கடந்த இரு நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்தில் 5ஆயிரத்து எண்ணுற்றி நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இவ்வாறான அனர்த்தத்திற்கு எமது மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையில் அவர்களுக்கு உடனடி உதவிகள் வழங்கப்பட வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் –
யாழ்ப்பாணத்தில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 17 வீடுகள் முற்றாகவும் 172 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் இதனால் யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு, யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி, காரைநகர், பருத்தித்துறை, மருதங்கேணி, தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய், கரவெட்டி, ஊர்காவற்றுறை, சண்டிலிப்பாய், வேலனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மதிப்பீடு செய்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் அவசரகால நிலையில் கடமையாற்றவும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அவசர செயற்பாடுகள் அவசியமாகும்.
அரச அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், சமூக அக்கறையுள்ள எமது இளைஞர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு உதவ வேண்டும்.
சமைத்த உணவு வழங்குதல், சுத்தமான குடி நீர் வழங்கள், பாதுகாப்பான தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுப்பது என்பதை உடனடியாக செய்ய வேண்டும். நாட்டின் ஏனைய பகுதிகளில் இதுபோன்று ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அந்தந்த பகுதிகளுக்குரிய அமைச்சர்கள், அரச அதிகாரிகள் முன்னின்று செய்கின்றார்கள்.
நான் முன்னர் அமைச்சராக இருந்தபோது, இதுபோன்ற அனர்த்தம் ஏற்படுகின்றபோது, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று பாதிப்புக்களை பார்வையிட்டும், உரிய அரச அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பும், ஆலோசனையும் வழங்கியும், மக்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன்.
துரதிஷ்டவசமாக எமது மக்கள் இயற்கை அனர்த்தத்திற்கு பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களாகின்றபோதும், புதிய அரசை ஆட்சிபீடமேற்றியது தாமே என்று கூறிக்கொண்டு அரசுடன் இணக்க அரசியல் நடத்தி பதவிகளையும் பெற்றுக் கொண்டிருப்பவர்கள் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று பார்வையிடவும் இல்லை.
மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்கள் என்றவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக எவ்வாறான உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதையும் கிடைக்கச் செய்ய முன்வரவும் இல்லை.
மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் தீர்வு கிடைக்கும்வரை அபிவிருத்தியோ, உதவிகளோ அவசியமில்லை என்று அரசியல் வியாக்கியானம் கூறிக்கொண்டிருக்காமல், மக்களின் அவசரத்தையும், தேவையையும் மனதில் கொண்டு மனிதாபிமானத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் மக்களுக்கு பணியாற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment