ஊடகக் கல்வியை வளப்படுத்துமாறு கோரி வடக்கு ஊடகவியலாளர்களால் மகஜர்

ggjதமிழ் ஊடகக் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென  கோரிக்கை  விடுத்து ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, வட மாகாண ஊடகவியலாளர்களால் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலகவுக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (சனிக்கிழமை) அமைச்சர் கயந்த கருணாதிலக யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.தமிழ் ஊடகக் கல்வியில் அதிக கவனம் செலுத்தி, வளமான ஆளணியை உருவாக்கி அதனை வலுப்படுத்துவதனூடாக நல்லிணக்கத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்த முடியுமென குறித்த மகஜரில் குறிப்பிட்டுள்ளனர். மகஜரை பெற்றுக்கொண்ட அமைச்சர் அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளும் வருமாறு-1. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தினூடாக நடத்தி வந்த இதழியல் டிப்ளோமா பயிற்சிகளை இடைநிறுத்தியுள்ளது. இதனால் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்ளாத இளைஞர்கள் மற்றும் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் ஊடகக் கல்வியைப் பெறும் வாய்ப்பு தடைப்பட்டுள்ளது. இதனால் இதில் தலையிட்டு இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறியை உடனடியாக ஆரம்பிப்பதற்கு ஆவண செய்துதவுமாறு கேட்டுக் கொள்வதோடு குறைந்த கட்டணத்தில் ஊடகக் கல்வியைப் பெறுவதற்கும் வாய்பேற்படுத்தித் தருமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.2. தமிழ் ஊடகக் கல்வியை வலுப்படுத்தவதற்கு வசதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தினால் 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஊடக வளங்கள் பயிற்சி மையத்தை பல்கலைக்கழகத்திலுள்ள மீன்பிடியியல் மற்றும் விளையாட்டு, விஞ்ஞானத்துறை அலகுகள் போன்று தனியான அலகாக பிரகடனம் செய்து அதற்கான உரிய உத்தியோகஸ்தர்களை நிரந்தரமாக நியமித்து அதனை தொடர்ச்சியாக இயங்க பல்கலைக்கழகத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் இப் பயிற்சி நிலையத்தை மூடி பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு துறையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிகிறோம். இதனால் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சேவையாற்றுவதற்காக இருக்கக்கூடிய ஒரே நிறுவனத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தமிழ் ஊடகத்துறை பாதிப்படையும்.3. தமிழ் ஊடகவியலாளர்கள் பட்டப்படிப்புக்களை மேற்கொள்வதற்கு வசதியாக வெளிவாரியாக ஊடகத்துறையில் பட்டம் பெறுவதற்கும் வாய்பபேற்படுத்தித் தருமாறும் கேட்டுக் கொள்வதோடு, இரண்டு வருட இதழியல் டிப்ளோமா கற்கையைப் பூர்த்தி செய்தவர்கள் ஊடகத்துறையில் நேரடியாக பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு வாய்ப்பேற்படுத்தித் தருமாறும் கேட்டுக் கொள்கின்றோம். இதழியல் டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்தவர்கள் நேரடியாக பல்கலைக்கழக பட்டப்படிப்பில் இணைந்து கொள்ள முடியும் என ஏற்கனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் உறுதியளிக்கப்பட்டிருந்ததை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். இந்த திட்ட முன்மொழிவு கடந்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட அரசியல் தலையீடுகள் காரணமாக நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தற்போது பணியில் இருக்கின்ற ஊடகவியலாளர்களும் ஊடகத்துறை புதுமுக மாணவர்களும் தமது புலமைத்துவ அறிவை விருத்தியாக்க உதவியாக அமையும்.4. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பயிற்சிகளைப் பூர்த்தி செய்து கொண்ட மீன்பிடியியல் மற்றும் விளையாட்டு விஞ்ஞான துறையினருக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றது. ஆனால் இதழியல் டிப்ளோமா பயிற்சியை பூர்த்தியாக்கியோருக்கு அரச வேலைவாய்ப்பில் உள்ளீர்க்கும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது. குறிப்பாக பாடசாலைகளில் ஊடகக்கற்கைகள் பாடத்தைக் கற்பிப்பதற்கான ஆசிரியர் வெற்றிடங்கள் தற்போதும் நிரப்பப்படாமல் உள்ளன. அதே போன்று பொதுமக்கள் தொடர்பு உத்தியோத்தர்கள் மற்றும் ஊடக தொடர்பு உத்தியோகத்தர் பதவிகளும் அரச சேவைகளில் உள்ளன. இதற்கு இதழியல் டிப்ளோமா பயிற்சியைப் பூர்த்தி செய்தவர்களை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்றின் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.5. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தை தொடர்ச்சியாக இயக்குவதற்கு வசதியாக ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களையும் உள்ளடக்கிய முகாமைத்துவ குழுவொன்றை நியமித்து தமிழ் ஊடகக் கல்வியை தொடர்ச்சியாக வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


6. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தை தொடர்ச்சியாக இயக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் வசதியாக ஊடக அமைச்சினூடாக தொடர்ச்சியாக நிதியுதவியை வழங்கியுதவுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com