சர்வதேச அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால்
அங்கிகரிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாளில் சர்வதேச
மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாகக் கொண்டாடப்படுகின்றது.
இவ் மகளிர் தினமானது பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளைக் கொண்டாடும் வகையிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். காலம் காலமாகக் கண்ணீருடன் வாழ்ந்து வரும் பெண் இனம் காத்து வரும் கண்ணிய உணர்வால்தான் இந்த மண்ணில் மனிதநேயம் உயிர்த்து இருக்கிறது என்பதையும் மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் முன்னேற்றமே, ஒட்டு மொத்த உயர்வுக்கு வழி வகுக்கும் என்பதனையும் அனைத்து தரப்பினரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
எமது நாட்டை பொறுத்த வகையில் சர்வதேச மட்டத்திலான பல முன்னுதாரணங்களை பெண்கள் நடைமுறைப்படுத்தி காண்பித்துள்ளனர் உலகின் முதலாவது பெண் பிரதமர் உள்ளிட்ட உதாரணங்களையும் யுத்த காலத்தில் தமிழ் பெண்கள் அகிம்சை முதல் ஆயுதப் போராட்டம்வரை பிரமிக்கத்தக்க சாதனைகளை படைத்து கான்பித்துள்ளனர் இதற்கு அன்னை பூபதி முதல் அங்கயற்கண்ணி வரை பல பெண்களை உதாரணமாக குறிப்பிட முடியும்.
'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.' என்ற பாரதியின் வரிகள் ஓரளவிற்கு மெய்ப்பிக்க பட்டபோதிலும் இன்றும் சில அடிப்படைவாதிகளினாலும் சமூக விரோதிகளாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றமை வேதனையளிக்கின்று. அனமைக்காலமாக எமது நாட்டில் இடம்பெறுகின்ற பாலியல் வன்கொடுமைகளும் படுகொலைகளும் ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் ஒருபானை பாலில் ஒருதுளி விசம் கலந்தால் அனைத்து பாலும் நஞ்சாவது போன்று இவ்வாறான ஒருசில சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டிற்குமே ஒரு இழிவாகவே பார்க்கப்படும். யாழ் புங்குடுதீவு வித்தியாவின் கொடூர சம்பவம் தொடக்கம் கரிஷ்ணவியின் படுகொலை வரையிலும் பல கொடூர சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியுள்ளமை ஆரோக்கியமான பெண்விடுதலையினை கடுமையாக பாதித்துள்ளது இதன்மூம் பெண்களின் சுதந்திரமான நடமாட்டம் மட்டுமன்றி வீடுகளில் தனிமையில் இருப்பதும் அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த ஐக்கிய அரபு இராட்சியம், ஈரான், ஈராக்,ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளில் பாலியல் குற்றங்களுக்காக பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்படுவதைப் போன்று கடுமையான தண்டனைகளை வழங்கி கட்டுப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் போன்ற பல நாடுகள் விடுமுறை தினமாகப் பிரகடனப் படுத்தியுள்ளதுபோன்று நமது நாட்டிலும் இந்நாளை அரச விடுமுறையாக அறிவித்து மகளிர் தினத்தினை முக்கியத்துவமான நாளாக மாற்றியமைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளுகின்றேன்.
அத்துடன் இந்த உயர்ந்த நாளில் பெண்ணுரிமைக்காகப் போராடிய போராளிகளைப் பற்றியும் பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் நன்றியுடன் நினைத்துச் சிறப்புச் செய்யவதுடன் கடந்த கால வரலாற்றை, அதில் நடந்த தவறுகளைத் திறந்த மனதோடு இரு பாலாரும் கற்று ஆய்ந்து தீர்வைக் காண வேண்டும், எனவும் கேட்டுநிற்கின்றேன்.
நன்றி
ப.உதயராசா
செயலாளர் நாயகம்
சிறி ரெலோ
0 comments:
Post a Comment