ஜனாதிபதி என்ற வகையில், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்கும் முன்னதாக, அமைச்சர் என்ற வகையிலும் அந்த முன்னுதாரணத்தை தாம் நாட்டுக்கு வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவையில் இன்று முற்பகல் நடைபெற்ற மாகாண முதலமைச்சர்களின் 32வது மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சராகவும் விவசாய அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் மாகாணத்தின் கண்காணிப்பு அதிகாரங்களை மாகாணங்களின் அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் வழங்கியிருந்தேன்.
நாட்டுக்கு பணிகளை செய்வதற்காக எந்த சந்தர்ப்பத்திலும் அதிகாரங்களை பகிர்ந்து வழங்க தயாராக இருக்கின்றேன்.
உலக அரசியலில் தற்போது அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்காது, அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது குறித்தே படித்தவர், புத்திஜீவிகள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த எண்ணக்கருவானது வலுவானது. இதற்கு எதிராக ஏதேனும் நிலைப்பாடுகள் முன்வைக்கப்படுமாயின் அது முன்னேற்றமடையாத சமூகத்தின் அடையாளமாகும்.
உலகில் தற்போது உயர்ந்த அபிவிருத்தியை நோக்கி பயணித்துள்ள சகல நாடுகளும்,அதிகாரத்தை பரவலாக்கியும் பிரதேச அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டுமே அந்த உயர்ந்த அபிவிருத்தியை அடைந்துள்ளன.
ஒரு நாடு என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட்டு மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் புரிந்துணர்வுடன் செயற்படுவது முக்கியமானது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment