பிரித்தானிய வெளியேற்றம்(Brexit) நடந்ததும் நடக்கப்போவதும்:வி.இ.குகநாதன்

ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றிலேயே முழு நாடாளவியரீதியில் நடாத்தப்பட்ட மூன்றாவது கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என மேலதிக நான்கு வீத வாக்குகளால் மக்கள் தீர்மானித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பு முடிவிற்கெதிராகப் பல ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்பன நடாத்தப்பட்டு இவ்வாக்களிப்பு சட்டரீதியற்றது என்றும் இரண்டாவது வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்படும்போதும்,  இக் கோரிக்கைகள் சாத்தியமற்றவையாகவே தோன்றுகின்றன. இந்த முடிவிற்கு (Brexit) ஆதரவாக சில நியாயமான காரணங்கள் காணப்படவே செய்கின்றன. அவற்றில் சில பின்வருவன.



1. ஒன்றியமானது ஒரு சனநாயக அமைப்பாகச் செயற்படவில்லை. ஒன்றியப்  பாராளுமன்றத்திற்குப் புறம்பாக ஆணையம் ஒன்று காணப்படுகிறது. இந்த ஆணையத்தின் அதிகாரிகளாலேயே பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இவர்கள் எந்தவிதத்திலும் மக்களால் தெரிவுசெய்யப்படாதவர்களாகவிருப்பதுடன் மக்களிற்குப் பொறுப்புக் கூறவேண்டிய தேவையற்றவர்கள்.



2. ஒற்றைச் சந்தைமுறையானது பொருளாதார வளர்ச்சி, மலிவுவிலையில் பொருட்கள்,சேவைகள் எனக்கூறப்பட்டாலும் நடைமுறையில் இந்த சந்தைமுறையானது பெரிய வணிக நிறுவனங்களிற்கே பயனளிக்கின்றது. நுட்பமாகப்பார்த்தால் பெரும் பல்தேசிய கம்பனிகளினால் சிறிய நடுத்தர தொழில்கள் அழிவடைவதற்கும், பெரும் பணக்காரரிற்கும் ஏனையோரிற்குமான இடைவெளியினை அதிகரிப்பதற்குமே  பயன்படுகிறது.



3. நாடாளவியரீதியில் மக்களின் உரிமையினையும் இறைமையினையும் ஒன்றியமானது பறிக்கின்றது. அதாவது கிரீஸ் நாட்டு மக்களின் விருப்பத்தில் தெரிவான இடதுசாரி அரசினைக்  குழப்புவதாகட்டும், பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர் உரிமைகளை ஒடுக்குவதாகட்டும் , சாதாரண மக்களின் உரிமையினைப் பாதிக்கும் வகையிலேயே ஒன்றியமானது செயற்பட்டுவருகின்றது. இவ்வாறான நியாயமான காரணங்கள் காணப்பட்டபோதும் வாக்களித்தவர்களில் மிகப் பெரும்பாலானோர் மேற்குறித்த காரணங்கள் எதனையும் கருத்திற்கொள்ளவில்லை. மாறாக அவர்களது ஒரே பிரச்சனை குடிவரவு தொடர்பான பிரச்சனையே. அதாவது கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வருபவர்களால் தமது வேலைவாய்ப்பு, பாடசாலைவசதி, மருத்துவவசதி போன்றவை பாதிக்கப்படுகின்றன என்ற ஒரு பொய்யான மாயத்தோற்றத்தினால் குடிவரவாளர்கள் மீதான வெறுப்பிலேயே இந்த முடிவினை எடுத்திருந்தனர்.  (உதாரணமாக இன்றைய வேலையின்மை வீதம் வெறும் ஐந்து வீதமாகவே உள்ளது. ஒப்பீட்டுரீதியில் இது ஒன்றும் மோசமான நிலையன்று.)



வாக்கெடுப்பிற்கான பின்னனி:



பொதுவாக இவ்வாக்கெடுப்பிற்கான கோரிக்கைகள் பல வருடங்களாகக் காணப்படுகின்றபோதும் போலந்து, ரூமேனியா போன்ற நாடுகளின் சுதந்திரமான நடமாற்றம்(free movement) மூலம் கணிசமானோர் இங்கு வரத்தொடங்கியதும் இவ்வாறான வெளியேற்றக்கோரிக்கை தீவிரம் பெற்றது. இதனை இவ்வாண்டில் நடாத்தியதற்கு டேவிட் கமரோனின் சென்ற பொதுத்தேர்தல் வாக்குறுதி காரணமாகக் கூறப்படுகிறது. இதில் உண்மையுள்ளபோதும், இன்னுமொரு ஆழமான விடயம் உள்ளது. அண்மைக்காலத்தில் முதலாளித்துவம் தோற்றுவித்த அடங்காப் பசியுடனான நுகர்வுப் பழக்கம் காரணமான பொருளாதார நெருக்கடிகள், சமூகநலக்திட்டங்கள் மீதான இறுக்கம், பொய்யான காரணங்களைக் கூறித் தமது இலாப ஆதிக்க நோக்கங்களிற்காக மேற்கொள்ளப்பட்ட ஈராக் போன்ற போரின் பக்கவிளைவுகள் போன்ற காரணங்களால் அதிகார வர்க்கத்தின் மீது மக்கள் பெரும் கோபமடைந்திருந்தனர். இந்த கோபத்தினைத்  திட்டமிட்டரீதியில் தமது ஊதுகுழலான ஊடகங்கள் மூலம் குடிவரவாளர்கள் மீது அதிகார வர்க்கமானது திருப்பியிருந்தது. இவ்வாறே இந்த துவேசமானது மக்களிடம் மிகவும் நுட்பமாகக் கட்டமைக்கப்பட்டது. இவ்வாறு வளர்த்துவிடப்பட்ட கோபத்திற்கான ஒரு வடிகாலாகவே இவ் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. அதாவது மக்கள் அதிகாரவர்க்கம் மீதுகொண்டுள்ள நியாயமான கோபங்காரணமாக  இந்த ஆட்சிமுறை மீதான நம்பிக்கையினை இழப்பதற்குப்  பதிலாக ஒரு வாக்களிப்புடன் திருப்திப்படட்டும் என்பதே இத் திட்டத்தின் மூல உபாயமாகும்.
இவ் வாக்கெடுப்பிற்கான பிரச்சாரமும் முற்றுமுழுதாக நியாயமான காரணங்களைப் புறக்கணித்து முற்றுமுழுதாகப் பொய்யான பயமுறுத்தல் பாணியிலேயே மேற்கொள்ளப்பட்டது. உதாரணமாக வெளியேற்றத்திற்கு ஆதரவான வாராந்தம் 350 மில்லியன் பவுண்ஸ் ஒன்றியத்திற்கு செல்லும் பணமானது சுகாதாரசேவைக்குத் (NHS) திருப்பப்படும் என்ற பிரச்சாரமானது தவறு என்று அவர்களாலேயே தேர்தலின்பின்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.


  அதேபோன்று நீடித்திருக்கவேண்டும் என்ற தரப்பினர் வெளியேறினால் உடனேயே அவசர பாதீடு (Emergency budget)மூலம் வரிவிதிப்பு அதிகரிக்கும் என்ற பிரச்சாரமும் இப்போது நடைபெறவில்லை. இவ்வாறான பொய்ப்பிரச்சாரங்களிற்கு மத்தியிலேயே வாக்களிப்பு முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்தது என்ன?



பிரித்தானியா இப்பபோது அட்டவணை விதி 50 (article50)இற்கமைய அறிவித்தல் கொடுத்து இரண்டு வருடங்களில் ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும். அதுவரை பிரித்தானியா ஒன்றியத்தின் தீர்மானம் எடுத்தற் பொறிமுறையில் பங்குகொள்ளமுடியாது. மற்றும்படி இதே நிலையே தொடரும். இதன்பின் பிரித்தானியாவிற்கு பின்வரும் மூன்று வழிகளில் ஒரு தெரிவினை மேற்கொள்ளலாம்.



1.மொத்தமான வெளியேற்றம்- ஒற்றைச் சந்தை உட்பட முற்றாக வெளியேறி ஒன்றிய நாடுகளுடன் உலக வர்த்தக நிறுவன WTO (world trade organisation) விதிகளிற்கமைய வர்த்தகம் புரிதல். இது அரசாங்கத்தை பின்னின்று இயக்கும் பல்தேசிய கம்பனிகளிற்கு பாதகமானது என்பதால் இது நடைமுறைக்கு வராது.



2. சுவீஸ் மாதிரி( The Swiss model)- இதன்மூலம் EEA இலிருந்தும் வெளியேறி இருபக்க ஒப்பந்தங்கள் மூலம் குறிப்பிட்ட சில துறைகளிற்கு மட்டும் ஒற்றைச்சந்தையினை பேணல். இந்த முறையும் நிதித்துறை வர்த்தகத்தினை பெரும்பாலும் பாதிக்கும். குறிப்பாக இங்கிலாந்தினை அடித்தளமாகக்கொண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் வியாபாரம் செய்யும் பெருமளவான அமெரிக்க, மற்றும் ஆசிய நிதிநிறுவனங்கள் இந்த மாதிரியால் பாதிப்படையும். எனவே இம்முறைக்கான சாத்தியமும் குறைவு.



3. நோர்வே மாதிரி(The Norweign model)- இதன்படி EEAஒரு அங்கமாக தொடர்ந்து அங்கம் வகிப்பதன்மூலம் பொருட்கள்- சேவைகள், மூலதனம், மற்றும் நபர்களின் தடையற்ற நடமாட்டம். இதற்கமைய பெருமளவு நிதியினைத் தொடர்ந்தும் ஒன்றியத்திற்கு பிரித்தானியா செலுத்தவேண்டும்.



எனவே மேற்குறித்த நோர்வே மாதிரி அல்லது இதனையொத்த ஒரு புது மாதிரி மூலம் பிரித்தானியா தொடரந்தும் ஒன்றியத்துடன் செயற்படும். இதற்கான பேச்சுவார்த்தைகள் பிரித்தானியாவிற்கு கடினமானதாகவே அமையப்போகிறது. இதற்கு பிரான்சிலும் ஜேர்மனியிலும் விரைவில் வரப்போகும் பொதுத்தேர்தலும் ஒரு காரணமாகக் காணப்படுகிறது. வாக்கெடுப்பிற்கு முன்னராக கமரோன் நடாத்திய பேச்சுவார்த்தையின்போது பிரித்தானியாவின் பக்கமிருந்த பந்து இனி எதிர்காலப் பேச்சுவார்த்தையின்போது எதிர்த்தரப்பான ஒன்றியத்திடமே இருக்கப்போகிறது. எதுஎவ்வாறாயினும் கட்டுப்பாடற்ற ஆட்களின் நடமாட்டம் தொடரவே போகின்றது. அதாவது தமது பிரச்சனைகளிற்கான உண்மையான காரணங்களை விடுத்து கிழக்கு ஐரோப்பியர் போன்ற குடிவரவாளர்கள் மீதான பழிபோடப்படுவதற்கான வாய்ப்பு தொடர்ந்தும் காணப்படப்போகின்றது.

இறுதி விளைவு

இவ் வாக்கெடுப்பின் இறுதி விளைவானது மக்களிடையே மறைந்திருந்த நிறத்துவேசம்-இனத்துவேசம் போன்ற வெறுப்புணர்வுகளிற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகக் கருதி வெறுப்புணர்வு அதிகரிப்பிற்கே வழிகோலியுள்ளது. வெளியேற்றத்தின் பின்னரான பொருளாதாரச் சிக்கல்களிற்கு தயாரில்லாமலிருந்து முதலாளித்துவம் எவ்வாறு தடுமாறுகிறதோ அதேபோன்று இடதுசாரிகள், மனிதவுரிமை ஆர்வலர்களும் இந்த துவேச நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாமற் தடுமாறியே உள்ளனர். முடிவாகக் கூறின் மக்களின் எந்தவித எதிர்பார்ப்பும் இந்த வெளியேற்ற முடிவு மூலமாக அடையப்படப்போவதில்லை. மாறாக மக்களிற்கிடையேயான பிளவுகளை அதிகரிப்பதன் மூலம் ஆளும் தரப்பு தமது நலன்களைத் தொடர்ந்தும் பேணிவரப்போகின்றது. பெருமளவு மக்கள் வாக்களிப்புடன் தமது கடமை முடிந்துவிட்டதாகவிருக்க, சிறு பகுதியினர் இலகுவான இலக்கான(soft targrt) சக பாமர மனிதர்கள் மீது துவேசத்தினை பிரயோகித்து வரப்போகிறார்கள். அதாவது நிலமை மேலும் முன்னரைவிடச் சிக்கலாக மாறிவரப்போகின்றது.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com