இலங்கையில் 40 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான சம்பளம் பெறும் தனியார் ஊழியர்களுக்கு ரூ. 2500 சம்பள உயர்வு வழங்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ன தெரிவித்துள்ளார்
தனியார் தொழிலாளர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும், 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கேற்ப தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளம் கடந்த பத்து வருடங்களாக அதிகரிக்கவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், 2005ஆம் ஆண்டுதான் இறுதியாக தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது எனவும் கூறினார்.
இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட சம்பள உயர்வை கொடுக்க தனியார் நிறுவனங்கள் தவறினால் அது தொடர்பில் தமது அமைச்சுக்கு அறிவிக்க முடியும் எனவும் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ன தெரிவித்தார்.
அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை கொடுக்க மறுக்கும் நிறுவனங்களுக்கு 25 ஆயிரம் தண்டப் பணம் விதிக்க முடியுமென்றும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நபர் ஆறு மாத கால சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
பெருந்தோட்ட தொழிலார்களின் சம்பளமும் அதிகரிப்பு:
இதனிடையே இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் மாத சம்பளத்தில் 2500 ரூபாய் கிடைக்கவுள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பு பெருந்தோட்டத் துறையினருக்கும் கிடைப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அவர்களின் சம்பள அதிகரிப்பு தோட்டத் தொழிலாளர் பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்கிறார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜா.
இந்த சம்பள அதிகரிப்புக்கும் ஏற்கனவே கூட்டு ஓப்பந்த தொழிற்சங்கள் முன் வைத்துள்ள நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் தொடர்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறைக்கு மாத சம்பள அதிகரிப்பு 2500 ரூபாய் முழுமையாக கிடைத்தாலும் அதனை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முழுமையாக பெற வாய்ப்புகள் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களுக்கு வேலை வழங்கப்படும் அல்லது அவர்கள் வேலைக்கு சமூகமளிக்கும் நாட்களை கருத்தில் கொண்டே மாத முடிவில் சம்பளம் வழங்கப்படுறது.
இதன் காரணமாக நாளொன்றுக்கு ரூபா 100 என்ற அடிப்படையிலே இந்த சம்பள அதிகரிப்பு அவர்கள் சென்றடையும் எனக் கூறப்படுகின்றது.
தேயிலை தோட்டத் தொழிலாளர்களை பொறுத்தவரை அவர்கள் கூட்டு ஓப்பந்தத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால் அவர்கள் தனியார் துறை என்ற வரையறைக்குள் இல்லை.
தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு உட்பட, அவர்கள் நலன்கள் பேணும் வகையில் தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையில், இரு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டு ஓப்பந்தம் கைச்சத்திடப்படுகிறது.
இறுதியாக செய்து கொள்ளப்பட்ட ஓப்பந்தம் கடந்த வருடம் மார்ச் மாதம் 31ம் தேதியுடன் காலாவதியாகி ஒரு வருடமான நிலையில், அது இன்னமும் புதுப்பிக்கப்படவில்லை.
இதனை கருத்தில் கொண்டே தனியார் துறையினருக்கு வழங்கப்படவுள்ள சம்பள அதிகரிப்பு இம்முறை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவுள்ளது.
0 comments:
Post a Comment