நடிகர் : கார்த்தி
நடிகை :தமன்னா
இயக்குனர் :வம்சி பெய்டிபல்லி
இசை :கோபி சந்தர்
ஓளிப்பதிவு :வினோத்
தோழா சென்னையில் சாதாரண அடுக்குமாடி குடியிருப்பில் அம்மா, தம்பி, தங்கையுடன் வாழ்ந்து வரும் கார்த்தி, திருட்டு தொழிலை செய்து அடிக்கடி ஜெயிலுக்கு சென்று வருகிறார். இதனால், இவருடைய வீட்டில் யாருமே இவரை மதிப்பதில்லை.
ஒருகட்டத்தில் கார்த்தியை அவருடைய அம்மா வீட்டை விட்டும் துரத்துகிறார். இந்நிலையில், கார்த்தியின் வக்கீலும், நண்பருமான விவேக், கார்த்தியை நல்வழிப்படுத்த நினைக்கிறார். அதன்படி, தனக்கு தெரிந்த இடங்களில் அவரை வேலைக்கு சேர்க்கிறார். ஆனால், அந்த வேலையெல்லாம் கார்த்திக்கு பிடிப்பதில்லை.
இந்நிலையில், ஒருநாள் பெரிய தொழிலதிபரான நாகர்ஜூனாவுக்கு வேலையாள் வேண்டுமென விளம்பரம் வருவதை பார்த்து அங்கு இன்டர்வியூவுக்கு செல்கிறார் கார்த்தி. இண்டர்வியூவுக்கு நிறைய பேர் வந்தாலும், கார்த்தியின் படபடவென்ற பேச்சு நாகர்ஜூனாவை மிகவும் கவர்கிறது. இதனால், அவரையே தனக்கு உதவியாளராக நியமிக்கிறார்.
ஆனால், இவரை நியமித்தது நாகர்ஜூனாவின் செகரட்டரியான தமன்னாவுக்கும், நாகர்ஜுனாவின் நலம் விரும்பியும், நெருங்கிய நண்பருமான பிரகாஷ் ராஜூக்கு பிடிக்கவில்லை.
நடக்க முடியாத நிலையில், வீல் சேரிலேயே வலம்வரும் நாகர்ஜுனாவுக்கு பணிவிடைகள் செய்ய முதலில் கார்த்தி தயங்கினாலும், ஒருகட்டத்தில் நாகர்ஜுனாவின் நல்ல மனதை புரிந்துகொண்டு அவருடன் நெருங்கி பழகுகிறார்.
கார்த்தி, நகார்ஜுனாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு ஊர் சுற்றுவது, சிறு சிறு ஹோட்டல்களுக்கு சென்று சாப்பாடு வாங்கிக் கொடுப்பது என நாகர்ஜுனா கண்டிராத ஒரு புது உலகத்தை காட்டுகிறார். நாகர்ஜுனாவும் கார்த்தியை தனது தம்பி போலவே பாவிக்கிறார். மறுபுறம் செகரட்டரியான தமன்னாவை ஒருதலையாக காதலிக்கிறார் கார்த்தி.
இந்நிலையில், கார்த்தியின் தங்கை ஒருவரை காதல் திருமணம் செய்துகொள்ள போகிறார். அதை தடுத்து நிறுத்தச் செல்லும் கார்த்திக்கு அவமானமே மிஞ்சுகிறது. இது நாகர்ஜுனாவுக்கு தெரியவர, இதில் தலையிட்டு கார்த்தி தங்கையின் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி வைக்கிறார். இதிலிருந்து நாகர்ஜுனா - கார்த்தியுடனான நட்பு பலமாகிறது.
இந்நிலையில், ஒருநாள் நாகர்ஜுனாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு ஏற்பட்ட இந்த நிலைமையை கண்டு அனைவரும் கண்கலங்குகின்றனர்.
இறுதியில், நாகர்ஜுனா நலமடைந்தாரா? கார்த்தி-நாகர்ஜுனாவின் தோழமையின் ஆழம் எதுவரை சென்றது? தமன்னாவுடனான கார்த்தியின் காதல் என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.
கார்த்தி, தனியொரு ஆளாக நின்று இப்படத்தின் கதையை தூக்கி நிறுத்துகிறார். காதல், சென்டிமெண்ட், நகைச்சுவை என எல்லாவற்றிலும் புகுந்து கலக்கியிருக்கிறார். குறிப்பாக, இந்த படத்தில் காமெடிக்கென்று தனியாக காமெடியன் இல்லையே என்ற உணர்வை இவர் தகர்த்தெறிந்திருக்கிறார்.
நாகர்ஜுனா எழுந்து நடக்காத முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தனது முகபாவனையிலேயே இவர் காட்டும் நடிப்பால் ரசிகர்கள் மனதில் எழுந்து நிற்கிறார். படத்தில் இவர் செய்யும் சிறு சிறு முகபாவனைகள் கூட ரசிக்க வைக்கின்றன.
தமன்னா, செகரட்டரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதேநேரத்தில் கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கவர்ந்திழுக்கவும் செய்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விவேக் சில காட்சிகள் வந்தாலும் மனதில் பதிகிறார்.
இயக்குனர் வம்சி பெய்டிபல்லி தெலுங்கு இயக்குனர்தான் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இந்த படத்தை கொடுத்திருக்கிறார். ஒரு காமெடி காட்சி, அதைத் தொடர்ந்து அழவைக்கும்படியான செண்டிமென்ட் காட்சி என அடுத்தடுத்து கொடுத்து ரசிகர்களை சீட்டை விட்டு எழுந்திருக்கவிடாமல் செய்திருக்கிறார். திரைக்கதையை அழகாக செதுக்கியிருக்கிறார்.
கோபி சந்தர் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாயிருந்தாலும், அதை திரையில் பார்க்கும் இன்னும் கூடுதல் அழகாக இருக்கிறது. மதன் கார்க்கி வரியில் அமைந்த ‘தோழா’ பாடலின் வரிகள், மற்றும் அதைக் காட்சிப்படுத்தியவிதம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
வினோத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதமாக இருக்கிறது. ஒரு நல்ல படத்தை ரசிக்கும்படி செய்திருக்கிறது இவரது ஒளிப்பதிவு.
மொத்தத்தில் ‘தோழா’ அனைவர் மனதில் இடம்பிடிப்பான்.
0 comments:
Post a Comment