புனர்வாழ்வு அளிக்குமாறு வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் 18/03 வெள்ளிக்கிழமை சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவார் என தாம் எதிர்பார்த்ததாகவும், அவ்வாறன சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினால் தாம் புனர்வாழ்வு என்ற முடிவிற்கு வந்துள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதி ஒருவர் தெரிவித்தார்.
சட்டமா அதிபர்திணைக்களத்திற்கு வழங்கியுள்ள கடிதத்தில் ஒருவருடகால புனர்வாழ்வும் மற்றும் ஒரு மாதகால தண்டனையும் பெறுவதற்கு தாம் தயாராக உள்ளதாக அரசியல் கைதிகள் தங்களது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
புனர்வாழ்வு வழங்குமாறு வலியுறுத்தி சிறைச்சாலை ஆணையாளர் ஊடாக சட்டமா அதிபர்திணைக்களத்திற்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றின் பிரதியை ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பிவைக்கவுள்ளதாக அரசியல் கைதி மேலும் கூறினார்.
தமது விடுதலையை வலியுறுத்தி தாம் மூன்று தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டபோது ஜனாதிபதி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தம்மை ஏமாற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கைதிகளாக தாம் சிறைகளின் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் தமது குடும்பங்கள் பொருளாதாரம், பாதுகாப்பு எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.
அத்தோடு, பாடசாலைக்குச் செல்லும் தமது பிள்ளைகள் சக மாணவர்களுடன் மகிழ்ச்சியாக பேசமுடியாத நிலையில் காணப்படுவதாகவும், தனது தந்தை சிறையில் உள்ளதை எண்ணி தமது பிள்ளைகள் தினமும் மனவேதனை அடைவதாக அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாக நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி நவாவி, இவர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
அத்துடன் குறித்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்ற நிலையில் புனர்வாழ்வோ அல்லது பிணை அடிப்படையில் விடுதலையோ வழங்க முடியாது என்றும் சட்டத்தரணி நவாவி எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment