வட மாகாணத்தை வாட்டி எடுத்துக் கொண்டிருப்பது சூரியனின் வெப்பம் மட்டுமல்ல, இளைஞர் யுவதிகளின் தென்னிலங்கை கலாச்சார மோகமும் தான்.
ஆம் சொல்வதற்கே கொஞ்சம் கசப்பான விடையமாக இருந்தாலும், நடப்பவை அப்படியான நிகழ்வுகளாக தான் இருக்கின்றன.
எப்படி இருந்த நாம் இப்படியாகிட்டோம் என்பது போல கடந்த 2009ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த ஒரு தலைமுறையினர் கட்டிக்காத்த அத்தனையும் கட்டுடைக்கப்பட்டு, இன்று நிலமைகள் தலைகீழாக மாறிவிட்டன.
தட்டிக் கேட்கவும் ஆள் இல்லை. தடுத்து நிறுத்தவும், திராணி இல்லாதவர்களாக வடபுலத்து பெரியோர்கள் இருக்கிறார்கள்.
ஒரு காலகட்டத்தில் இருந்து, ஒழுக்க விழுமியங்கள் தற்பொழுது வட மாகாணத்தில் மெல்ல அழிந்து போய் வருகின்றன என்கிறார்கள் அங்குள்ள சமூக நலன்விரும்பிகள்.
இதற்கு காரணம், தனிமையும் தென்னிலங்கை இளைஞர், யுவதிகளின் செயற்பாடுகளின் மீதான மோகங்களும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், இதர தேவைகளுக்காகவும், செல்லும் இளையோர்களில் சிலர் இவ்வாறான கலாச்சார சீரழிவுகளுக்கு தம்மை உட்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பா கடற்கரையோரங்கள், சனநடமாட்டமற்ற இடங்கள் என்பனவற்றை தமது மறைவிடமாக கொள்ளும் இவர்கள் அங்கு தங்கள் மோகத்தினை தீர்த்துக் கொள்ள அடைக்களம் புகுந்து கொள்கின்றார்கள்.
இன்னும் சிலர் சிறுவர்கள், வயோதிபர்கள் தமது பொழுது போக்கிற்காக செல்லும் பூங்காக்களிலும் இவ்வாறான அசம்பாவித நிகழ்வுகளில் ஈடுபடுகின்றார்கள்.
காலத்தின் மாற்றத்தில் கலாச்சாரத்தின் சீரழிவுகள் எல்லையில்லாமல் சென்று கொண்டிருப்பதனை எண்ணி வேதனை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
நாட்டில் நடந்து முடிந்த கொடிய யுத்தத்தின் பின்னர் தமிழர்களிடம் இருந்து இனவாதிகளால் அவர்களின் கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றை தான் பறித்தெடுக்க முடியாமல் இருந்தது. ஆனால் தற்பொழுது அதுவும் கூட இன்று எம்மை விட்டு கைநழுவிச் சென்று கொண்டிருக்கின்றன.
யுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாணத்திற்குள் நுழைத்த நாச கிருமிகள் திட்டமிட்டவகையில் போதைப்பொருட்களையும், நவநாகரீக நடத்தைகள் என்ற பேர்வழியில், மாற்றத்தினையும் கொண்டுவந்தனர். அன்று தொடங்கிற்று தமிழினத்தின் அழிவுகாலம்.
ஒரு இனத்தினை அழிக்க வேண்டுமாயின் அவ்வினத்தின் ஆணிவேரான கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் மீது கை வைத்தாலே போதும் என்பதை நமக்கு எதிரியாக விளங்குபவர்கள் கருத்தில் வைத்திருக்கின்றார்கள்.
அதை அவர்கள் சரியாகவும், நேர்த்தியாகவும் செய்து கொண்டே இருக்கிறார்கள். அதற்கு நமது இளைய தலைமுறையினரும் இடம்கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
எமது பண்பாட்டிலும் கலச்சாரத்திலும் இல்லாத, ஒவ்வாத செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். இது தமிழினத்தின் தேய்வின் கடைசி நிலை. இன்றைய தலைமுறையினர் எது சுதந்திரம் என்று நினைத்து செய்து கொண்டிருக்கின்றார்களோ அதுவே தமிழினத்தின் அழிவு. அது இளைய தலைமுறையினரின் திசைமாறிய வாழ்க்கை மட்டுமல்ல, எதிர்கால தமிழினத்தின் அழிவும் கூட.
0 comments:
Post a Comment