சட்டவிரோத சிறுநீரக விற்பனை தொடர்பாக கொழும்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் பயன்படுத்திய மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்ட இந்திய ஆவணங்கள் போலியானவைஎன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ்களில் பதியப்பட்டுள்ள முத்திரைகள் தொடர்பில் சந்தேகம் காணப்படுவதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி, இது குறித்து சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியிருப்பதாகவும் கூறினார்.
இந்த ஆவணங்களில் சில இலங்கையில் தயாரிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் தெரிவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த சந்தேக நபர்கள் முன்வைத்த சான்றிதழ்களில் இந்திய மத்திய அரசாங்கம், பிராந்திய அரசாங்கத்திற்கு உரித்தான வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார ஸ்தாபனங்களின் அலுவலக முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்தியாவைச் சேர்ந்த 8 பேர் கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்திலுள்ள தொடர்மாடியில் தங்கியிருந்தபோது கடந்த 5ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இவர்கள் கொழும்பு புதுக்கடை மாஜிஸ்திரேட் இலக்கம் 1 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது மிரிஹானையில் உள்ள தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்படி உத்தரவிடப்பட்டது.
அத்துடன் குறித்த இந்தியர்கள் 8 பேரும் சிறுநீரகம் போன்று உடலில் உள்ள வேறுசில அங்கங்களையும் விற்பனை செய்திருக்கின்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கைதுசெய்யப்பட்டவர்களின் வயிற்றுப்பகுதியில் காணப்படும் வெட்டுக்காயங்களை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டது.
இது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் சில தினங்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு – வெள்ளவத்தையில் கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் 8 பேரது விபரங்கள் -
01. விஜினிகிரி லக்ஷ்ன் குமார் – விசாகா பட்டணம்
02. குப்பன்திலி இராமசிம் இராமச்சந்திரன் – பெங்களூர்
03. தோகிபதி சண்முகபவன் ஸ்ரீனிவாஸ் – ஆந்திரா பிரதேசம்
04. மொஹமட் இஸ்தியாஸ் கான் – உத்தர பிரதேசம்
05. யதலபாரி சாய் வாமேஸ் கிரிஷ்ணா – ஹைதராபாத்
06. ராகவேந்திர உப்பரா – கர்நாடகா
07. நந்தகிஷோர் - ஹைபராபாத்
08. டெப்பிலா விக்கிராஜா – சரோடா சத்திஸ்கார்
0 comments:
Post a Comment