பணம் காய்க்கும் சுவிஸிற்கு 35 இலட்சம் கொடுத்து வரும் இளைஞர்கள் சிறைகளில் வாடும் அவலம்.

சுவிட்சர்லாந்தில் அப்பிள் பழங்கள் மட்டுமல்ல பணமும் மரத்தில் காய்கிறது, விரும்பியவாறு பிடிங்கி கொள்ளலாம் என்ற ஒரு மாயை தோற்றத்தையே இலங்கையில் உள்ள பலரும் கற்பனை பண்ணிக்கொள்கின்றனர்.



இதனால் தான் 38 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து பல இளைஞர்கள் சுவிட்சர்லாந்து சிறைச்சாலைகளில் தமது எதிர்காலத்தை தொலைத்து விட்டு வாடிக்கொண்டிருக்கின்றனர்.


சில இளைஞர்கள் ஏமாற்று பேர்வழிகளான முகவர்களின் கைகளில் சிக்கி இறந்து போகின்றனர்.


இந்த அவலங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து விடுமுறையில் செல்பவர்கள் அங்கு போடும் போலி ஆட்டங்களும் ஒரு காரணமாகும்.



வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்கு செல்பவர்களில் பலர் வட்டிக்கு பணம் பெற்றே செல்கின்றனர். இதனை ஊரில் இருக்கும் உறவினர்களுக்கும் அயலவர்களுக்கும் மறைத்து போடும் ஆட்டங்களால் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று விட்டால் மிக இலகுவாக மரத்தில் பணத்தை பிடுங்கி எடுத்து விடலாம் என ஊரில் உள்ளவர்கள் நம்புகின்றனர்.


பல இளைஞர்கள் கல்வியை இடைநடுவில் கைவிட்டு வெளிநாடுகளுக்கு வருகின்றனர். பலர் தாம் செய்யும் தொழிலை கூட கைவிட்டு வருகின்றனர்.



1990ஆம் ஆண்டு காலப்பகுதி அல்லது அதற்கு முற்பட்ட காலத்தில் வந்தவர்கள் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் நன்றாக உழைத்தனர். உறவினர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்தனர் என்பது உண்மைதான். ஆனால் இப்போது அந்த நிலைமை அறவே கிடையாது. இந்த உண்மைகளை மறைத்து 35இலட்சம் ரூபாவை தாருங்கள் சுவிட்சர்லாந்தில் இறக்கி விடுகிறோம் என சட்டவிரோத ஆட்கடத்தல் காரர்களான முகவர்களின் பேச்சை நம்பிய பலர் இன்று சிறைகளில் வாடுகின்றனர். நாடு கடத்தப்போகும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.



சில முகவர்கள் துருக்கி வழியாக சுவிட்சர்லாந்தில் கொண்டு வந்து விடுகின்றனர். சுவிட்சர்லாந்தில் காலடி வைத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் முகவருக்கு கொடுத்த 35 இலட்சம் ரூபாவை உழைத்து விடலாம் என நம்புகின்றனர். ஆனால் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்சம் கோரிய பின்னர் தான் தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்கின்றனர்.


சிலர் சுவிட்சர்லாந்திற்கு வரும் வழியிலேயே இறந்து போகின்றனர். அவ்வாறு ஒரு சம்பவம் அண்மையில் நடைபெற்றுள்ளது.



சுவிட்சர்லாந்து செல்வதற்காக துருக்கிக்கு அழைத்து வரப்பட்ட முல்லைத்தீவை சேர்ந்த காண்டீபன் என்ற இளைஞர் துருக்கியில் உள்ள ஆட்கடத்தல் முகவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு மரணமாகியுள்ளார்.


இலங்கையிலிருந்து ஆட்களை கடத்தி வரும் முகவர்கள் துருக்கியில் உள்ள முகவர்களிடம் ஒப்படைக்கின்றனர். அவர்கள் கடல்மார்க்கமாக அல்லது விமான மூலம் சுவிட்சர்லாந்திற்கு கடத்தி வருகின்றனர்.



காண்டீபனுடன் மேலும் 5 தமிழ் இளைஞர்கள் துருக்கியில் உள்ள முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இதற்கு முதல் அனுப்பிய ஒரு தொகுதியினரின் பணத்தை இலங்கை முகவர் துருக்கியில் உள்ள முகவருக்கு கொடுக்காததால் காண்டீபனுடன் சென்ற 5 தமிழ் இளைஞர்களையும் பிடித்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர். சித்திரவதை செய்யும் போது அலறும் சத்தத்தை தொலைபேசியில் ஊடக இலங்கை முகவருக்கு போட்டு காட்டி உரிய பணத்தை கொடுக்காவிட்டால் இந்த இளைஞர்களை கொலை செய்யப்போவதாக எச்சரித்துள்ளனர்.



வெளிநாடுகளுக்கு என முகவர்களால் கொண்டுவரப்படும் இளைஞர்களை இடைநடுவில் சித்திரவதை செய்வது வழமைதான் என பலரும் கூறுகின்றனர். பெண்கள் என்றால் முகவர்கள் அவர்களை தவறாக பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தும் சம்பவங்களும் இடம்பெறுவது வழமை.
முகவர்களால் அழைத்து வரப்படும் இளைஞர்களை ரஷ்யா, துருக்கி போன்ற நாடுகளில் வைத்து கொண்டு அவர்களை சித்திரவதை செய்வார்கள். பணத்தை தந்தால் தான் விடுவோம் இல்லையேல் அவர்களின் காதை கையை வெட்டி விடுவோம் என உறவினர்களுக்கு எச்சரிப்பார்கள். வேறு வழியின்றி தமது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக வெஸ்ரேன் யூனியன் வங்கி ஊடாக பணத்தை அனுப்பிய சம்பவங்களும் பல உண்டு.


இதேபோன்றுதான் காண்டீபன் என்ற இளைஞரையும் அவருடன் வந்த ஏனைய 5 இளைஞர்களையும் துருக்கியில் உள்ள முகவர்கள் சித்திரவதை செய்துள்ளனர். சிலரின் உடலை கீறி உப்பு மற்றும் மிளகாய் தூள்களை போட்டுள்ளனர். ஆணுறுப்பை வெட்டி உப்பு பெற்றோல் மிளகாய் தூள் போன்றவற்றை போட்டுள்ளனர்.
இந்த சித்திரவதைகளால் காண்டீபன் என்ற இளைஞர்கள் உயிரிழந்திருக்கிறார். ஏனையவர்கள் மயக்கமான நிலையில் சித்திரவதை செய்த முகவர்கள் கைவிட்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் துருக்கி பொலிஸார் அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவர்கள் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் தலா 38 இலட்சம் ரூபா பணத்தை முகவர்களுக்கு கொடுத்தே சுவிட்சர்லாந்து செல்கிறோம் என்ற கற்பனைகளுடன் வந்தார்கள்.



காண்டீபன் இறந்த செய்தி கேள்வி உற்ற அவரின் தாயார் முல்லைத்தீவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் எடுத்த முயற்சியால் காண்டீபனின் சடலம் முல்லைத்தீவுக்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.



வெளிநாட்டு மோகத்தால் 35 இலட்சத்தை மட்டுமல்ல அக்குடும்பம் தாயையும் மகனையும் இழந்திருக்கிறது. அவர்கள் கடன்பட்டே அப்பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது. அந்த 35 இலட்சத்தை வைத்து தொழில் ஒன்றை செய்திருந்தால் இந்த அவலம் நிகழ்ந்திருக்காது.



சுவிட்சர்லாந்தில் கொண்டு வந்து இறக்கி விட்டால் போதும் முகவருக்கு கொடுத்த பணத்தை மிக இலகுவாக உழைத்து விடலாம் என பலரும் நம்புகின்றனர்.



சுவிட்சர்லாந்திற்கு வந்து அண்மையில் அகதி தஞ்சம் கோரிய அனைவரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.



இவர்களில் சுமார் 15 தமிழ் இளைஞர்கள் சூரிச் விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.


இவர்களில் ஒருவர் பிரதீபன் பாலகிருஷ்ணன் என்பவர். 20.02.1992ஆம் ஆண்டு பிறந்தவர். 24 வயது. இவர் கடந்த ஒரு வருடத்திற்குள் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்சம் கோரியிருந்தார். தம்மை இராணுவம் கைது செய்து சித்திரவதை செய்ததாகவும் தமக்கு இலங்கையில் உயிராபத்து என்றும் வாக்குமூலம் வழங்கியிருந்தார். அவர் அளித்த வாக்கு மூலம் பொய் என கூறி அவரின் அகதி தஞ்ச கோரிக்கையை நிராகரித்த குடிவரவு திணைக்களம் நாடு கடத்துவதற்காக சிறையில் அடைத்து வைத்துள்ளது.



இந்த சிறையில் இருக்கும் இன்னுமொரு இளைஞர் தவரூபன் நிலோஜன். 01.01.1995ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு இப்போது வயது 21 ஆகும். இவர் அளித்த வாக்கு மூலத்தில் தன்னை விடுதலைப்புலிகள் பிடித்து சென்று யுத்தத்தில் ஈடுபடுத்தியதாகவும் யுத்தம் முடிந்த பின்னர் இராணுவம் தன்னை பிடித்து சித்திரவதை செய்ததாகவும் விடுதலையான பின்னரும் இராணுவத்தால் தனது உயிருக்கு ஆபத்து என தெரிவித்திருந்தார்.


யாழ்ப்பாண நகரில் வசித்த இந்த இளைஞருக்கு யுத்தம் முடிந்த காலத்தில் 14வயதாகும். யாழ். நகரில் இருந்த சிறுவனை விடுதலைப்புலிகள் பிடித்து செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் இராணுவம் அவரை கைது செய்ததற்கோ சித்திரவதை செய்ததற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்றும் சுவிட்சர்லாந்து குடிவரவு திணைக்களம் கூறியுள்ளது. இதனால் இந்த இளைஞரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என குடிவரவு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.



இவர்களை போன்று சுமார் 15 தமிழ் இளைஞர்கள் சிறையில் உள்ளனர். இவர்களில் இருவர் இளம் பெண்கள். இவர்கள் அனைவரும் 35 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையை முகவர்களுக்கு கொடுத்து இங்கு வந்தவர்கள்.


இது தவிர சுவிட்சர்லாந்தின் 26 மாநிலங்களிலும் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் சுமார் 600 தமிழ் இளைஞர்கள் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் படிப்படியாக நாடு கடத்தப்பட உள்ளனர். சுவிட்சர்லாந்தில் 4 அல்லது 5 வருடங்கள் இருந்தவர்கள் கூட அவர்களின் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.



இவ்வாறு அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பலர் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக அண்மையில் சுவிஸ் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுவிஸ் குடிவரவு துறை அலுவலகத்தின் ஒப்புதலின் பேரில் பாசல் மாகாணத்தை சேர்ந்த ஆலோசனைக் குழு ஒன்று அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது.



இதில், ‘சுவிஸ் நாடு முழுவதும் சுமார் 76,000 வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக’ தெரியவந்துள்ளது.



மேலும், இந்த எண்ணிக்கையானது மாறுபட வாய்ப்புள்ளதாகவும், உத்தேசமாக நாடு முழுவதும் 50,000 முதல் 90,000 வெளிநாட்டினர்கள் வரை சட்டவிரோதமாக தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்டு தாய்நாடுகளுக்கு திரும்ப முடியாதவர்களே அதிகளவில் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர் என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



லண்டன் பிரான்ஸ் போன்ற நாடுகளில் தலைமறைவாக நீண்டகாலத்திற்கு வாழ முடியும். ஆனால் சுவிட்சர்லாந்தில் அவ்வாறு வாழ முடியாது. தலையிடி காச்சல் என மருந்து எடுப்பதாக இருந்தால் கூட குடும்ப வைத்தியர் ஊடாகவே எதனையும் செய்ய முடியும். மருத்துவ காப்புறுதி செய்தவர்கள் மட்டுமே சிகிச்சை பெற முடியும். சட்டவிரோதமாக தலைமறைவாக வாழ்பவர்கள் வைத்தியரிடம் மருந்து எடுக்க செல்ல முடியாது. இப்படி சிறிய விடயங்களுக்கு கூட சுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கான உரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.



எனவே அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாக வாழலாம் என எண்ணமுடியாது.
சுவிட்சர்லாந்து மட்டுமல்ல ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இலங்கையிலிருந்து வரும் அகதிகளை ஏற்க மறுத்து வருகின்றன.



யுத்தம் நடைபெறும் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா, லிபியா போன்ற நாடுகளின் அகதிகளின் விடயங்களிலேயே ஐரோப்பிய நாடுகள் கரிசனை காட்டி வருகின்றன.


பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோத குடியேறிகளை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றன.



ஐரோப்பிய நாடுகளுக்கு துருக்கி ஊடகவே அகதிகள் வருகின்றனர். இதனால் அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியுடன் ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் செய்துள்ளது.


இதற்காக துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியம் சில சலுகைகளை வழங்கியுள்ளது. அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு வராமல் தடுப்பதற்காக துருக்கிக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் முக்கியமான ஒன்று துருக்கி குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யும் சலுகையாகும்.
கிரேக்கத்துக்குள் வந்த குடியேறிகளை துருக்கி திரும்ப எடுத்துக்கொள்வதற்கு பதிலாக துருக்கிக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது.



இது ஒரு வர்த்தக உடன்பாடு. கிரேக்கத்திற்கு வரும் குடியேறிகளை திருப்பி எடுத்துக்கொள்ளவும், மனிதக்கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் துருக்கி உடன்பட்டதற்கு கைம்மாறாக துருக்கிக்கு நிதி அளிப்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்துடன் அது இணையவும் விசா இல்லாமல் பயணிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.



ஐரோப்பிய ஒன்றியத்துடன் துருக்கி செய்து கொண்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் போது இலங்கை அகதிகளும் துருக்கி ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு வருவது தடுக்கப்படலாம்.


ஆனால் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் வேறு ஆபத்தான பயண மார்க்கங்களை கண்டு பிடிப்பார்கள்.
வெளிநாட்டு மோகம் இருக்கும் வரை ஆட்கடத்தல் மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.



இரா.துரைரத்தினம்

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com