யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக
நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'மேற்படி வீட்டுத்திட்டம் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனாலேயே இந்தக் கடிதத்தை எழுதவேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
பின்வரும் தகவல்களை வழங்குமாறு இக்கடிதத்தின் மூலம், கோரிக்கை விடுக்கின்றேன்.
01. இந்த வீட்டுத்திட்டத்துக்காக தெரிவுசெய்யப்பட்ட 15 கேள்விக்காரர்கள் பற்றிய விவரங்களும் இந்தக் கேள்விப்பத்திரம் தொடர்பில், அவர்கள் சமர்ப்பித்தவை பற்றிய விவரங்களும்.
02. பின்னர் திருத்தம் செய்யப்பட்ட கேள்விப்பத்திரத்துக்கான நியமங்கள்.
03. முன்மொழிவுக்காக வேண்டுதல் விடுத்த 8 கேள்விக்காரர்களின் விவரங்கள்.
04. கேள்விக்காரர்களின் நிதி வசதி ஏற்புடைய கேள்விக்கான பிணை என்பவற்றுக்கான நியமங்கள்.
05. கட்டுமானத்துக்கான மொத்தச் செலவு தொடர்பாக ஆர்ஸெலர் மிட்டல் மற்றும் கொன்ஸோட்டியம் ஆகியன சமர்ப்பித்த முன்மொழிவுககான வேண்டுதல்கள்.
06. இந்தக் கேள்விகள், திறக்கப்பட்ட திகதி மற்றும் திறக்கும்போது, இருந்தத் தரப்பினரின் பட்டியல்.
07. ஆர்ஸெலர் மிட்டலுடனான நிதி ஏற்பாடுகள் தொடர்பான விவரங்கள்.
08. ஆர்ஸெலர் மிட்டலின் கட்டுமான முன்மொழிவின் உண்மையான செலவு.
09. ஏனைய கேள்வியாளர்களின் ஒப்பீட்டளவான கட்டுமானச் செலவு.
10. வடக்கு - கிழக்கில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 10 ஆயிரம் வீடுகளுக்கான ஒப்பீட்டுச் செலவு.
11. முன்மொழியப்பட்ட கட்டுமானத்துக்கான உத்தரவாதக் காலம்.
12. முன்மொழியப்பட்ட கட்டுமானத்தின் சூழலுடன் இயைபுறும் தன்மை பற்றிய அறிக்கைகள்.
13. முன்மொழியப்பட்ட கட்டுமானத்தின் உறுதித்தன்மை பற்றிய அறிக்கைகள்.
14. இந்தக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படவுள்ள உள்ளூர் முகவர் தொடர்பான தகவல்.
15. முன்மொழியப்பட்ட கட்டுமானத்தின் அமுலாக்கம் தொடர்பான தகவல் (உதாரணமாக உள்ளூர்த் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவார்களா?)
தனது கடிதத்துக்கான பதிலை, எதிர்வரும் 21ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்குமாறும் அவர், கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment