இலங்கையில் தமிழ் அரசியல்வாதியொருவரின் படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனறழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான நீதிமன்ற காவல் ஏப்ரல் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட கொலை தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரும் புதன்கிழமை மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களது காவல் ஏப்ரல் 20ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.
சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வை சேர்ந்த எம். கலீல் ஆகியோரே இக்கொலை தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களாவர்.
அதே நேரம் சிவநேசதுரை சந்திரகாந்தன் தன்னை பிணையில் செல்ல அனுமதி கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இம் மனு மீதான விசாரணையும் ஏற்கனவே 28ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள்ளேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இந்த கொலை இடம் பெற்றிருந்த போதிலும் விசாரணைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சில மாதங்களில் குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 4 பேர் கைதாகி தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டிருந்த சிவநேசதுரை சந்திகாந்தன் 2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக தெரிவாகி 2012 வரை அந்த பதவியை வகித்தார்.
0 comments:
Post a Comment