சென்னை : தமிழக தேர்தல் களத்தில் தற்போதைய நிலவரப்படி, எதிர்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால், வெற்றி பறி போவதோடு, சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத சூழ்நிலை உருவாகும் என அரசியல் வல்லுநர்கள் கூறிகின்றனர்.
தேமுதிக., தங்கள் கூட்டணிக்கு வந்தால், அதிக பலத்துடன் தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடித்து விடலாம் என அனைத்து கட்சிகளும் கனவில் இருந்தன. கூட்டணி பற்றி அதிமுக வாய்திறக்காத நிலையில், தேமுதிக.,வை தங்கள் பக்கம் வளைக்க போவது யார் என திமுக.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே பெரிய போட்டியே நடந்தது. இதற்கிடையில் மக்கள் நலக் கூட்டணியும் தேமுதிக.,வை தங்கள் கூட்டணிக்கு வரவழைக்க என்னென்னவோ சொல்ல பார்த்தது. இருந்தும் ஒன்றும் பலிக்கவில்லை. தனித்துப் போட்டி என தேமுதிக அறிவித்த பிறகும், தேமுதிக தங்கள் பக்கம் வரும் என கூட்டணி நம்பிக்கையை கைவிடாமல் பேசி வந்த திமுக.,வும், மக்கள் நல கூட்டணியும் தற்போது அந்த எண்ணத்தை கைவிடும் முடிவுக்கு வந்து விட்டன.
திமுக., காங்.,உடன் கூட்டணி அமைத்திருந்தாலும் இதனை பலமான கூட்டணியாக யாரும் கருத்தில் கொள்ளவில்லை. அத்துடன் பாமக., தேமுதிக., உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதல்வர் கனவில் உள்ளதால் தனித்து போட்டியிட தயாராகி வருகின்றனர். இதனால் ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறும். ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாக அனைத்து எதிர்கட்சிகளும் கூறி வருகின்றன. ஆனால் அந்த அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை.
சிறு வயதில் 4 எருதுகளும் சிங்கமும் கதையை நாம் படித்திருக்கிறோம். 4 எருதுகளும் ஒற்றுமையாக இருந்தபோது, சிங்கம் தலை தெறிக்க ஓடியதையும், அவை பிரிந்து நின்றபோது சிங்கம் வென்றதையும் நாம் அறிவோம். ஆனால் இதை எதிர்கட்சிகள் உணர்ந்ததாக தெரியவில்லை.
தேர்தல் நெருங்கும் சமயத்திலும் எந்த கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் இருந்து வருவதால், தமிழகத்தில் மீண்டும் தற்போதைய ஆளும் கட்சியே ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் கணிப்பாளர்கள் மட்டுமல்ல, மக்களும் கருத ஆரம்பித்து விட்டனர்.
இருப்பினும் கூட்டணி குழப்பங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வராததால், தேர்தல் களத்தில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் வரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியோ...நல்லாட்சி அமைந்தால் சரி தான்.
0 comments:
Post a Comment