மன்னார் உப்புகுளம் பகுதியில் காணிவழங்குதலில் அரசியல் தலையிடால் மக்கள் பாதிப்படைவதாக தெரிவித்து வட மாகாணசுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உப்புகுளம் சனசமூக தலைவர் எம்.என். ஆலம் நேற்று இந்த கடித்தினை அனுப்பிவைத்துள்ளார்
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைக்காக அரச காணிகள் பகிர்ந்தளிக்க ஏதுவாக உப்புக்குளம் தெற்கு கிராமசேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட உப்புக்குளம் கோந்தைப்பிட்டி எனும் பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் அரசகாணி வழங்கலுக்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டு, அதற்கமைய கடந்த வருடம் 100 பேர்களைக் கொண்ட பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களை காணி கச்சேரிக்கு சமூகம் தருமாறு கோரப்பட்டது.
இதற்கமைய குறித்த நபர்களுக்கு உப்புக்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் மக்கள் மத்தியில் காணிக் கச்சேரி நடைப்பெற்றது.
அப்பட்டியலிருந்து 61 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு கிராம சேவையாளர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது.
குறித்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்கள் காணிக்கச் சேரியில் ஊர்மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.
தனது காணியினை காண்பித்து வீட்டு திட்டம் பெற்றவர்கள் ஏற்கனவே அரசகாணியினையும் வீட்டுத்திட்டங்களையும் பெற்று அதனை விற்றவர்களின் பெயர்களும் அடங்கியுள்ளது.
உள்வாங்கப்பட்டவர்களின் பெயர்கள் பிரதேச செயலாளருக்கு விசுவாசமாகவும் அவருக்கு அனைத்து விதமான உபசரணைகள் வழங்கும் நபர் முழுமையாக செயற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இவர் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர் என்பதுடன் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர் கட்சி சார்ந்தவர்களின் குடும்பங்கள் என பலர் உள்வாங்கப்பட்டு குறித்தபட்டியல் தெரிவு நடைபெற்றுள்ளது.
இது இவ்வாறு இருக்க கடந்த 17.02.2016 அன்று மன்னார் உப்புக்குள பள்ளிவாசலுக்கு வருகை தந்த அமைச்சர், ஓரு கூட்டத்தை ஏற்பாடு செய்து இப்பகுதிக்கு வழங்க 125 வீடுகள் கைவசம் உண்டு.
இவ்வீடுகள் தனக்கு அரசியலில் முழுமையாக செயற்பட்டவர்களுக்கு வழங்கவே கொண்டு வந்துள்ளதாகவும், இவற்றினை வழங்க தற்போது உள்ள குறித்த அரசகாணியினை ஏற்கனவே தெரிவு செய்தவர்கள் போக மேலும் 50 தனது ஆதரவாளர்களை இணைத்துக் கொள்ளுமாறு அங்கு பிரசன்னமாகி இருந்த பிரதேசசெயலாளரிடம் கண்டிப்புடன் கூறி உள்ளார்.
இதனை அவர் ஏற்றுக்கொண்டு அமைச்சரினால் வழங்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கி 110 பெயர்களைக் கொண்ட பெயர் பட்டியல் ஒன்றை தயாரித்து உள்ளார். இப்பட்டியல் மக்கள் பார்வைக்கு விடப்படவில்லை.
பெயர்களில் ஏற்கனவே அரசகாணி பெற்றவர்கள் அக்காணியின் ஊடாக வீட்டுத்திட்டங்கள் பெற்றவர்கள் அப்பகுதியில் வசிக்காதவர்கள் என பல பெயர்கள் உள்வாங்கப்பட்டு தேவையுடையோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறு இருக்க கடந்த 19.02.2016 அன்று நில அளவை செய்யப்படாத அரசகாணியில் சட்டவிரோதமாக அமர்ந்து இருக்கும் கட்சி ஆதரவாளர்கள் மூவரின் காணிகளில் ஒரு வடமாகாண சபை உறுப்பினரால் மேற்கூறப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
நிலஅளவை மற்றும் காணிவரைப்படம் தயாரிக்கப்படாத காணிகளுக்கான எல்லைகள் வரையறுக்கப்படாத அரசகாணியில் மக்கள் பிரதிநிதியான ஒருவர் இவ்வாறு செயற்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதது.
மேலும் இதே அரசகாணியும் கடந்த வருடம் இந்திய வீட்டுதிட்டம் ஊடாக 4 வீடுகள் எந்த சட்ட அடிப்படையும் பின்பற்றப்படாமல் அமைச்சரின் ஆதரவாளர் என்ற ஒரே காரணத்தில் வழங்கப்பட்டது.
அப்போது இதற்கெதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டன. எனவே
01. அமைச்சரால் கொண்டு வரப்பட்டு வழங்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் மாகாணசபையின் அனுமதிபெறப்பட்டதா?
02. அவ்வாறு தான் தலைமை வகிக்கும் கட்சி சார்ந்தவர்களுக்கு மாத்திரம் வழங்க வெளிநாடுகளால் இவ்வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதா?
03. அரசகாணி பயனாளிகளின் பெயர்களை தெரிவு செய்ய குறிப்பிட்ட அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?
கடந்தஅரசாங்கத்தில் நடந்து கொண்ட முறையிலேயே தற்போதய நல்லாட்சியிலும் நடந்துகொள்கிறார்கள்.
இக்காணி வழங்களிலும் வீட்டுத்திட்டம் வழங்களிலும் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
தற்போது வழங்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் மற்றும் அரச காணி வழங்கள் முறையற்ற விதத்தில் நடைபெறுவதாலும் அதற்கு பிரதேச செயலாளர் உடந்தையாக இருப்பதனாலும் பாதிக்கப்பட்ட மக்களின் நன்மை கருதி வீட்டு வசதி தேவையுடைய அனைத்து மக்களுக்கும் கட்சி மற்றும் சமூகம் பாராது பகிர்ந்தளிப்பதுடன் இதில் விடுபடும் மக்களுக்கு தற்போது வழங்கப்பட இருக்கும் வடக்கு கிழக்குக்கான 65,000 வீடு வழங்கும் திட்டத்தில் உள்வாங்குவதுடன் பக்க சார்பாக செயற்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment