யுத்தம் மற்றும் பல்வேறு சூழல்களினால் பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிறைவேற்றக்கூடிய செயற்பாடுகளில் பெண்கள் இயக்கங்கள்செயற்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் கணவன்மாரை இழந்து குடும்பப் பாரத்தைப் பொறுப்பேற்ற பெண்கள், போரினால் அங்கவீனர்கள் ஆக்கப்பட்ட பெண்கள், புனர்வாழ்வு பெற்ற பின்னர் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பெண் போராளிகள் உள்ளார்கள்.
ஆனால் அவர்களில் பலரைச் சமூகம் வெறுத்தொதுக்கும் ஒரு நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான பெண்களின் மேம்பாட்டுக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.
பாதிப்புற்ற பெண்களின் விமோசனமானது அவர்களைச் சமூக நீரோட்டத்தில் மீண்டும் இணைத்துக் கொள்வதில்த்தான் தங்கியுள்ளது.
அவர்களின் நேரத்தையும் காலத்தையும் நன்மை பயக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுத்துவதன் மூலமே அவர்களின் மனச்சுமையை குறைக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை எல்லோரும் முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் வடமாகாண சபை போரினால் நலிவுற்ற பெண்களின் தேவைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளது.
வடமாகாண சபை பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், அவர்களின் நாளாந்த தேவைகள், குடியிருப்பு வசதிகள், பாதுகாப்பு போன்ற பல விடயங்களில் அனைத்து உதவிகளையும் நல்குமாறு அரசாங்கத்திற்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
அத்துடன் உள்நாட்டில் இயங்கக் கூடிய பெண்கள் கிராமிய அபிவிருத்தி சங்கங்களை ஊக்குவித்து அவை மூலமாகச் சுயதொழில் அபிவிருத்திகள், மற்றும் உள்ளூர் உற்பத்திகள், குடிசைக் கைத்தொழில்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலமாக இவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யதிட்டமிட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment