“நீல ஹரித லஸ்ஸன லங்கா“ (நீலப் பசுமை அழகிய இலங்கை) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எதிர்வரும் நான்கு வருடங்களில் சூழல் நட்புடைய பத்தாயிரம் பசுமைக் கிராமங்களை நாடு பூராகவும் அமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (01) முற்பகல் கேகாலை பரகம்மன சணச கல்விச்சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரத்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பூகோள வெப்பமாதல் இரண்டு பாகை செல்சியசை பார்க்கிலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உலக நாடுகளின் தலைவர்கள் உடன்பட்டிருந்தனர்.
அந்த உடன்படிக்கைக்கேற்ப இலங்கையின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள கருத்திட்டங்களில் சூழல் நற்புடைய பத்தாயிரம் பசுமைக்கிராமங்களை அமைக்கும் கருத்திட்டம் முக்கிய இடம் வகிக்கின்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இன்று உலகிலுள்ள எல்லா அரச தலைவர்களுடையவும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட எல்லா நிறுவனங்களுடையவும் முக்கிய கவனம் இயற்கை வளங்களைப் பாதுகாத்து போசிப்பது தொடர்பாகவே உள்ளதாகத் தெரிவித்தார்.
சூழல் அழிவுறும் அபாயத்திலிருந்து எதிர்காலத் தலைமுறையை மீட்கும்வகையில் பத்தாயிரம் பசுமைக் கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டத்திற்கு எல்லோரும் செயற்திறமான பங்களிப்பை வழங்குவது தேசத்தின் எதிர்காலத்திற்கான பொறுப்பை நிறைவேற்றுவதாக அமையும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்பாட்டாளர்களுக்கான விருதுகளும் இதன்போது ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.
அரநாயக்க மண்சரிவில் மரணமடைந்த சணச நிறுவனத்தின் பொருளாதார அபிவிருத்தி அதிகாரிக்காக வழங்கப்பட்ட நட்டஈட்டுத்தொகைக்கான காசோலையும் இதன்போது ஜனாதிபதியினால் அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது.
சணச உறுப்பினர்களுக்காக நடாத்தப்பட்ட செயலமர்வையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
சணச கல்விச்சபை வளாகத்தில் ஜனாதிபதி அவர்களினால் சந்தனமரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் ஏனைய சமயத்தலைவர்களும் அமைச்சர்காளான எஸ் பி திசாநாயக, ரஞ்சித் சியாம்பலாபிட்டிய , சபரகவுமுக மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத் இராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாச, பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment