ஐ.நா.மனித உரிமை பேரவையின் 31ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் அதன் நீதிவிசாரணைகள் பற்றி பேசப்படவில்லை என ஆதங்கம் தமிழர்கள் மத்தியில் எழுந்திருக்கும் நிலையில் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு உள்ளேயேயும் வெளியேயும் தமிழர் தரப்பின் கவனஈர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனிவா அரங்கை நோக்கி பேரணி நடத்தப்படுவது வழக்கமாகும்.
இம்முறையும் கடந்த திங்கட்கிழமை 14ஆம் திகதி ஜெனிவா தொடருந்து நிலையத்திலிருந்து ஐ.நா.அரங்கை நோக்கி பேரணி நடத்தப்பட்டதுடன் போரின் அனர்த்தத்தை வெளிப்படுத்தி நிற்கும் மூன்றுகால் கதிரைக்கு கீழே அமைக்கப்பட்ட மேடையில் கவனஈர்ப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.
வழமைபோலவே இம்முறையும் சுவிட்சர்லாந்திலிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா, பெல்ஜியம் என ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
ஐ.நா.வுக்குள் சென்று தங்கள் மனஉணர்வுகளை வெளிப்படுத்த முடியாத மக்கள் ஐ.நா மனித உரிமை பேரவைக்கு வெளியே உள்ள அரங்கில் வருடாவருடம் தமிழ் மக்கள் நீதி கோரி வருகின்றனர்.
மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் தமிழர்கள் மட்டுமன்றி உலகில் ஒடுக்கப்பட்ட இனங்கள் விடுதலை வேண்டி நிற்கும் இனங்கள் சர்வதேசத்திற்கு தமது கோரிக்கையை வெளிப்படுத்தவதற்கு இந்த அரங்கை பயன்படுத்தி வருகின்றனர்.
வருடாவருடம் ஜ.நாவுக்கு முன்னால் ஈழத்தமிழர்கள் நடத்தும் பேரணியை ஐ.நாவுக்கு வரும் இராஜதந்திரிகள் கவனத்தில் எடுக்கிறார்களா? இந்த பேரணிகள் சர்வதேசத்தின் கண்களை திறந்திருக்கிறதா என்ற கேள்விகள் எழுலாம். ஆனால் ஈழத்தமிழர்கள் நடத்தும் இப்பேரணிகள் இந்த கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாகும்.
சர்வதேசம் தங்களின் உரிமைகளை கோரிக்கைகளை செவிமடுக்கிறதோ இல்லையோ எமது மக்களின் உரிமைக்கான குரல்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டவே இந்த பேரணிகள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இலங்கையில் இருக்கும் மக்களால் தமது உரிமைக்கான போராட்டங்களை நடத்தக்கூடிய சூழல் இல்லாத நிலையில் அவர்களின் குரலாகவே ஐ.நா.முன் புலம்பெயர் தமிழர்களின் குரல்கள் ஒலித்து வருகின்றன.
ஐ.நா.மனித உரிமை பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 29ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமையுடன் இக்கூட்டத்தொடர் நிறைவடைகிறது.
2009ஆம் ஆண்டுக்கு பிறகு ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் பிரதான நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விடயங்கள் இடம்பெற்று வந்தன. ஆனால் இம்முறை பிரதான நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான எந்த விடயமும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இலங்கை தொடர்பான தீர்மானங்கள் அல்லது அத்தீர்மானங்கள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுவது வழங்கமாகும்.
கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் பற்றி நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் முன்னேற்றங்கள் பற்றி முழுமையான அறிக்கை 18 மாதங்களில் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிப்பார் என்ற எதிர்பார்ப்பு மனித உரிமை ஆர்வலர்களிடம் காணப்பட்டது. ஆனால் அந்த முன்னேற்ற அறிக்கையை இம்முறை சமர்ப்பிப்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தவிர்த்துக்கொண்டார்.
ஐ.நா.மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பாக இலங்கை எடுத்திருக்கும் நடவடிக்கைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிப்பதை தவிர்த்தது மட்டுமன்றி ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் ஆரம்ப உரையில் கூட ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசைன் இலங்கை தொடர்பாக ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை.
ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் ஆணையாளர் மனித உரிமை பிரச்சினைகள் உள்ள நாடுகள் பற்றி தனது உரையில் குறிப்பிடுவது வழக்கமாகும். கடந்த 10வருடங்களாக ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் ஆணையாளரின் ஆரம்ப உரையில் இலங்கை விடயம் முக்கிய பேசுபொருளாக இருந்து வந்திருக்கிறது. மனித உரிமை ஆணையாளரின் ஆரம்ப உரையில் ஆகக்குறைந்தது இரு நிமிடங்களாவது இலங்கையின் மனித உரிமை நிலமைகள் பற்றி சுட்டிக்காட்டப்படுவது வழக்கமாகும். அதனை தொடர்ந்து நாடுகளின் பிரதிநிதிகளின் ஆரம்ப உரை இடம்பெறும் போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மற்றும் ஆசிய அரபு ஆபிரிக்க நாடுகள் இலங்கைக்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் தமது கருத்துக்களை முன்வைப்பது வழங்கமாகும்.
இலங்கையின் அரச பிரதிநிதிகளும் தமக்கான ஆதரவு தளத்தை தேடுவதற்காக இராஜதந்திரிகளை சந்திப்பதற்காக பறந்து திரிவதை கடந்த காலங்களில் காணமுடிந்தது.
ஆனால் இம்முறை இலங்கையில் மிகப்பெரிய அற்புதம் நிகழ்ந்து விட்டதை போலவும் அங்கே தமிழர்களுக்கு அனைத்து நீதியும் உரிமையும் கிடைத்து விட்டதை போன்ற ஒரு தோற்றப்பாட்டையே ஐ.நா.மனித உரிமை ஆணையாளரும் இராஜதந்திரிகளும் வெளிப்படுத்தி நிற்பதையே அவதானிக்க முடிகிறது.
ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முதல் மனித உரிமை ஆணையாளர் ஹசன் இலங்கைக்கு சென்று அங்குள்ள நிலமைகளை அவதானித்து விட்டு திரும்பியிருந்தார்.
இலங்கை விஜயம் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் ஆரம்ப உரையில் குறிப்பிடுவார் என எதிர்பார்ப்பு ஒன்று பரவலாக காணப்பட்டது.
ஆனால் இம்முறை ஆணையாளர் தனது 20 நிமிடத்திற்கு மேற்பட்ட ஆரம்ப உரையில் இலங்கை தொடர்பாக மௌனம் காத்த அதேவேளை அதனை தொடர்ந்து உரையாற்றிய அமெரிக்கா, பிரித்தானியா உட்பட நாடுகளின் இராஜதந்திரிகளும் இலங்கை தொடர்பாக எதனையும் பேசவில்லை.
ஆரம்ப உரையில் இலங்கை பற்றி எதனையும் குறிப்பிடாத மனித உரிமை ஆணையாளர் ஹசன் இன்னொரு அமர்வில் இலங்கை தொடர்பாக குறிப்பிட்ட விடயங்களும் தமிழர் தரப்பிற்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்திருந்தது.
புதிய அரசாங்கத்திற்கு நற்சான்று பத்திரம் வழங்கும் வகையிலேயே அவரின் கருத்துக்கள் அமைந்திருந்தன.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டு வருவதாகவும் நல்லிணக்கத்துக்கான சக்திவாய்ந்த அடையாளமாக, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதைக் கருத்திக் கொள்ளலாம் என்றும் இராஜதந்திரிகள் மத்தியில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டார்.
தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் அல்லது நீதிக்கான போராட்டத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் புரிந்து கொண்டது இவ்வளவுதானா என்ற கேள்வியும் எழுகிறது.
தமிழில் தேசிய கீதம் பாடுவதை தமிழர்கள் தமக்கு கிடைத்த வெற்றியாகவோ அல்லது நல்லிணக்கமாகவோ கருதியது கிடையாது என்பதை இலங்கைக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின்பும் ஆணையாளரால் ஏன் புரிந்து கொள்ள முடியாமல் போனது?
இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் தீர்வுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் அடுத்த சில மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவையாக இருக்கும். பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நிலையான அமைதியை நோக்கி இலங்கை சொந்தப் பயணத்தை மேற்கொள்கிறது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் {ஹசைன் கூட்டத்தொடரில் நடந்த அமர்வு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இத்தகைய நகர்வுகள் இருந்தாலும், இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிப்பது, தடுப்புக்காவலில் உள்ளவர்களின் வழக்குகளை மீளாய்வு செய்வது, காணாமற்போயுள்ளவர்களின் விவகாரங்களுக்கு தீர்வு காண்பது போன்ற ஏனைய விடயங்களில், வேகமாக முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
பேரவையின் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு விரிவான இடைக்கால நீதிச் செயல்முறைகளை வரைவது தொடர்பான தேசிய கலந்துரையாடல்களை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதால் அடுத்துவரும் மாதங்கள் முக்கியமானவையாக இருக்கும்.
கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் இல்லாத சூழலில் இது நடப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில், அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை கேட்க முடியும்.
இலங்கையின் முன்னேற்றங்கள் தொடர்பாக, எதிர்வரும் யூன் மாதம் நடைபெற இருக்கும் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 32ஆவது அமர்வில் அறிக்கையிடுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன் என்று மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் {ஹசைன் தெரிவித்துள்ளார்.
32ஆவது கூட்டத்தொடரில் ஆணையாளர் சமர்ப்பிக்க இருக்கும் அறிக்கை இடைக்கால அறிக்கையாகவே இருக்கும். முழுமையான அறிக்கை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறப்போகும் 34ஆவது கூட்டத்தொடரிலேயே சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஆணையாளரும் சரி அமெரிக்கா பிரித்தானியா போன்ற ஐ.நா.வை நகர்த்தும் வல்லரசு நாடுகளின் இராஜதந்திரிகளும் சரி கடந்த காலங்களில் இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாடுகளில் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், புதிய அரசு பதவி ஏற்றதன் பின்னர் முதன் முறையாக இலங்கையைப் பாராட்டியுள்ளதுடன் புதிய நல்லாட்சி அரசு மீது அதீத நம்பிக்கையை சபையில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
ஐ.நா.மனித உரிமை பேரவையின் அல்லது அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகள் இலங்கை தொடர்பாக அண்மைக்காலத்தில் முன்வைத்து வரும் கருத்துக்கள் கடந்த காலங்களில் அவர்களின் செயல்படுகளில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் பற்றி சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் பக்கசார்பற்ற நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறி வந்த அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் காட்டி வரும் மௌனமும் இலங்கைக்கு வழங்கி வரும் நற்சான்று பத்திரங்களும் பலத்த சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது.
ஆட்சி மாற்றம் ஒன்றே இந்த நாடுகளின் இலக்காக இருந்திருக்கின்றன என்பது ஐ.நா.மனித உரிமை பேரவையில் இவர்களின் நடவடிக்கைகளை பார்க்கும் போது மிகத்தெளிவாக தெரிகிறது.
இவ்வாறான நிலையில் தமிழர் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்குமா அல்லது அதனுடன் தொடர்புபட்டவர்கள் தண்டிக்கப் படுவார்களா என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
ஆட்சி மாற்றத்தின் பின் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டது போன்ற மாயத்தோற்றம் இந்திய உட்பட உலக நாடுகளில் திட்டமிட்ட பரப்பபட்டு வருகிறது.
இலங்கையின் வடக்கு கிழக்கில் இராணுவம் கைப்பற்றி வைத்திருந்த தமிழர்களின் நிலங்கள் அனைத்தும் உரிய மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்தியாவின் முயற்சியால் இது கைகூடியிருக்கிறது என்றும் பாரதிய ஜனதாக்கட்சியை சேர்ந்த ராஜா என்பவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
பலாலி விமானப்படை தளத்தை சுற்றியே 7ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட மக்களின் நிலங்கள் இன்னும் கையளிக்கப்படாத நிலையில் சொற்ப பகுதி நிலங்களை மட்டும் விடுவித்து விட்டு தமிழர்களின் நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட்டிருப்பதாக இந்தியா பிரசாரம் செய்கிறது.
இதேபோன்றுதான் மேற்குலக இராஜதந்திரிகள் மத்தியிலும் இலங்கை தொடர்பான ஒரு மாயத்தோற்றம் அண்மைக்காலமாக காட்டப்பட்டு வருகிறது.
இதேவேளை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றையும் சந்தித்தாக கூறப்படுகிறது. இந்த அமைப்புக்களுடனான சந்திப்பு சுமூகமாக இடம்பெற்றதாகவும் அடுத்த மாதம் கொழும்பில் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மகாநாடு ஒன்று நடைபெறும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருக்கிறது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலம்பெயர் அமைப்புக்கள் என யார் யாரை சந்தித்தார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்தித்தார் என்பதை ஜெனிவாவில் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் சிலர் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இராணுவ அடக்குமுறைகளும் ஆக்கிரமிப்புக்களும் இன்னமும் தொடர்கின்ற போதும் தமது பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு வீதி வீதியாக தயார்மார் அலைகின்ற போதும் தமிழில் தேசிய கீதம் பாடியதால் நல்லிணக்கம் ஏற்பட்டு விட்டது என நற்சான்றிதழ் கொடுப்போரால் நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என எப்படி நம்பமுடியும்?
ஐ.நா.மனித உரிமை பேரவையில் இருந்த நம்பிக்கைகளும் அற்றுப்போகின்ற நிலையே இன்று நிலவி வருகிறது. இனி வரும் காலங்களில் ஈழத்தமிழர் விவகாரம் ஐ.நா சபையில் மௌனிக்கப்பட்டாலும் ஆச்சரிப்படுவதற்கு இல்லை.
20.03.2016 அன்று கொழும்பு தமிழ்தந்தி பத்திரிகையில் வெளியான கட்டுரை
0 comments:
Post a Comment