மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பெண்ணொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்தார்கள் எனும் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் 19ம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரை நேற்றுமுன் தினம் இரவு வீடு ஒன்றுக்கு பணியாளர் தேவையெனக் கூறி முச்சக்கர வண்டியொன்றில் காத்தான்குடி கர்பலா கிராமத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளான 38 வயதுடைய குறித்த பெண் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கொழும்பிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் புலனாய்வுப்பிரிவில் கடமையாற்றுவதாகவும் மற்றையவர் மட்டக்களப்பிலுள்ள பொலிஸ் நிலையத்தில் புலனாய்வுப்பிரிவில் கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் விசாரணை இடம் பெற்றுவருவதாகவும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இவர்களிருவரையும் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
0 comments:
Post a Comment