வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து 700 ஏக்கர் காணி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களுக்கு மீள கையளிக்கப்படவுள்ளது.
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச சபைப் பிரிவுகளில் மேற்படி 700 ஏக்கர் காணிகளை மக்களுக்குக் கையளிப்பதுடன் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65,000 வீடுகளுக்கான காணிகளையும் பார்வையிடவுள்ளார். 12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 620 குடும்பங்களுக்கு இன்றைய தினம் ஜனாதிபதியினால் காணிகள் மீள கையளிக்கப்படவுள்ளது.
அத்துடன் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பிரபல பாடசாலைகளான நடேஸ்வரா கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தையும் விடுவித்து கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார். யாழ். மாவட்டத்தில் அரசாங்கம் 65,000 வீடுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிட்டு அதன் மாதிரி வீடொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அதனை ஜனாதிபதி இன்று பார்வையிடுவார்.
அப்பிரதேசத்தின் கால சூழ்நிலைக்கேற்றவாறு அவ்வீடுகள் அமைய வேண்டுமென்பது மக்களின் வேண்டுகோள் என்பதால் மாதிரி வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு அவ்வீட்டை ஜனாதிபதி இன்று பார்வையிடவுள்ளார்.
கோப்பாய் பிரதேச சபையில் இன்று இறுதியாக 200 ஏக்கர் காணிகள் மக்களுக்குக் கையளிக்கப்படுவதோடு அங்கு உயர் பாதுகாப்பு வலயம் முடிவுக்கு வருகிறது. வடக்குக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அரசாங்கத்தினால் அங்கு நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிடவுள்ளதுடன் வடமாகாண முதலமைச்சர், மாகாண ஆளுநர் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment