உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவை வென்றதில்லை என்ற பாகிஸ்தான் சோகம் தொடர்கிறது. இன்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் பங்கேற்ற உலக் கோப்பை இருபது ஓவர் போட்டி இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய கேட்பன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். முன்னதாகக் கொல்கத்தாவில் பெய்த மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. ஓவர்களும் 18 ஆகக் குறைக்கப்பட்டது.
இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் ரன் குவிக்கத் திணறினர். முதல் 5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 24 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடக்க வீரர் அஹமது ஷெஸாத் 28 பந்துகளில் 25 ரன்கள் எடுத்துப் பூம்ரா பந்துவீச்சில் ஜடேஜாவிடம் 'கேட்ச்' ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ஷர்ஸீல் கான் 17 ரன்களிலும், கேப்டன் அப்ரிதி 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் இணைந்த உமர் அக்மலும், சோயிப் மாலிக்கும் பாகிஸ்தான் அணியின் சரிவை தடுத்து நிறுத்தியதோடு, வேகமாகவும் ரன்களைக் குவித்தனர்.
இந்த ஜோடி 14-வது ஓவரில் 15 ரன்களும், 15-வது ஓவரில் 13 ரன்களும் எடுத்தனர். உமர் அக்மல் 16 பந்துகளில் 22 ரன்களும், சோயிப் மாலிக் 16 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்தது.
இறுதியில் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா தரப்பில் பந்து வீசிய நெஹ்ரா, பூம்ரா, ஜடேஜா, ரெய்னா, பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
எளிதான இலக்காக இருந்தாலும், இந்தியாவின் தொடக்கம் சிறப்பானதாக இருக்கவில்லை. தொடக்க வீரர் ரோஹித் சர்மா 10 ரன்களில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீரரான தவன் ஆரம்பம் முதலே தடுமாறி வந்தார். 15 பந்துகளைச் சந்தித்த அவர் 6 ரன்களில் அனுபவ வீரர் முகம்மது சாமியின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ரெய்னா, அடுத்தப் பந்திலேயே 'க்ளீன் போல்டு' ஆக மைதானமே அமைதியானது.
அடுத்து உள்ள வந்த யுவராஜ், கோலியுடன் இணைந்து அணியின் சரிவை தடுத்து நிறுத்தினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது.
மாலிக் வீசிய 11-வது ஓவரில் கோலி ஒரு சிக்ஸரரையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார்.
இந்நிலையில் வகாப் ரியாஸ் வீசிய ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டிய யுவராஜ், அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். யுவராஜ்-கோலி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் குவித்தது.
அபராமாக விளையாடிய விராத் கோலி 37 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். அவரது ரன் கணக்கில் 7 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
இந்திய கேப்டன் தோனி வழக்கம் போல வெற்றி ரன்னை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். அதில் முகம்மது இர்ஃபான் பந்தில் லாங்-ஆப் திசையில் விளாசிய சிக்ஸரும் அடங்கும்.
இறுதியில் இந்திய அணி 15.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.
55 ரன்கள் விளாசிய கோலி ஆட்ட நாயகனாகத் தேர்வு பெற்றார்.
உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை வென்றதே இல்லை என்ற சோகம் இன்றும் தொடர்ந்தது.
அமிதாப் பச்சன் பாடிய தேசிய கீதம்
முன்னதாக ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. இந்திய தேசிய கீதத்தைப் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பாடினார்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண்பதற்காகச் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக், முகேஷ் அம்பானி, இம்ரான் கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர்
0 comments:
Post a Comment