அழிவுச் சின்னத்தை, அறிவுச் சின்னமாக கட்டியெழுப்பினேன்-டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணத்தின் அறிவுக்களஞ்சியமாக விளங்கிய யாழ். நூலகம், அப்போதிருந்த ஆட்சியாளர்களால் எரித்துச் சாம்பராக்கப்பட்ட நாள் இன்றாகும்.


சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான புத்தகங்களை தனது கருவறையில் சுமந்து ஆசியாவிலேயே பெரும் அறிவுப் பொக்கிஷமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணத்தின் நூலகம் 1981ஆம் ஆண்டு இதேநாள் எரியூட்டப்;பட்டது.


கல்வியில் மேம்பட்டிருந்த யாழ்ப்பாண மக்களின் விடுதலை உணர்வுகளை அடக்கவும், கல்வி அறிவை சிதைக்கவும் திட்டமிட்ட வன்முறையாளர்கள், நூலகத்திற்கு தீ வைத்து மகிழ்ந்திருந்தாலும், அந்தச் சம்பவம் ஏற்கனவே விடுதலை வேட்கையோடு போராடத் துணிந்திருந்த அத்தனை தமிழ் இளைஞர், யுவதிகளுக்கும் போராட்டத்தின் அவசியத்தை அதிகப்படுத்தும் உந்துசக்தியை ஏற்படுத்தியது.


1998ஆம் ஆண்டு யாழ். நகரசபை எமது ஆளுகைக்குள் இல்லாதபோதும், 10 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிடம் யாழ்ப்பாண மக்கள் ஒப்படைத்தபோது சுமார் 16 ஆண்டுகளாக எரிந்து சிதைவடைந்திருந்த நிலையில் காட்சியளித்த யாழ்ப்பாண நூலகத்தை மீண்டும் புத்தெழுச்சியுடனும், புதுப்பொலிவுடனும் கட்டியெழுப்ப நாங்கள் முயற்சித்தோம்.


அன்றைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்ததால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தப் பெரு முயற்சியை முன்னெடுத்தேன்.


எமது முயற்சியை இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்போர் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து எமது முயற்சியை விமர்சித்து, தடுக்க முற்பட்டார்கள்.


எரியூட்டப்பட்டுக் கிடக்கும் நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்பாமல் அதை அழிவுச் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்கள்.


யாழ்ப்பாண நூலகம் எரிந்த நிலையில் அது அழிவுச் சின்னமாகக் காட்சியளிப்பதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.


அந்த நூலகத்தை புத்தெழுச்சியுடனும், புதுப்பொலிவுடனும் எமது மாணவச் செல்வங்களுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் பயனுள்ளதாகக் கட்டியெழுப்பி, அதை யாழ்ப்பாணத்தின் அடையாளமாகவும், அறிவுச் சின்னமாகவும் தூக்கி நிறுத்துவதன் ஊடாகவே, அதை எரித்தவர்களுக்கு பதிலடியைக் கொடுக்க முடியும்; என்றும் கூறி, அதன் புனர் நிர்மானப் பணிகளைத் திட்டமிட்டு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருடன் கலந்துரையாடி யாழ். நூலகத்தை உயிர்ப்பித்தேன்.


இன்று ஆயிரக்கணக்கானவர்கள் அறிவை வளர்த்து பயன்பெறுகின்றார்கள்.


இப்போது யாழ்ப்பாண நூலகம் கம்பீரத்துடன் நகரின் மத்தியில் தலை நிமிர்த்தி நிற்கின்றது.


தென் இலங்கையிலிருந்து சிங்கள மக்களும், வெளிநாடுகளிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகின்ற வெளிநாட்டுப் பிரஜைகளும், புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளும் சாம்பரிலிருந்து மீண்டெழுந்த பீனிக்ஸ் பறவைபோல் யாழ்ப்பாண நூலகத்தின் தோற்றத்தைக் கண்டு பெருமை கொள்கின்றார்கள்.


நான் தொடர்ந்தும் முன்னெடுத்துவரும் ஆக்கத்திற்கான அரசியல் பணியின் பெருஞ் சாட்சியாக யாழ்ப்பாண நூலகமும் காட்சி தருகின்றதானது, தமிழ் மக்களுக்கு நான் காட்டி நிற்கும் பாதையானது சரியானது என்பதையும், அது அழிவுகளற்றது என்பதையும் உணர்த்தி நிற்கின்றது.


இதனிடையே அழிவு யுத்தத்திற்குப் பின்னர் படையினர் யுத்தச் சின்னங்களையும், அழிவுச் சின்னங்களையும் பாதுகாத்து அவற்றை கண்காட்சிப் படுத்திக்கொண்டிருக்கும் இடிபாடுகளையும், யுத்தச் சின்னங்களையும் அரசாங்கம் அகற்ற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.


அந்த இடங்களில் அழிவுச் சின்னங்கள் அகற்றப்பட்டு, அவை ஆக்க சின்னங்களாகவும், பயன்படுகின்ற கட்டிடங்களாகவும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பிரேரணையையும் கொண்டுவந்திருக்கின்றேன்.


யுத்த அழிவுச் சின்னங்களைப் படையினர் காட்சிப்படுத்துவதானது, தமிழ் மக்களுக்கு யுத்த வடுக்களை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றன.


இந்த நிலையானது, நாம் முன்னெடுக்கும் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு பெரும் தடையாகவே இருக்கும். எனவே யுத்த அழிவுகளுக்கு முகம் கொடுத்த, யாழ். நூலகம், கண்டி தலதா மாளிகை, கொழும்பு மத்திய வங்கி ஆகியவை அழிவுச் சின்னங்களாகக் காட்சிப்படுத்தி பாதுகாக்கப்படவில்லை.


அவை மீண்டும் புத்தெழுச்சியோடு புனர்நிர்மாணிக்கப்பட்டிருப்பதை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழர் பகுதிகளிலுள்ள யுத்த சின்னங்கள் அகற்றப்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும்.


About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com