கையர்களிடத்தில் இணையத்தளங்களினூடாக பிழையான தகவல்களை வழங்குகின்றனர்.


பாதுகாப்புப்படையினரை பலவீனப்படுத்துகின்றனர். நாட்டைத் துண்டாடுகின்றனர். பௌத்த சமயத்திற்குரிய இடத்தை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர் என்று சொல்கிறார்கள். இவற்றின் மூலம் எதனை எதிர்பார்க்கின்றனர். 

இதன் மூலம் கடந்த காலங்களில் சில தலைவர்கள் அதிகாரத்திற்கு வருவதற்காக இந்த பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டதைப்; போல சில தலைவர்கள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இப் பிரச்சினையிலிருந்து நழுவிச்சென்றதைப் போன்று, எதிர்க்கின்றவர்கள் எதிர்காலத்தில் அதிகாரத்திற்கு வருவதற்காக சந்தர்ப்பவாதிகளாகவும் குறுகிய அரசியல் அபிலாஷைகளுடனும் எத்தகைய சான்றுகளும் இன்றி பேசிவருகின்றனர். 

அவர்கள் எல்லோரும் இந்த நாட்டின் எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமைகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனவேதான் நாம் மிகத் தெளிவாக ஒரு நிலையான தீர்வை வழங்கியுள்ளோம். ஆன்மீக ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து அரசியல் தீர்வுடன் புதிய அரயல்யாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

இந்த பிரச்சினையில் நாம் ஒரு நேர்மையான அரசாங்கமாக செயற்பட்டுவருகிறோம். இதில் அனைத்து தரப்பினரினதும் நேர்மையான அர்ப்பணிப்பு அவசியமாகும். நாம் வழங்கும் தீர்வு அனைவருக்கும் நியாயமானதொரு தீர்வாக இருக்க வேண்டும். அந்தத் தீர்வு இந்த நாட்டின் சிங்கள, தமிழ் என அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வாக இருக்க வேண்டும். 

இந்த பிரச்சிiனை தொடர்பில் பொறுப்புடன் செயற்படும் அனைவரும் இப்பிரச்சினைக்கு உண்மையான தீர்வைப் பெற்றுக்கொண்டு பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையில் செயற்படுவது அவசியமாகும்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றி மக்கள் கருத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தால் மக்கள் கருத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நாட்டில் ஒரு பொதுக்கருத்தைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். 

கட்சி, சமயம் மற்றும் பிரதேச பேதங்களுடன் செயற்படுவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்பது கடந்தகால அனுபவங்களுடன் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினைகுறித்து பேசுகின்ற அனைத்து தரப்புகளும் பிரச்சினை தொடர்பாக பேசுவதைப்போன்று பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக விட்டுக்கொடுப்புடன் செயற்படுவது அவசியமாகும். 

எமக்குத் தேவை அரசியல் வீரர்களல்ல. எமக்குத் தேவை பிரச்சினைகளை நியாயமாகத் தீர்த்துவைக்கும் வீரர்களே.
தேசப்பற்றும் மனிதாபிமானமும் கொண்ட ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். 

அத்தகையதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் விடயத்தில் எதிர்கால அதிகாரம் குறித்த எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு பிரச்சினையைத் தீர்ப்பதை குழப்புவதாயின் அந்த எதிர்பாரப்புகளை வைத்துள்ளவர்களுக்கு இந்த நாட்டின் எதிர்கால ஆட்சியை முன்னெடுக்கின்ற வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை என நன் தெளிவாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.

 எதிர்கால தேர்தல் அதிகாரத்தை எதிர்பார்த்து பிரச்சினையைத் தீர்க்க முயலும் குறுகிய மனப்பான்மையுடன் தான் கடந்த சில தசாப்தங்களாக மிக மோசமான யுத்தநிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. நாட்டை துண்டாடாமல் தெளிவான ஒரு தீர்;வை நோக்கி நாம் செல்ல வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாம் பேசுகின்ற விடயங்கள் குறித்து அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்ததை நான் பார்த்தேன். 

அவர் புதிய அரசியலமைப்பு நாட்டை துண்டாடுவதற்காகவே தயாரிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

 மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்தவர் என்றவகையில் இது தொடர்பாக அவர் முன்வைத்த ஒரு கருத்து எனக்கு நினைவிருக்கிறது. 2009 மே மாதம் அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை செயலாளரிடம் அவர் கூறிய விடயங்கள் எனக்கு நினைவிருக்கிறது. 

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு அவர் தெரிவித்த விடயங்களும் உள்ளன.


எனவே அதிகாரத்தில் இருக்கின்றபோது ஒரு விதத்திலும் அதிகாரம் இல்லாதபோது அதிகாரத்திற்கு வருவதற்காக வேறு விதத்திலும் இந்தப் பிரச்சினையை பயன்படுத்துவதாயின் அது தேசத்தின் துரதிஷ்டமாகும். எனவே இந்த உயர்ந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த நாட்டிலுள்ள படித்தவர்கள், கல்விமான்கள் உள்ளிட்ட அனைவரும் எமது தாய்நாட்டை ஒரு சிறந்த நாடாக ஆக்குவதில் இந்த நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஒத்துழைப்புத்தருமாறு நாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின்போது அப்பிரதேசங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சட்டபூர்வ நிறுவனங்களை அமைப்பதற்கு அன்று பாராளுமன்றத்திற்கு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அன்று நான் அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்தேன். 

சுனாமி நிவாரணச்சபை பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அன்றைய ஜனாதிபதி சுனாமி நிவாரணச்சபை சட்டத்தை பாராளுமன்றத்திற்குக் கொண்டுவந்தபோது எவரும் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. நான் அதனை சமர்ப்பிக்கிறேன் என நான் அன்று கூறினேன். அன்று நான் சுனாமி நிவாரணச்சபை சட்டத்தை முன்வைத்தபோது சிலர் என்னைச்சுற்றி சத்தமிட்டனர்.

எனவே, எமக்கு தேசத்துரோகிகளாக வேண்டியதில்லை. தேசப்பற்றுள்ளவர்களாக ஆவதற்கு இந்த நாட்டில் அனைவரும் ஒரு நியாயமான தீர்வுக்குச் செல்ல வேண்டும். 19 ஆவது திருத்தத்தில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சு என்ற ஒரு புதிய அமைச்சு உருவாக்கப்பட்டது. 

இங்கு சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த நிறுவனத்தினால் ஒரு பயனும் இல்லை எனக்குறிப்பிட்டனர். அத்தகைய நிறுவனங்கள் செயற்படுகின்றபோது எழும் தடைகள் குறித்து அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த நிறுவனங்கள் செயற்படுகின்றபோது வடக்கில் சில தலைவர்களது ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. நான் எப்போதும் கூறுகின்ற விடயம் இந்த நல்லிணக்க கொள்கையைப் பலப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியமாகும் என்பதாகும்.

நான் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனது 50 வருடகால அனுபவத்தில் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு வடக்கிலுள்ள தலைவர்களில் ஒரு சிறந்த தலைவர் சம்பந்தன் என்பது எனது நம்பிக்கையாகும். அப்பாதுத்துறை அமிர்தலிங்கம் ஒரு சிறந்த தலைவர். அவரையும் எல்ரிரிஈ யினர் படுகொலை செய்தனர். 

சம்பந்தன் வடக்குக்கு மட்டுமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றவகையில் ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகிறார். இந்த ஒத்துழைப்பு வடக்கு கிழக்கு அரசியல் தலைவர்களிடமிருந்து எப்போதும் கிடைப்பதில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். 

எமக்கு இருக்கும் பிரச்சினை நாளை இருக்கும் தலைவர்கள் அல்ல. இன்று இருக்கும் தலைவர்கள் யார் என்பதை கண்டறிந்து பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். எனவே பிரச்சினையை காலம் தாழ்த்துவது தேசத்தின் துரதிஷ்டமாகும். பிரச்சினைக்குத் தீர்வை வழங்காது குழப்புவது நாளை பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்குச்செய்யும் ஒரு தேசிய குற்றமாகும்.
சிலர் அதிகார மோகத்தில் விமர்சனங்களை முன்வைக்க முடியும் என்றாலும் நாம் பிரச்சினைகளை விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும். 

அந்த பிரக்ஞையும் அறிவும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன். அறிவுபூர்வமாக பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு நாம் அனைவரும் செயற்பட வேண்டும். நாம் பத்திரிகையாளர் மாநாடுகளை நடத்த முடியும், ஊர்வலங்கள் செல்ல முடியும் என்றாலும் வடக்குக்குச் சென்று அந்த பிரச்சினையை வடக்கு மக்களுடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்கள் எத்தனைபேர் உள்ளனர் என நான் கேட்கிறேன். 27 வருடங்களாக வடக்கில் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து தேசப்பற்றுள்ளவர்கள் என்று கூறிக்கொள்பவர்களிடம் நான் கேட்கிறேன் அந்த தேசப்பற்றுள்ளவர்களை ஒரு முகாமில் போட்டிருந்தால் அந்த முகாமிலிருந்து துப்பாக்கியை எடுப்பதற்கு மட்டுமா நினைப்பீர்கள் எனக்கேட்கிறேன். 

அதைப் பார்க்கிலும் பல விடயங்களை எடுக்க நினைக்கும். அதுதான் உண்மை. எனினும் அந்த மக்கள் 27 வருடங்களாக முகாம்களில் உள்ளனர் அந்தப் பிரச்சினையைத் தீர்க்கச் சென்றால் இங்கு பத்திரிகையாளர் மாநாடுகளை நடத்தி ஊர்வலங்கள் சென்று இராணுவத்திற்கு சொந்தமான இடங்களை பகிர்ந்தளிப்பதாக கூக்குரல் இடுகின்றனர். 

 வடக்கு மக்கள் கோருவது அவர்களுக்குச் சொந்தமான காணிகளையாகும். இதுபற்றி பேசுபவர்கள் அவர்களுக்கு. இத்தகைய நிலை ஏற்பட்டிருக்குமானால், யுத்தத்தினால் அவர்களது சொத்துக்களை இழந்திருப்பார்களானால் அதனைக்கோருவது நியாயமற்றதா என நான் கேட்கிறேன். 

எனவே போலிப் பிரசாரங்களை மேற்கொள்வதை விடுத்து, மக்களை பிழையாக வழிநடத்துவதை விடுத்து, இந்தப் பிரச்சினை குறித்து பிழையான வியாக்கியானங்களை செய்வதை விடுத்து உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

குறிப்பாக இந்த நாட்டின் மகா சங்கத்தினர்களிடம் சிலர் சென்று நாம் நாட்டை துண்டாடுவதாக கூறுகின்றனர். இந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நாங்கள் நிராகரிக்கிறோம். எனவே நாம் எதிர்கால பிள்ளைகள் சமாதானமாக வாழக்கூடிய வகையில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பிரச்சினையை சரியாகப் புரிந்துகொண்டு நியாயமாக செயற்படுவதற்கு ஒன்றுபடுங்கள் என நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். மற்றுமொரு விடயத்தையும் நான் இங்கு கூற வேண்டும். இந்த நாட்களில் சில தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. 

எந்தவொரு பிரச்சினைiயும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள முன்வாருங்கள் என அந்த தொழிற்சங்க தலைவர்கள் அனைவரிடமும் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நாம் எப்போதும் பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளை தீர்க்கின்ற ஒரு அரசாங்கம் ஆகும். ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலைகளைச் செய்து நாம் பிரச்சினைகளை தீர்ப்பதில்லை. எமது கொள்கை அதுதான். 

நாம் அகிம்சையை பின்பற்றும் அரசாங்கம். எனவே வீதிகளை மறைத்து, ஆர்ப்பாட்டங்களைச் செய்து பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்த வேண்டாம். இதன் மூலம் அப்பாவி பொது மக்களே பாதிக்கப்படுகின்றனர். இந்த நாட்டில் உள்ள தனவந்தர்களுக்கு இது ஒரு பிரச்சினை அல்ல. அவர்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் தனியார் வைத்தியசாலைகள் உள்ளன. 

வாகனப் பிரச்சினைகளும் இல்லை. ஏனைய எல்லா துறைகளிலும் இவ்வாறுதான். இவை எல்லாவற்றிலும் சாதாரணப் பொது மக்களே பாதிக்கப்படுகின்றனர்.

எனவே அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் பிரச்சினைகள் இருக்குமானால் நாம் ஒரு ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் குறித்த அமைச்சருடன் கலந்துரையாடுங்கள். அதன் மூலம் தீர்வுகள் கிடைக்கவில்லையாயின் அதற்காக குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தை மூலம் அவற்றைத் தீர்ப்பதற்கு நான் தயாராக உள்ளேன். அப்போதும் பிரச்சினைகள் இருக்குமானால் அதில் நான் நேரடியாக தலையிடவும் தயாராக உள்ளேன். 

நாம் அனைவருடைய உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு அரசாங்கம். எனவே பொது மக்களுக்காக இந்த பிரச்சினைகளையும் முறையாகத் தீர்த்துக்கொள்வோம் என இறுதியாக நான் குறிப்பிட விரும்புகிறேன்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
2016.12.02

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com