ஜீவா–நயன்தாரா நடித்துள்ள படம் ‘திருநாள்’. பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ள இந்த படத்தை கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரித்துள்ளார். ஸ்ரீ இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் ஜீவா பேசும்போது, “இன்று ஒரு நல்ல நாள். இந்த திருநாளில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் கதையை நீண்ட நாட்களுக்கு முன்பே கேட்டேன்.
இந்தப் படம் முழுக்க வேட்டியில்தான் வருகிறேன். நீண்டநாட்களாகவே லோக்கலாக இறங்கி படம் பண்ணவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி லோக்கலாக அமைந்த படம்தான் ‘திருநாள்’. இசையமைப்பாளர் ஸ்ரீ அழகழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.
நயன்தாராவுடன் 9 ஆண்டுகளுக்குப் பின் நடித்திருக்கிறேன். படத்தில் முதலிலேயே அவரைத்தான் நடிக்க வைக்க நினைத்தோம். ஆனால் அப்போது அவர் பிஸியாக இருந்தார். பிறகு வேறு நடிகைகள் எல்லாம் பார்த்தோம். சரிப்பட்டு வரவில்லை. ஆனால் தாமதமானாலும் நயன்தாராதான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.
பிறகு அவரே வந்து சேர்ந்துவிட்டார். முதல்நாள் படப்பிடிப்பு முதல் கடைசிநாள் படப்பிடிப்பு வரை இயக்குநர் சொன்னதை மட்டும்தான் ஆர்வமாகச் செய்தேன். இப்படத்தில் விருப்பமாக நடித்தேன். சுதந்திரமாக நடித்தேன். பிளேடு வாயில் வைப்பது போன்ற பல காட்சிகளில் சிரமப்பட்டு நடித்தேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும்’’ என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீ, ‘‘இதில் நாலு இனிமையான பாடல்கள் போட்டு இருக்கிறேன். கங்கை அமரன், டி.இமான் போன்ற இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்கள். எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்’’ என்றார்.
இயக்குநர் பி.எஸ்.ராம்நாத், “இது கும்பகோணத்தின் பின்னணியில் நடக்கும் ரவுடியிசம் சார்ந்த கதை. இதற்காக ஜீவாவை அவர் நடித்த கடந்த 25 படங்களில் அவர் செய்யாத நடை, உடை, பாவனை, தலைமுடி, சட்டை, நிறம், வேட்டி என எல்லாமும் மாற்றினோம். இதில் நயன்தாரா பள்ளி ஆசிரியையாக வருகிறார்’’ என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எம்.செந்தில்குமார், ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்து சாமி, பாடலாசிரியர் ஜீவன்மயில், கலை இயக்குநர் சீனுராவ், நடன இயக்குநர் பாலகுமார். ஆகியோரும் பேசினார்கள்.
0 comments:
Post a Comment