தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையை தவறாக அர்த்தப்படுத்தக் கூடாது. அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாவகச்சேரி மறவன்புலவிலுள்ள வீடொன்றிலிருந்து கடந்த புதன்கிழமை தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. அதேதினத்தன்று மன்னாரிலும் ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
இதனால் தேசிய பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. புலிகள் மீளவும் ஒருங்கிணைகின்றார்கள் போன்ற விமர்சன கருத்துக்கள் மேலெழுந்திருந்தன.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
தமிழ் மக்கள் வன்முறையை விரும்பவில்லை. உதாசீனம் செய்கின்றார்கள். அதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவ்விதமான விடயங்களை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்கள் வன்முறையை எதிர்க்கின்றார்கள்.
தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை தவறாக அர்த்தப்படுத்தக்கூடாது. அது குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முழுமையாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.
தற்போது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்.
நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினைக்கு நிரந்தரமான, நியாயமான, நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வை அமைதியான முறையில் பெற்றுக் கொள்வதிலேயே மக்கள் உறுதியாகவுள்ளனர்.
ஆகவே, தமிழ் மக்கள் வன்முறையை ஒருபோதும் கையிலெடுக்க மாட்டார்கள். வன்முறையை அவர்கள் விரும்பவில்லை என்பதை மீண்டும் உறுதிபடக் கூறுகின்றேன் என்றார்.
0 comments:
Post a Comment