
போரில் கணவனை இழந்த தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் படையினர் ஈடுபடுவதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், படையினர் மட்டுமல்ல; தமிழ் அதிகாரிகளும் விதவைப் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறிய இக் கருத்துக் குறித்து தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டியதாக உள்ளனர்.
மண் மீட்புக்காக போராடிய ஓர் இனம் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், தோற்றுப் போன தன் இனத்தை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டிருக்க வேண்டிய கட்டத்தில் தானே தன் இனத்தை இழிவாக்கிக் கொள்வதென்பது ஒரு போதும் மன்னிக்கப்படக் கூடிய குற்றமன்று.
பொதுவில் போராட்டம் நடந்த நாடுகள், இடங்களைப் பார்க்கும் போது எதிரிகளால் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதான வரலாறுகளே அதிகம்.
ஆனால் எங்கள் தமிழர் தாயகத்தில் மட்டும் எதிரிகளின் துரோகத்தனத்திற்கு ஈடாக தமிழ் இன அதிகாரிகளும் நடந்து கொள்கின்றனர் எனும் போது நெஞ்சு வெடித்துப் போகும் போல் உள்ளது.
போரில் சிக்குண்டு தன் கணவனை இழந்த அப்பாவிப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அதிகாரிகளை நாடும் போது அவர்கள் பாலியல் லஞ்சம் கோருவதாக இருந்தால், இதைவிட அநியாயம் வேறு எதுவுமாக இருக்க முடியாது.
எனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறிய குற்றச்சாட்டுத் தொடர்பில் வடக்கு மாகாண சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இராணுவத்தினர் மட்டுமன்றி தமிழ் அதிகாரிகளும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோருகின்றனர் எனவும் இது தொடர்பில் தன்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் சந்திரிகா அம்மையார் கூறியிருப்பதால் இது தொடர்பில் அவரிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகளை அறிய வடக்கு மாகாண சபை உடனடியாக குழுவொன்றை நியமிக்க வேண்டும்.
ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறிய விடயம், இராணுவத்திடம் மட்டும் குறை காணாதீர்கள்; தமிழ் அரச அதிகாரிகள் மட்டும் திறம் அல்ல என்பது போல அவரின் கருத்துரைப்பு அமைந்துள்ள தால், சந்திரிகா அம்மையார் கூறிய விடயம் நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும்.
இதற்காக வடக்கு மாகாண அரசு விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து தமிழ் அதிகாரிகளால் பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கான ஏற்பாட்டை அமுல்படுத்துவதும் அவசியமாகும்.
அத்துடன் பாலியல் லஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு முறையீடு செய்வதற்கும் அது தொடர்பில் இரகசியம் பேணுவதற்குமான ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்.
இதை வடக்கு மாகாண அரசு செய்யத் தவறுமாயின், போர்க்குற்ற விசாரணைகள் நடைபெறும் போது இராணுவத்தினர் மட்டுமன்றி தமிழ் அதிகாரிகளும் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனவே இது தொடர்பில் படையினர் மீது விசாரணை நடத்துவது பொருத்தமற்றது என்பதாக நிலைமை முடிக்கப்படும் என்பதால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறிய விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை அறிவதும் உரிய நடவடிக்கை எடுப்பதும் மிகமிக அவசியமாகும்.
0 comments:
Post a Comment