மட்டக்களப்பு – காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6ம் குறிச்சி பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும் வளர்புத் தாயும் நேற்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி – ஆறாம் குறிச்சி பதுறியா பகுதியில் வசிக்கும் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத் தாய் நெருப்பால் சூடு வைத்ததாகவும் இதனால், அவரது உடம்பில் எரிகாயம் காணப்படுவதாகவும், காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (11) தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரை விசாரித்ததுடன், சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாயிடமும் விசாரணை செய்தனர்.
பின்னர், சிறுமியை சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, தந்தையையும் தாயையும் கைதுசெய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் தாய் சுகவீனமுற்ற நிலையில் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்ததால், சிறுமியின் தந்தை மற்றுமொரு திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதன்படி முதல் மனைவியின் இரண்டு பிள்ளைகளும் வளர்ப்புத் தாயிடம் வளர்ந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment