மன்னிக்க மறுக்கும் உங்களால் எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். நீங்கள் தமிழ் மக்களின் வாக்குப் பிச்சையினால் தானே ஜனாதிபதியாக வந்தீர்கள் அதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
கொள்கையற்ற தமிழ்த் தலைமைகளால் நீங்கள் எல்லோரும் எம்மில் சவாரி செய்கிறீர்கள் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல் காட்புணர்ச்சி காரணமாக கடந்த பல வருடங்களிற்கு மேலாக சிறைகளிலே அவர்கள் வாழ்வை வதைக்கிறீர்களே.
மூன்றாவது தடவையாகவும் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதை உங்கள் மனச்சாட்சி இனச்சாட்சி கடந்து அவர்கள் மீது கருணை கூராதது ஏன்?
எய்தவனே இல்லாத போது அம்பினை நோவது அதர்மயுத்தமாக தெரியவில்லையா? நீங்களும் ஒரு பெற்றோர் என்பதை மறந்து விட்டீர்களா? அல்லது இதுதான் சிங்கள தேசத்து ஒவ்வொரு குடிமகனின் மனோநிலையா? மன்னிக்க மறுக்கும் உங்களால் எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். நீங்கள் தமிழ் மக்களின் வாக்குப் பிச்சையினால் தானே ஜனாதிபதியாக வந்தீர்கள் அதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் கொள்கையற்ற தமிழ்த் தலைமைகளால் நீங்கள் எல்லோரும் எம்மில் சவாரி செய்கிறீர்கள்.
உங்களால் பொன்சேகாவிற்கும் சிராணி பண்டாரநாயக்காவிற்கும் மன்னிப்பளித்து பதவி வழங்க முடியுமென்றால் அப்பாவி தமிழ் இளைஞர்களிற்கு ஏன் மன்னிப்பு வழங்க முடியாது.
உங்களைத் தெரிவு செய்த தமிழ் மக்களிற்கு நீங்கள் இதுவரை செய்தது என்ன? சிங்கள தலைமைகள் தமிழர்கள் என்றல்ல மனிதர்கள் என்றாவது எம்மை நினைக்கிறீர்களா? அதனால் தானே இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய வரலாற்றை மறந்துவிடாதீர்கள். சிறைக்கைதிகளை விடுவித்தீர்களா? இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தீர்களா?
காணாமல் செய்யப்பட்டோர் மற்றும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டோருக்கு இதுவரை நீங்கள் காட்டிய நீதி என்ன? முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீங்கள் பெற்றுக்கொடுத்த நியாயம் என்ன? சம்பூர் மக்களின் நிலையும் நடுவீதியிலே தான்.
தமிழ் மக்களும் இந்த நாட்டு பிரஜைகள் என்பதை நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு தாங்கள் எந்த நல்லெண்ண முயற்சியும் ஏற்படுத்தவில்லை. இது தானா உங்கள் நல்லாட்சியின் விசித்திரம்?
எனவே நீங்கள் சிங்கள கடும் கோட்பாட்டாளர்களை திருப்திப்படுத்துவதுதிலும் உங்கள் அரசியல் எதிர் காலத்தையும் கருத்தில் கொண்டே மனசாட்சியற்றவராக இருக்கின்றீர்கள். என எங்களால் எண்ணத் தோன்றுகின்றது. ஆகவே நீங்கள் மோடிபோல் உடையணிந்தோ மண்டேலா போல் வேடம் போடுவதிலோ எந்த அர்த்தமுமில்லை.
செயலில் காட்டுங்கள் அப்போதுதான் உலகம் உங்களை திரும்பிப் பார்க்கும். எனவே உங்கள் ஊனக்கண்ணால் பார்த்து மனசாட்சிக்கு வேலை கொடுத்து மூன்றாவது தடவையாக உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் உள்ளவர்களை , கருணை கூர்ந்து மன்னியுங்கள் காலம் உங்களை கருவேப்பிலை அல்ல கட்டுமரத்தில் ஏற்றும் என்னும் நம்பிக்கையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment