இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் 43.7 யூரோ மில்லியன் மதிப்பிலான நிதியுதவியையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.
கொழும்பிலுள்ள நிதியமைச்சில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஆணையாளர் நெவென் மிமிகா ஆகியோரின் தலைமையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இலங்கையின் மலையக பெருந்தோட்ட மக்கள் பெருவாரியாக வாழும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் கிராம அபிவிருத்திக்காக 30 யூரோ மில்லியன் பெறுமதியான நிதியுதவிக்கான ஒப்பந்தமும் கையொப்பமாகியுள்ளது.
இலங்கையின் வணிக நடவடிக்கைகளுக்கான செயல்திட்டத்திற்காக 8 யூரோ மில்லியன் நிதியும் தேசிய குடிநீர் மற்றும் நீர்வடிகாலமைப்பு சபைக்காக 5.7 யூரோ மில்லியன் மதிப்பிலான தொழில்நுட்ப உதவியை வழங்கவும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது
.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகையும் விரைவில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இங்கு தெரிவித்தார்.
ஏற்றுமதிப்பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வரிச்சலுகை கிடைப்பதற்கான ஜிஎஸ்பி நடைமுறை, இலங்கையின் மனித உரிமை விவகாரங்களை காரணம் காட்டி, 2010-ம் ஆண்டில் ரத்துசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
'இலங் நிலையான அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் முக்கிய முன்நிபந்தனையாக இருக்கின்ற நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் காட்டுகின்ற அக்கறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான சிறந்த தருணம் இன்று ஏற்பட்டிருக்கின்றது' என்று இங்கு பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஆணையாளர் நெவென் மிமிகா கூறினார்.
0 comments:
Post a Comment