இலங்கையில் வரிகளும் பொருள் விலைகளும் அதிகரித்துவரும் சூழ்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் புதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் எடுக்கப்பட்டுள்ள முடிவை அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் விமர்சித்துள்ளன.
இதுவரை காலமும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அடங்கலாக சுமார் ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபா மாதாந்த சம்பளமாக கிடைத்துவந்தது.
ஆனால், இப்போது முன்னர் கொடுக்கப்படாத புதிய கொடுப்பனவுகளும் அடங்கலாக இந்தத் தொகையை அதிகரிப்பதற்கு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழு அனுமதி அளித்துள்ளது
.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அவரது தொகுதியில் அலுவலகம் ஒன்றை நடத்துவதற்கு மாதாந்தம் 75 ஆயிரம் ரூபாவும், அரச விடுதி கிடைக்காதவர்களுக்கு வீட்டு வாடகைக்காக மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாவும் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்களுக்காக 50 ஆயிரம் ரூபாவும் கிடைக்கும் வகையில் இந்தக் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன
.
இதுதவிர, அரசியலமைப்பு பேரவையின் அமர்வில் கலந்துகொள்வதற்காக 2500 ரூபாவும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துறைசார் மேற்பார்வை குழுக்களின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக 4000 ரூபாவும் அந்தக் குழுக்களின் தலைவர்களுக்கு 5000 ரூபாவும் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
துணை சபாநாயகர் திலங்க சுமதிபால, குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அவை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், ஆளுங்கட்சி தலைமைக் கொறடா கயந்த கருணாதிலக்க, எதிரணியின் தலைமை கொறடா அனுர குமார திஸாநாயக்க, அமைச்சர்களான மகிந்த சமரசிங்க, விஜேதாஸ ராஜபக்ஷ, எம்.பிக்களான தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, உள்ளிட்டவர்கள் இந்த முடிவை எடுத்த குழுவில் இடம்பெற்றிருந்ததாக நாடாளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன.
ஒன்றிணைந்த எதிரணி என்று அழைத்துக்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆதரவு அணி, இந்த சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக பிபிசியிடம் இன்று தெரிவித்துள்ளது.
'பொதுமக்கள் மீது வரிச்சுமைகளை சுமத்திவிட்டு,நிதி இல்லை என்று கூறிக்கொண்டே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் வசதிகளையும் அதிகரிப்பதற்கு நாம் எதிரானவர்கள் என்பதை தெரிவித்துவிட்டோம்' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார.
இந்த நாடாளுமன்றக் குழு எடுத்துள்ள முடிவுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் நாணயக்கார பிபிசியிடம் தெரிவித்தார்.
இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் அதிகரிப்பு கடுமையான கண்டனங்களை வெளியிட்டு, அரச மருத்துவ அதிகாரிகளும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment