சமூக சிந்தனை, சமூக பொறுப்பு இவை இரண்டுமே எம்மிடையே இன்று அருகி வருகின்றது. ‘நாம்’ நாங்கள் ;என்று நினைத்து செயற்பட்ட காலம் போய் ‘நான்’ என்ற சுற்றுவட்டத்திற்குள் தமிழ்ச் சமூகம் பெரும்பாலும் சிறுசிறு கூறுகளாகப் பிரிவுபட்டுக் கிடக்கின்றது.
இத்தகைய மனப்போக்கு தமிழர் சமூகத்தில் இதற்கு முன் இருந்ததில்லை என்பதல்ல அர்த்தம்.
இத்தகைய மனப் போக்கு சமூகத்தில் இருந்ததென்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இன்று அதன் அளவீடு மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
30 வருட காலப் போர் தமிழர் சமூகத்தின் ஒட்டு மொத்த கட்டமைப்பையே சிதைத்துவிட்டது . அந்தச் சிதைவுகளுக்குள் சமூக சிந்தனையையும் சமூகப் பொறுப்பையும் தேடுவதென்பது கடினம்தான்
ஆனால் தமிழச்சமூகம் தான் கொண்டிருந்த மனிதத்துவத்தையுமா வீசி விட்டு நிற்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும்போது நெஞ்சு கனக்கின்றது.
அதற்காக ஒட்டு மொத்த தமிழினமும் ஈரமற்று இரும்பாக இருக்கின்றது என்று கூற முடியாது.
நெஞ்சில் ஈரமும்,மனிதத்துவமும் இருப்பதினால்தான் கண்ணீருடனான கண்களைக் காண முடிகின்றது.
பாலியல் வன்முறைக்கெதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்தும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அரசியல் சமூகம், பொருளாதாரம், கல்வி என அனைத்து துறைகளும் மீள கட்டியெழுப்பப்படல் வேண்டும்.
வடக்கு,கிழக்கில் மாத்திரமல்ல மலையகத்திலும் இன்று எமக்குப் பிரதானமாகத் தெரிவது அரசியல்தான்.
அதாவது தேர்தலில் போட்டிபோட வேண்டும், நாற்காலிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றம். ஆனால் நாற்காலிகளைக் கைப்பற்றிய பின் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து நாம் சிந்திப்பதில்லை சிந்தித்து நடப்பதுமில்லை.
ஆனால் தமிழர்அரசியல் நாடாளுமன்ற,உள்ளுராட்சி,மாகாணசபைகளுக்கான நாற்காலிகளுக்கான கனவில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியத்தின் பெயரில் தொடர்ச்சியாக தேர்தல் வெற்றிகள் அறுவடை செய்யப்படுகின்றன.
ஆனால் தமிழ்த் தேசியத்தைக் காப்பற்ற,தமிழ்த் தேசியத்தின் பால் ஒன்றிணைந்து நிற்கின்ற தமிழ் மக்களுக்காக தேர்தல் நாற்காலிகள் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை என்ற கசப்பான உண்மையை ஒத்துக் கொண்டாக வேண்டும்.
உண்மையில் தமிழர் அரசியலில் நாற்;காலி அரசியலுக்கப்பால் தமிழ்த் தேசியம், தமிழ் மக்கள் குறித்த திட்டவட்டமான நிகழ்ச்சி நிரல் இல்லை. இப்படியே எவ்வளவு காலத்திற்கு இத்தகைய அரசியலுடன் தமிழ்த்தலைமைத்துவங்கள் காலம் கடத்தப் போகின்றனர் என்பது கேள்விக்குறியாகும்.
உண்மையில் அரசியல் பணிகளுக்கு சமாந்தரமாக சமூக, பொருளாதார, கல்வி குறித்த துறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
உண்மையில் அரசியல் பணிகளுக்கு சமாந்தரமாக சமூக, பொருளாதார, கல்வி குறித்த துறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாம் அதனை முன்னெடுக்காது மற்றவர்களை மட்டும் குறை கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை.
வடக்கும் கிழக்கும் சமூக ரீதியில ; எழுதப்படாத ஆனால் மிகவும் இறுக்கமான சமூக பாதுகாப்பு அம்சம் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இருந்தது.
இன்று அது தகர்க்கப்பட்டுவிட்டது.
இதற்கு புத்துயிர் அளிக்கப்பட வேண்டும்.
பெண்களைப் போற்றிய சமூகம் தமிழ்ச் சமூகம்.
இன்று பெண்களுக்கான பாதுகாப்பில்லாத ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில சமூகத்தில் சிவில் அமைப்புக்களை, சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை, மீளக் கட்டியெழுப்பும் பெரும் பொறுப்பு சமூகத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் ஊடகத் துறைக்கும் உண்டு.
இன்றைய தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்குளள்ளாக்கப்படுவது சர்வசாதாரணமாக உள்ளது. வித்தியா முதல் வவுனியா ஹர்ஷணவி வரை பட்டியல் நீளுகின்றது.
வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் இதே நிலைதான்.
இந்த அநீதிகளுக்கு எதிராக பெண்களும் பாடசாலை மாணவிகளும் அணிதிரண்டு குரல் எழுப்பிய போதும் நீதி என்னமோ மௌனித்தே நிற்கின்றது.
மலையகப் பெண்களும் கொழும்புக்கு வீட்டு வேலைகளுக்கு வரும் பெண்களும் சிறுமிகளும் பாடசாலைசெல்லும் மாணவிகளும் பாலியல் பலாத்காரத்திற்கும் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளான போதும் அந்தச்சம்பவங்களில் ஒரு சில இருட்டில் மின்னும் மின்மினிப் பூச்சியாக மின்னி மறைந்தே போய்விடுகின்றன. இது குறித்துக் கவலைப்படுவார் இல்லை. கவலைப்படுவோரின் உணர்வுகளும் ஒரு சில கவனயீர்ப்பு போராட்டத்துடன் அமைதியாகிவிடும். வடக்கும் கிழக்கும் இதற்கு விதிவிலக்கல்ல.
2010ஆம் ஆண்டு வன்னியும் வடக்கு கிழக்கின் பல பகுதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக்குள் இருந்தன. அவ்வேளையில் கிளிநொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுடன் இணைந்து பயணித்தேன். வவுனியாவை சென்றடைந்த நாம் பெரும் சோதனைகளுக்கூடாக வெளிவந்து கட்டுப்பாடுகள் அற்ற பகுதியைக் கடந்து விடுதலைப் புலிகளின் சோதனைச் சாவடிக்குள் பிரவேசித்தோம். சோதனைகளின் பின் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பயணத்தைத் தொடங்கினோம். நாம் மூவரும் கடிகார முள்ளினை மறக்காமல் ஒரு மணி நேரம் பின் நகர்த்திக் கொண்டோம். அவ்வேளையில் விடுதலைப் புலிகளின் க்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடிகார முள்ளும் மக்களும் ஒரு மணிநேரம் முன் நகர்ந்து ஓடிக் கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி போகும் வழியில் இரு மருங்கிலும் தென்னைகளும் பனை மரங்களும் தலைகளை இழந்து துப்பாக்கிக் குண்டுகளையும் ஷெல் துண்டுகளையும் மார்பில் தாங்கிக் கொண்டு நின்றன.
தலைகளை இழந்த நிலையிலும் அந்த தென்னைகளும் பனைகளினதும் நெஞ்சுறுதி போகவில்லை. தலையை இழந்த நிலையிலும் நெஞ்சை நிமிர்த்தி அந்த தென்னைகளும் பனைகளும் நின்றன. இந்த நெஞ்சுறுதியை அந்த மக்களிடமும் கண்டேன். அது மாத்திரமல்ல இரவு பத்தரை மணிக்குப் பிறகும் பெண்கள் தனியாக சைக்கிளில் செல்வதும் தனியாக நடந்து செல்வதும் சர்வசாதாரணமாக இருந்தது.
ஆனால் இன்று பெண்களுக்குப் பாதுகாப்புள்ளதா? பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னதாகப் பாடசாலைக்குச் சென்ற பிள்ளை பாதுகாப்பாக வீடு திரும்பியிருக்குமா? என்ற கவலையில் மறுபுறம் தாய்மார் வீட்டில் தனியாக விட்டு வந்த பிள்ளை பாதுகாப்பாக இருக்குமா? என்பதும் கவலை. ஏனெனில் நாட்டு நிலைமை மாத்திரமல்ல சமூகத்தின் தரமும் அந்தளவிற்குத் தாழ்ந்து கிடக்கின்றது.
மொத்தத்தில் பெண்களுக்கான ஒட்டுமொத்த சமூகப் பாதுகாப்பும் தகர்ந்து கிடக்கின்றது.
போர் தின்ற எச்சங்களாக கணவனை இழந்த குடும்பத் தலைவிகள் உறவுகளை இழந்தவர்கள் ஆணைக் குழுக்களின் முன் அழுது நிற்கின்றனர்.
இராணுவம் பிடித்துச் சென்ற எனது கணவனை 20 வருடமாகத் தேடுகின்றேன். தகவல் இல்லை என்று கூறுகின்றார் மேரி அன்ரனி ராணி: நானும் எனது பிள்ளைகளும் உயிருள்ளவரை எனது கணவரைத் தேடுவோமே தவிர மரணச் சான்றிதழையோ நட்ட ஈட்டையோ பெறப்போவதில்லை என்றும் மேரி அன்ரனி ராணி தெரிவித்துள்ளனர்.
எனது சகோதரியின் மகனை மண்கும்பானில் வைத்துப் படையினர் பிடித்துச் சென்றனர். காணாமல் போனோர்கள் கொல்லப்பட்டு கிணறுகளில் போடப்பட்டதாகத் தகவல். கிணறுகளில் தேடுங்கள்என்று ஒருவர் குரல் எழுப்புகின்றார்.
காசு வேண்டாம். எனது மகனைத் தாருங்கள் என்று மன்றாடுகின்றார் 67 வயதான தாய்.
மகனைத் தேடும் இன்னொரு தாய் சனல் 4 வெளியிட்ட புகைப்படத்தில் மகனை அடையாளம் காட்டி நிற்கின்றார்.
காணாமல் போன மகளை வெலிக்கடைச் சிறைச்சாலையில் கண்டேன் என்கிறார் இன்னொரு தாய்.
ஒரு நாய்க் குட்டி காணாமல் போகும் போது அருகில் இருப்பவர்களும் இணைந்து தேடுவோம். மாடு ஒன்று காணாமல் போனால் மாடு வளர்க்கும் பலர் ஒன்றிணைந்து தேடுவார்கள். இன்றுவரை எனது கணவனைக் காணவில்லை. இதே போல் பலரைக் காணவில்லை. கணவரைக் காணவில்லை என நான் புலம்புகின்றேன். நீங்களோ மரணச் சான்றிதழைத் தருவதாகக் கூறுகின்றீர்கள். எமது பிள்ளைகள் அப்பா எங்கே என்று கேட்கும்போது தந்தைக்குப் பதிலாக மரணச் சான்றிதழையா காண்பிப்பது? என்று ஒரு பெண் கேள்வி எழுப்பி நிற்கின்றார்.
இவ்வாறு ஆயிரக் கணக்கில் தாய்மார்கள் மகன்களையும், சகோதரிகள் சகோதரனையும், மனைவிமார் தமது கணவன்மார்களையும் தேடி அலையும் அவலத்தை அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ்ச் சமூகத்தில் பெரியளவில் பேசப்படாத பொருளாக இந்த விவகாரம் உள்ளது.
தமிழ்ச் சமூகமும் தமிழ் அரசியல்வாதிகளும் இன்றும் இந்த விடயம் குறித்து பேசாது மௌனமாகவே இருக்கின்றனர். ஆல்லது பேசுவதும் வெறும் ஒப்புக்காகவே உள்ளது.
வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த எண்ணிக்கை, தகவல்கள் எம்மிடம் இல்லை.
வடக்கு கிழக்கில் 70 ஆயிரம் விதவைகள் இருப்பதாக ஒரு தகவல் கூறுகின்றது.
இன்னொரு தகவல் 80 ஆயிரம் என்றும் மற்றொரு தகவல் 90 ஆயிரம் என்றும் கூறுகின்றது. இத்தகைய தகவல்களுக்கு அப்பால் 59 ஆயிரம் என்று கணக்கிடுபவர்களும் உள்ளனர்.
ஆனால் போர் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களாகியும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்தோ, விதவையாக்கப்பட்டவர்கள் குறித்தோ சரியான புள்ளி விபரங்கள் இல்லாது தமிழ்த் தலைமைத்துவங்கள்வெறுங்கையுடன் இருப்பது பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
இந்த புள்ளி விபர சர்ச்சைகளுக்கப்பால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் தமது அன்றாட குடும்ப வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்;றன, பரவலாகவும் பேசப்படுகின்றன.
ஆனால் இது குறித்தும் சரியான தகவல்கள் திரட்டப்படவில்லை. பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்களும் பெரிதாக சென்றடையவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு புறம் இருக்க மறுபுறம் பெண் போராளிகளின் நிலை இன்னும் மோசமாக இருக்கின்றது.
இவர்களைப் போராளிகளாக மாற்றியதில் தமிழ்ச் சமூகத்திற்குப் பெரும் பங்குண்டு. அவர்களுடைய வீர தீரச் செயல்களை புகழ்ந்த தமிழ்ச் சமூகம் இன்று புனர்வாழ்வு பெற்று வீடு திரும்பியவர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.
அங்கீகரிக்க மறுக்கின்றது.
இது எந்தளவுக்கு நீதியானது, நியாயமானது என்று தெரியவில்லை.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த 12007 போராளிகளில்; 3 ஆயிரம் பேர் பெண் போராளிகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்ச் சமூகத்தின் விடிவுக்காக, விடுதலைக்காக போராட்டக் களம் புகுந்த இந்தப் பெண் போராளிகள் சமூகத்தில் ஒதுக்கப்பட்டுக் கிடப்பதை ஊடகவியலாளர் துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை சமகாலம் சஞ்சிகையில் தோலுரித்துக்காட்டியுள்ளார்.; (2013 டிசம்பர் 16.30 பக்கம் 43)
போராட்டக் களம் புகுந்து வீழ்ந்து கிடக்கும் இந்த முன்னால் போராளிகள் சிறுமை கொண்ட தமிழ்ச் சமூகத்தின் சிந்தை கண்டு காறி உமிழ்ந்தால் கூட தப்பில்லை.
ஏனெனில் எந்தச் சமூகத்தின் விடிவுக்காய் புறப்பட்டு வீழ்ந்து கிடக்கின்றார்களோ அந்தச் சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்து உதாசீனப்படுத்தி நிற்பதை எண்ணும் போது அவர்களது வேதனையை உள்ளக் குமுறல்களை உணர்ந்து கொள்ள முடியும்.
நமக்கு சமூகம் என்ன செய்தது என்பது பற்றி கவலைப்படாது சமூகத்திற்காக உயிரைப் பணயம் வைத்து ஆற்றிய பங்களிப்புக்குக் கைமாறாக தமிழ்ச் சமூகம் இந்தப் பெண்களுக்கு என்ன செய்யப் போகின்றது என்பதே இன்றைய கேள்வியாகும்.
நாம் சமூக மயப்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அன்றாட வாழ்வுக்காய் முன்னாள் பெண் போராளிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.ஒரு புறம் குடும்பச் சுமை. மறுபுறம் பொருளாதார நெருக்கடி. இவைகளுக்கூடே புலனாய்வாளர்களின் நெருக்கடிஎன காலச் சூழ்நிலை அவர்களின் வாழ்வைப் புரட்டிப் போட்டு விட்டது.
கைகளில் துப்பாக்கிகளை ஏந்தி வீர மரணம் அவர்களை எந்நேரத்திலும் அரவணைக்கத் தயார் நிலையில் இருந்த போதும் அந்த மரணத்துக்கும் அஞ்சாது களத்தில் நின்று போராடினர். ஆனால் இன்று வீரவேங்கையர் என புகழப்பட்வர்கள் சூழ்நிலையின் கைதிகளாக அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்த வழி தெரியாது திகைத்து நிற்கின்றனர்.
மறுபுறம் இவர்களுக்கு சமாந்தரமாக களத்தில் நின்று போராடிய படையினரின் நலன்கள் குறித்த திட்டங்கள் முறையாகத் துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள், பொதுமக்கள், போராளிகள் அனைவரும் உடல், உள ரீதியாக ஓர் ஊனமுற்ற சமூகமாக புழுதிக்குள் கிடக்கின்றனர்.
இவ்வாறு புழுதிக்குள் வீசப்பட்டு நடைப் பிணங்களாக வாழும் மக்கள் குறித்த தகவல்களையோ அல்லது சரியான புள்ளி விபரங்களையோ நாம் தேட முன்வரவில்லை. ஆனால் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் எத்தனை வாக்காளர்கள் இருக்கின்றனர் என்ற துல்லியமான தகவல்களை எமது அரசியல்வாதிகள் வைத்துள்ளனர்.
அந்த வாக்குகள் பலரை மாகாண சபைகளுக்கும் நாடாளுமன்றத்திற்கும் உள்ளுராட்சி, மாநகர, நகர சபைகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளாக அனுப்பியுள்ளது.
ஒவ்வொரு கட்சியும் தத்தமது உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை ஒன்று திரட்டி மக்கள் வாழ்வுக்கான நிதியாக ஒன்றிணைத்து பாதிக்கப்பட்டவர்கள் தமது சொந்தக் காலில் நிற்பதற்கேற்ற திட்டங்களை முன்வைத்து செயற்பட முன்வர வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணும் மாற்றத்தின் முகவராகவே கருதப்படவேண்டும். பெண் போராளிகளைப் “பாதிக்கப்பட்டோர்” என்ற நிலையில் இருந்து ” வெற்றியாளர்” என்ற நிலைக்கு உயர்த்த வேண்டியது சமூகத்தின் கடப்பாடாகும்” என்ற துஷியின் கோரிக்கையை ஒட்டு மொத்த பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக தமிழ்ச் சமூகத்தின் முன் வைக்கிறேன்.
போர் முடிவடைந்தவுடன் செய்திகளுக்கு பஞ்சமாகப் போய்விட்டது என்ற மனப் போக்கு அச்சு தமிழ் ஊடகத்துறைக்குள் இன்று மிக ஆழமாகப் பரவிக்கிடக்கின்றது.
போர் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் போருக்குப் பிந்திய சூழ்நிலைகளுக்கேற்ப
தமிழ் ஊடகத் துறை தன்னை தயார்படுத்திக் கொள்ளவிலலை என்ற கசப்பான உண்மையை
ஏற்றுக் கொண்டாக வேண்டும். எனவேதான் எமக்கு முன்னே போரின் பாதிப்புக்குள்ளாகி; நோயாளியாகக் கிடக்கின்ற சமூகத்தின் நிலை செய்தியாகத் தெரிவதில்லை போலும்.
அத்துடன் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப அவர்கள் கடிவாளமிட்டு தமிழ் ஊடகத்துறையின் முதுகில் சவாரி செய்யும் போக்கினை தமிழ் ஊடகத்துறை உள் வாங்கிக் கொண்டு பயணிப்பது தமிழ் ஊடகத்துறைக்கு மாத்திரமில்லை தமிழ்த் தேசியத்திற்கும் செய்யும் துரோகமாகவே அமையும்;.
இது என்னுடைய கருத்தாக மாத்திரமல்ல வடக்கில் உள்ள முக்கிய ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியத்தை நேசிப்போரின் ஆதங்கமாகவும் உள்ளது என்பதை இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன்.
எனவே தமிழ் ஊடகத்துறையும் தமிழ்ச் சமூகமும் தனது சமூகப் பொறுப்பை உணர்ந்து செயற்பட முன்வரவேண்டுமென்று போர் தின்ற எச்சங்களாய் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.இது ஒட்டுமொத்த தமிழினத்துக்கான மகளிர் தின உறுதி மொழியாகவும் பிரகடனமாகவும் வேலைத் திட்டமாகவும் அமையட்டும். தமிழர் அரசியலில் ஒரு புதிய மக்கள் நலன் நோக்கிய அரசியலுக்கு 2016 வித்திடட்டும்.
0 comments:
Post a Comment