பயரங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதற்குப் பதிலாக சர்வதேச தரத்திலான
சட்டமூலமொன்றை எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
காணாமல்போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக சர்வதேச தரத்திலான சட்டமொன்று கொண்டுவரப்படும். இது தொடர்பான சட்டவரைபொன்று சட்டஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் இச்சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர்தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை அமைச்சர்கள் சிலர் நேரில் சென்று சந்திக்கவிருப்பதுடன், நீதி அமைச்சர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இவ்விடயத்தில் துரித நடவடிகை எடுக்குமாறு கோரவிருக்கின்றார்.
அதேநேரம், காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகமொன்றை அமைப்பது குறித்து ஐ.சி.ஆர்.சியுடன் இணைந்து நாம் செயற்பட்டு வருகின்றோம். கடந்த அரசாங்கங்கள் காணாமல்போனவர்கள் விடயத்தில் செய்த தவறுகள் மீளவும் ஏற்படக்கூடாது என்பதில் அரசாங்கம் கூடுதல் அக்கறையுடன் இருக்கின்றது. காணாமல்போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு கடந்த கால அரசாங்கங்களால் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டபோதும், இவை அவசர அவசரமாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஆராயாமல் நியமிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் தமது அரசாங்கம் காணாமல்போனவர்கள் விவகாரத்தின் ஆழத்தை அறிந்து சரியான நடவடிக்கை எடுக்கவுள்ளது.
உண்மையைக் கண்டறிவது தொடர்பான செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நிபுணர்கள் குழுவொன்று அங்கு சென்றுள்ளது. எதுவாக இருந்தாலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்காகவும், சர்வதேசத்தை திருத்திப்படுத்துவதற்காகவும் நாம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை. அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது இலங்கையின் தேவைக்கு அமைவானதாகவும், நாட்டுக்கென்ற தனித்துவத்தைக் கொண்டதாகவும் அமையும்.
செப்டெம்பர் மாதம் பலவந்த காணாமல்போதல் குறித்த ஐ.நா ஒப்பந்தத்தில் நாம் கைச்சாத்திட்டிருந்தோம். பல வருடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பலவந்த காணாமல்போதல்கள் தொடராமல் இருப்பதற்காக இதில் கைச்சாத்திட்டிருந்தோம். இது தொடர்பான சட்டமொன்றையும் நாம் எதிர்வரும் மாதங்களில் கொண்டுவரவுள்ளோம். தொடர்ச்சியாக இடம்பெற்ற இச்சம்பவங்களைக் கட்டுப்படுத்த கடந்த அரசாங்கம் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
காணமல்போனவர்களுக்கு சான்றிதழ் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
எனினும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான அங்கீகாரம் அவசியம்.
இவ்வாறான நிலையில் காணாமல்போனவர்கள் விவகாரம் குறித்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் உரிய நடவடிக்கையை எடுக்க முடியும் என்றார்.
0 comments:
Post a Comment