அதேவேளை பணிப்பெண்கள் சிலர் அங்கு மரணமடைந்து உயிரற்ற உடலாக நாடு திரும்பும் வேதனைக்குரிய முடிவும் ஏற்படுகிறது.
இலங்கையிலிருந்து இருபது வருடங்களுக்கு முன்னர் பணிப்பெண் வேலைக்கென சவூதிக்குச் சென்ற பெண்ணொருவர் அங்கேயே மரணமடைந்துள்ளார். அப்பெண்ணின் சடலம் கடந்த வாரம் இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளது.
இலங்கையிலிருந்து செல்கின்ற வீட்டுப் பணிப்பெண்கள் கொடுமைகளுக்கு உள்ளாகின்ற சம்பவங்கள் சவூதியிலேயே அடிக்கடி நிகழ்கின்றன.
உடலெங்கும் ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் பணிப்பெண்கள் நாடு திரும்பிய சம்பவங்கள் ஒன்றிரண்டு பதிவாகியிருக்கின்றன.
சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதற்கான தழும்புகளுடன் பல பெண்கள் இலங்கைக்குத் திரும்பியிருக்கின்றனர். சிலர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றுள்ளன.
வீட்டு எஜமானர்களால் கொடுமைப்படுத்தப்படும் பணிப்பெண்கள் இங்கு வந்து கூறுகின்ற அனுபவங்கள் பயங்கரம் நிறைந்தவையாக இருக்கின்றன. எஜமானன், எஜமானி ஆகிய இருவராலும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக சவூதி சென்று திரும்பிய பணிப்பெண்கள் பலர் கூறியிருக்கின்றனர்.
குடும்பத்தின் வறுமையைப் போக்கிக் கொள்வதற்காக பல இடங்களிலும் கடன்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்குப் பணம் செலுத்தி சவூதிக்குத் தொழிலுக்குச் செல்லும் பெண்களுக்கு நேருகின்ற கொடுமை உண்மையிலேயே பரிதாபமானதுதான்.
அங்கு கொடுமை தாங்காது தொழிலை இடைநடுவில் கைவிட்டுவிட்டு இங்கு வந்து சேரும் பெண்கள் பலர், தாங்கள் பெற்ற கடனையே திருப்பிச் செலுத்த முடியாத கஷ்டமான நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
இவர்களைப் பொறுத்தவரை நெருக்கடியில் நிரந்தரமாகவே வீழ்ந்தவர்களாக ஆகி விடுகின்றனர். ஆயுள் முழுக்க கடனாளியாகவே இவர்கள் துன்பப்பட வேண்டியுள்ளது.
நாடு திரும்பும் பணிப்பெண்களைத் தவிர சவூதியில் உள்ள இலங்கைத் துதரகத்திலும் பலர் தஞ்சமடைகின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பொறுத்த வரை இதுவொரு இக்கட்டான நிலைமையாகும்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண் வேலைக்குச் செல்வதென்பது அச்சத்துக்குரியதாக உள்ளமை ஒருபுறமிருக்க, வெளிநாட்டு வேலைக்கு பெண்கள் செல்வதால் அவர்களது குடும்பத்தில் ஏற்படுகின்ற சிக்கல்கள் இப்போதெல்லாம் சமூக சீரழிவாக உருவெடுத்திருப்பதையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
சவூதியில் பின்பற்றப்படுகின்ற சட்ட திட்டங்கள் தவறென்றோ அல்லது சரியானதென்றோ விவாதம் நடத்துவது இங்கு அவசியமற்றது; அந்நாட்டின் சட்டதிட்டங்களை விமர்சிப்பது எமக்குத் தேவையற்ற விடயம்; அது முறையானதுமல்ல; அதனால் பயன் விளையப் போவதுமில்லை.
இன்னொரு நாட்டில் வருடக்கணக்கில் தொழில் புரியச் செல்லும் ஒருவர் தனக்குரிய பாதுகாப்புகளை முன்கூட்டியே திட்டமிடுவது மிகவும் அவசியமாகும்.
அந்நாட்டின் சட்டதிட்டங்கள் எவ்வாறானவை? அங்குள்ள தண்டனை முறைகள் எவ்வாறானவை? அந்நாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள் கடந்த காலத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகள்
எவ்வாறானவை? இவற்றையெல்லாவற்றையும் எதிர்கொள்வது எம்மால் முடிந்த காரியமா?
இவ்வாறான வினாக்களுக்கெல்லாம் உரிய உறுதியான பதிலைத் தேடிய பின்னரே சவூதிக்கோ அல்லது ஏனைய நாடுகளுக்கோ பணிப்பெண் தொழிலுக்குப் புறப்படுவது சாலச் சிறந்ததாகும்.
கிண்ணியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனைக்கு உள்ளாகி தலை துண்டிக்கப்பட்டு கொலையுண்ட சம்பவம் எமக்கெல்லாம் நினைவிருக்கலாம்.
இந்த யுவதி உண்மையிலேயே குற்றம் இழைத்தாரா? அல்லது இப்பெண்ணின் அறிவுக்கெட்டாமல் தவறுதலாக சம்பந்தப்பட்ட குழந்தையின் மரணம் சம்பவித்ததா என்பதற்கு இன்னுமே தெளிவான முடிவு கிடையாது.
இத்தண்டனை தொடர்பாக உலகெங்கும் இருந்து கண்டனக் குரல்கள் ஒலித்தன. எனினும் சவூதி தரப்பிலிருந்து எந்தவொரு உணர்வும் வெளிப்படவில்லை. ஏனெனில் அந்நாட்டின் சட்டத்தின் தன்மை அவ்வாறானது. அது பற்றி விமர்சிப்பது எமக்கு முக்கியமல்ல.
நாம் எந்தவொரு நாட்டிலும் கால் பதிக்கும் போது அந்நாட்டின் சட்டதிட்டங்களைப் பற்றி ஓரளவுக்கேனும் அறிந்திருப்பது முக்கியம். அதேவேளை அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வதும் முக்கியம். அந்நாட்டின் சட்டதிட்டங்களை மீறிய பின்னர் அந்நாட்டைக் குறை சொல்வதனால் ஆகப் போவது எதுவுமில்லை.
எமது நாட்டின் பணிப்பெண்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளை மேற்சொன்ன கோணத்தில் அணுகுவதே பொருத்தமானதாகும்.
இவ்விடயத்தைப் பொறுத்த வரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் பெரும் தவறு இழைக்கின்றனர். பணம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளும் அவர்கள், எதுவிதமான முன்யோசனைகளுமின்றி பலரையும் அங்கு அனுப்பி வைக்கின்றனர். பணிப்பெண்களின் துன்பத்துக்கும் தொழில் முகவர்களே காரணமாகின்றனர்.
இது ஒருபுறமிருக்க இவ்விடயத்தில் அரசாங்கமும் உதாசீனமாக இருந்து விட முடியாது. தொழில் முகவர்களுக்குக் கடிவாளம் போட வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு தொடர்பாக பெண்கள் மத்தியில் அறிவூட்ட வேண்டியதும் அவசியமாகிறது.
0 comments:
Post a Comment