புதிய அரசியலமைப்பில் உள்ளடங்கப்பட வேண்டிய முஸ்லிம் சமுதாயத்தின் பரிந்துரைகளை வடிவமைப்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் தலைமையில் ஒன்றிணைந்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றுகூடி புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டிய முஸ்லிம் சமூகத்துக்கான பரிந்துரைகள், ஆலோசனைகள் பற்றி தீர்மானிக்கவுள்ளனர்.
இதற்கென எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் பௌஸியின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஒன்றுகூடி முஸ்லிம் சமூகம் தொடர்பான பரிந்துரைகளை ஆராயவுள்ளனர்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி கருத்துத் தெரிவிக்கையில்
‘புதிய அரசியலமைப்பில் முஸ்லிம் சமூகம் தொடர்பாக உள்வாங்கப்பட வேண்டிய விடயங்களை முஸ்லிம் புத்திஜீவிகள் சிவில் சமூக அமைப்புகள், நலன்புரி அமைப்புகள் என பல்வேறு அமைப்புகள் புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவிடம் முன்வைத்துள்ளன.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளின்றி ஒன்றிணைந்து சமூகம் சார்பான பரிந்துரைகளை முன்வைக்கத் தீர்மானித்துள்ளோம். புதிய அரசியல் அமைப்பில் சமூகம் சார்ந்த பல விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டியுள்ளன.
முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக கடந்த காலம் முதல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு அரசியலமைப்பின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். சமூகத்தின் உரிமைகள் பாதுகாப்பு, கல்வி, கலாசாரம், பொருளாதாரம் என்பனவற்றுக்கு உத்தரவாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
எமது முஸ்லிம் தனியாள் சட்டத்தின் திருத்தங்களும் உள்வாங்கப்பட வேண்டியுள்ளன.
இவற்றை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான நாம் ஒன்றுகூடி கலந்துரையாடி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் இவ்விவகாரத்தில் மிகவும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இது எமது சமுதாயத்தின் விடிவுக்கு சிறந்ததோர் வாய்ப்பாக அமையும் என்றார்.
0 comments:
Post a Comment