இறுதிக்கட்ட போருக்குப்பின்னர் 2013ம் ஆண்டு வவுனியா மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் 47.30 சதுர கிலோமீற்றர்கள் (4730 ஹெக்டயர்) காணி அபகரிக்கப்பட்டு, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று (01.04.2016) நடைபெற்ற மாவட்ட எல்லைகள் மீள்நிர்ணய குழுக்கூட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்குறித்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வவுனியா பிரதேச செயலக பிரிவிலிருந்து 19.40 சதுர கிலோமீற்றர்களும், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிலிருந்து 4.40 சதுர கிலோமீற்றர்களும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிலிருந்து 23.6 சதுர கிலோமீற்றர்களுமாக மொத்தமாக 47.30 சதுர கிலோமீற்றர் காணிகள் (4730 ஹெக்டயர்) பறிக்கப்பட்டு, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுடன் சேர்க்கப்பட்டு அதன் மொத்த நிலப்பரப்பு 235.90 சதுர கிலோமீற்றர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது 2009ம் ஆண்டளவில் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பளவில் 9.6 வீதமாகவிருந்த வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவு 2013ம் ஆண்டளவில் 11.99 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிரவும், வவுனியா மாவட்டத்தின் தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தினருக்கென்று பெருந்தொகையான காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன. எமது போராட்டத்தின் ஆணிவேரே நிலம், கலாசாரம், மொழி உள்ளடங்கிய சுயநிர்ணய உரிமைக்கு நாம் உரித்துடையவர்கள் என்பதை அடையாளப்படுத்துவதற்கும் அதனைத் தக்கவைப்பதற்குமானதாகும்.
ஆகவே, வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டதன் பிற்பாடே எமது பிரதேசங்களில் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென நாம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம். நில அபகரிப்பினால் அத்துமீறிய குடியேற்றங்கள் மாவட்டத்தில் அதிகரித்துள்ளன. கொக்கச்சான்குளம் கலாபோவஸ்வெவ ஆகவும், மணலாறு வெலிஓயாவாகவும் பெயர் மாற்றப்பட்டுள்ளதால், எல்லைகள் மீள்நிர்ணயம் செய்வதிலும், வட்டாரங்களை பிரிப்பதிலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளன.
வெலிஓயா ஒன்பது கிராம சேவையாளர் பிரிவுடன் உத்தியோகபூர்வமற்ற பிரதேச செயலகமாக இயங்கிவருகின்றது. இந்நிலையில் அதன் நான்கு வட்டாரங்கள் சார்பாக கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்று உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் தாம் தனியாக பிரிந்து வெலிஓயா பிரிவுடன் செல்லப்போவதாக பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் உள்ளனர். தற்பொழுது வெலிஓயாவுக்குள் வரும் நான்கு வட்டாரங்களையும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையுடன் இணைக்குமாறு சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் கோருகின்றனர்.
நிலத்தொடர்பற்று வட்டாரங்களை இணைக்க முடியாதென இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைவாக வெலிஓயாவுக்கான வட்டார எல்லைகளை வவுனியாவுடனா? அல்லது முல்லைத்தீவுடனா? அல்லது அநுராதபுரத்துடனா? இணைப்பது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட எல்லை நிர்ணயகுழு கூட்டத்தில் வெலிஓயாவுக்குள் உள்ளடங்கும் வட்டார எல்லைகளை பேசித்தீர்மானிப்பதென முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இவற்றுக்கு காரணம், தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிப்பு, அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் என்பன போருக்கு முன்னரும் பின்னரும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் எல்லைகள் மீள்நிர்ணம் செய்யப்படுவது தமிழர் இனவிகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி வடகிழக்கை நிரந்தரமாக பிரிப்பதற்கான முயற்சிகளாகவும் இந்த நடவடிக்கைகள் அமையும்.
எனவே நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வுக்குப்பின்னரே வடக்கு கிழக்கில் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வது தான் இவற்றுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment