சிறுவர் உழைப்பைச் சுரண்டி சிறுவர் துன்புறுத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனை அவர்கள் தொடர்பாக சமூகத்திற்கு வெளிப்படுத்துவதேயாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடக நிறுவனங்களுக்கு கூடுதலான பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
உலக சிறுவர் தொழிலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு இன்று (22) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக சிறுவர் தொழிலுக்கு எதிரான தின தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கேற்ப செயற்படும் ஒரு அரசாங்கம் என்றவகையில் சிறுவர்களைப் பாதுகாத்துப் போசிப்பதற்கு அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் சிறுவர் துன்புறுத்தல்களை தவிர்ப்பதற்கு சர்வதேச கடப்பாடுகளுக்கேற்ப செயற்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சிறுவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு பொதுக்காரணமாக அமையும் வறுமையை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்களில் இருந்து எமது பிள்ளைகைளைப் பாதுகாப்பதற்கு சட்டதிட்டங்களை வகுக்கும் அதேநேரம் ஏற்கெனவேயுள்ள சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் சட்டத்தினால் மட்டும் அதனை நிறைவேற்ற முடியாது என்றும் குறிப்பிடட ஜனாதிபதி, சமூகத்தில் பொறுப்புள்ள அனைவரும் அது தொடர்பாக மிகுந்த தெளிவுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உலக சிறுவர் தொழிலுக்கெதிரான தினம் யூன் மாதம் 12ஆம் திகதியாகும். இவ்வருட உலக சிறுவர் தொழிலுக்கு எதிரான தினத்தின் கருப்பொருள் “உற்பத்தி செயன்முறையினூடாக சிறுவர் தொழிலை ஒழிப்போம்“ என்பதாகும்.
இந்த நோக்கத்தை அடைந்து கொள்ளும்வகையில் தொழில் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் நடவடிக்கைகள் பிரிவு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளைச் செய்தல், சமூகத்தை விழிப்பூட்டுதல், சிறுவர் தொழிலில் இடர் நிலைமைகளைத் தவிர்த்தல் ஆகியதுறைகளின் கீழ் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து சிறுவர் தொழிலை ஒழித்துக் கட்டும் உறுதி மொழியில் கைச்சாத்திடும் நிகழ்வும் இதன்போது ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச தொழில் தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான பணிப்பாளர் டோங் லீன் லீ அவர்களினால் இலங்கையை சிறுவர் தொழிலிலற்ற ஒரு வலையமாக ஆக்குவதற்கான உறுதிமொழி ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டதுடன் அவ்வுறுதி மொழியில் ஜனாதிபதி அவர்கள் கைச்சாத்திட்டார்.
இலங்கையை சிறுவர் தொழிலற்ற ஒரு வலையமாக ஆக்குவதற்கான உறுதிமொழியை குறுஞ்செய்தியூடாக சமூகமயப்படுத்துவதை ஆரம்பிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு டி ஜே செனவிரத்ன, அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன. சந்திராணி பண்டார, இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்களும் ஜனாதிபதியின் செயலாளர் பி பீ அபேகோன் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க ஆகயோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
0 comments:
Post a Comment