ஒற்றுமை என்பது தமிழர் தரப்பில் இப்போது அல்ல எப்போதும் ஏற்படாது- இரா.துரைரத்தினம்மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் கடந்த வருடம் லண்டனுக்கு விஜயம் செய்திருந்தார். அச்சமயத்தில் லண்டனில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.
அப்போது பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுக்கு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தெரியாது என கூறியிருந்தார்.
கள யதார்த்தங்களை புரியாது செயல்படுபவர்களுக்கு எலிசபெத் மகாராணியின் இந்த கூற்று மிகப்பொருந்தமானதாகும்.
மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களில் சிலர் குறிப்பாக சில தமிழர் அமைப்புக்களை சார்ந்தவர்கள் கள யதார்த்தங்களோ சர்வதேச அரசியல் போக்குகளோ புரியாதவர்களாக அவர்களின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
கடந்த முதலாம் திகதி புதுவருட தினத்தன்று சுவிட்சர்லாந்தில் உள்ள விடுதலைப்புலிகளின் அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழு புத்தாண்டும் புதுநிமிர்வும் என்ற கலை நிகழ்ச்சியை நடத்தியிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் துணைப்பொறுப்பாளர் ஆற்றிய உரை எலிசபெத் மகாராணியின் கூற்றை நினைவு படுத்தியது.
விடுதலைப்புலிகளின் இலட்சியமான தமிழீழமே முடிந்த முடிவு. தமிழீழத்தை தவிர வேறு எந்த தீர்வுக்கும் நாம் இணங்க மாட்டோம். எந்த விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமில்லை, சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கும் தீர்வை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழீழம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என நீண்டு சென்றது அவரின் உரை.
தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சியமோ அல்லது தமிழீழத்திற்காக அவர்கள் நடத்திய போராட்டமோ தவறு என நான் இங்கு சொல்லவரவில்லை. ஆனால் 2009 மே மாதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதத்தை கைவிடுவதாக அறிவித்த பின்னர் விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் தமிழீழ தனிநாட்டு கோரிக்கையை எந்த தளத்தில் முன்வைக்க முடியும்?
நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழீழ அரசியல் யாப்பு ஒன்றை வரையப்போவதாக அறிவித்திருக்கிறது. அது தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியல் யாப்பாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்களான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழீழம் தான் முடிந்த முடிவு. அதை தவிர வேறு எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என அறிவித்திருக்கின்றன.
தமிழீழம் என்பது ஈழத்தமிழ் மக்களின் விருப்பமாக இருக்கலாம். விரும்பங்கள் அனைத்தும் கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்பதோ அல்லது அது தான் வேண்டும் வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதும் களயதார்த்தங்களையும் சர்வதேச அரசியலையும் புரிந்து கொள்ளாத கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களின் வாதமாகவே இருக்கும்.
மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான அரசாங்கம் பதவி ஏற்று ஒரு ஆண்டு பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் அரசியல் யாப்பை மாற்றி அமைக்கப்போவதாகவும் இந்த அரசியல்யாப்பு மாற்றத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கப்போவதாகவும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இந்த தீர்வு எது என இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களுக்கான தீர்வை மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான அரசாங்கம் வழங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மலைபோல் நம்பியிருக்கிறார். இதனால் தான் 2006ல் தீர்வு வந்து விடும் என கடந்த பொதுத்தேர்தல் காலம் தொடக்கம் சம்பந்தன் சொல்லிவருகிறார்.
அரசாங்கம் முன்வைக்கப்போகும் தீர்வு என்ன, அந்த தீர்வு திட்டத்திற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனைகளை வைத்திருக்கிறதா என்றும் யாருக்கும் தெரியாது. புதிய அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையிலான உறவு மூடு மந்திரமாகவே இருக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் என விழிப்பது கூட பொருத்தமாக இருக்குமா என யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது பல தமிழ் கட்சிகள் சேர்ந்த கூட்டு. அந்த கூட்டு இப்போது உடைந்து உலைக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாக தமிழரசுக்கட்சியும் ரெலோவுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற நிலைக்கு வந்துள்ளது. ரெலோவும் இந்த கூட்டில் தொடர்ந்து நிலைக்குமா என்பதும் யாருக்கும் தெரியாது.
தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் பற்றி சொல்லியிருக்கிறோம். அதையே நாம் அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கிறோம் என சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகிறது.
வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வு ஒன்றையே தாம் அரசாங்கத்திடம் முன்வைத்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
ஆனால் கடந்த தேர்தல் காலத்தில் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வு என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் கீழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரைகுறைத்தீர்வையே ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள், எனவே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய வகையில் தீர்வு திட்டத்தை தயாரிக்கப்போவதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்திருக்கிறது. இதற்கான உப குழுவையும் அந்த அமைப்பு அமைத்திருக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருக்கும் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வு அரைகுறைத்தீர்வு என்பதாலேயே தாம் தமிழ் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க கூடிய தீர்வை முன்வைக்கப்போவதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்திருக்கிறது.
வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வுக்கு அப்பால் செல்வதாக இருந்தால் அது பிரிந்து செல்லும் தனிநாட்டு கோரிக்கையா என்பது தெரியவில்லை.
தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தை யாரும் தயாரிக்க முடியும். ஏற்கனவே நான் குறிப்பிட்டிருப்பதன் படி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழீழம் தான் முடிந்த முடிவு என்று கூறியிருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழீழம் தான் முடிந்த முடிவு. அதற்கான யாப்பை தயாரிக்கப் போகிறோம் என அறிவித்திருக்கிறார்கள்.
சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி மற்றும் ரெலோ கூட்டான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி என அறிவித்திருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் இம்மாதம் 31ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் பெரும்பாலும் தமிழீழத்திற்கு இணையானதாகவே இருக்கும். ஏனெனில் தமிழ் மக்கள் பேரவையை பின்னணியில் இருந்து இயக்கி கொண்டிருப்பவர்கள் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பாகும்.
கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற வேண்டும் என செயல்பட்ட மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் தோல்விக்கு பின்னர் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது என்பது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலருக்கும் தெரிந்த விடயம்.
தமிழீழம் தான் முடிந்த முடிவு என அறிவித்திருக்கும் மேற்குலக நாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகள் தரப்பினர் தமிழ் மக்கள் பேரவை தமிழீழத்திற்கு குறைவான தீர்வை முன்வைப்பதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. எனவே தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்த ஒரு நாடு இரு தேசம் என்ற யோசனையை ஒத்ததாகவே இருக்கும் என நம்பபடுகிறது.
ஒரு நாடு இரு தேசம் என்ற கோரிக்கையை விட அதற்கு மேலோ ஒரு படி சென்று தமிழீழம் தான் முடிந்த முடிவு என்றும் தீர்வு திட்டத்தை தயாரிக்க முடியும்.
ஒவ்வொருவரும் தமக்கு விரும்பமான ஒரு திட்டத்தை தயாரிக்கலாம். ஆனால் இந்தத் தீர்வுத் திட்டங்கள் நடைமுறை சாத்தியமா என இவர்கள் பார்ப்பதாக தெரியவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருக்கும் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி என்பதே எட்டமுடியாத இலக்கு என்ற அவலமான நிலையில் தான் கள யதார்த்தம் காணப்படுகிறது.
எந்த தீர்வு திட்டத்தையும் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசியே சமாதான சூழல் ஒன்றிலேயே நகர்த்த முடியும்.
தமிழர்களுக்கான தீர்வு என்பது தமிழர்கள் தீர்மானிக்கின்ற விடயமாக அல்லாமல் சர்வதேசம் தீர்மானிக்கின்ற சூழலை தற்போது உருவாகி வருகிறது. சர்வதேசம் என்ற அடைமொழிக்குள் வரும் அமெரிக்கா பிரித்தானியா போன்ற வல்லரசு நாடுகளும் பிராந்திய வல்லரசாக இருக்கும் இந்தியாவும் தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு வழங்கப்பட வேண்டும் என எண்ணுகின்றனவோ அதுவே தீர்வாக முன்வைக்கப்படும். சர்வதேசம் ஒரு போதும் சிறிலங்கா அரசாங்கத்துடன் முரண்பட்டுக்கொண்டு செயல்பட போவதில்லை.
இதுதான் கள யதார்த்தம். தமிழீழம் என்றும் சமஷ்டி என்றும் திட்டங்களை முன்வைத்தாலும் சிறிலங்கா அரசாங்கமும் வல்லரசு நாடுகளும் தீர்மானிக்கும் ஒரு திட்டம் தான் தமிழர்கள் முன் வைக்கப்படும்.
என்னைப் பொறுத்தவரை கடந்த பொதுத்தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வு என்பது கூட எட்ட முடியாத இலக்காகவே காணப்படுகிறது.
வடக்கு கிழக்கு இணைப்பு கூட சாத்தியமாகுமா என்ற நிலைதான் காணப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் மக்களும் சிங்கள மக்களும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு இணங்கி வருவார்களா? இதை காரணம் காட்டி வடக்கு கிழக்கு இணைப்பை சிறிலங்கா அரசாங்கமும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளும் நிராகரிக்கும் வாய்ப்பே அதிகம் காணப்படுகிறது.
இருக்கின்ற மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைத்துள்ளோம் கன கணக்கு முடிப்பதற்கே சிறிலங்கா அரசாங்கம் முற்பட்டிருக்கிறது. இதை சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளலாம்.
தமிழர்களின் பலம் பலவீனங்களையும் இலங்கையின் புவியியல் அரசியல் சூழல்களையும் புரிந்து கொண்டு சர்வதேசத்தையும் சிறிலங்காவையும் பகைத்துக்கொள்ளாத தீர்வைப்பெற்று அடுத்த கட்டத்திற்கு நகர்வதே அரசியல் விவேகமாகும்.
தமிழீழம் தான் முடிந்த முடிவு. இதை தவிர எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது போரினால் மிக நொந்து போன மக்களை மேலும் சாகடிக்கும் செயலாகும்.
இந்த நேரத்தில் தான் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடிய களயதார்த்தங்களை உணர்ந்த தீர்வு திட்டம் ஒன்றை தமிழ் தரப்பு ஒற்றுமையுடன் ஒரே அணியாக நின்று முன்வைக்க வேண்டும். இல்லையேல் தமிழர்கள் பல கூறாக பிரிந்து நின்று ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் என நியாயமான கோரிக்கைகளை கூட தட்டிக்கழிக்கும் நிலை ஏற்படலாம்.
ஆனால் அந்த ஒற்றுமை என்பது தமிழர் தரப்பில் இப்போது அல்ல எப்போதும் ஏற்படாது என்பதுதான் மிகப்பெரிய அவலம்.
பலமான அரசியல் சக்தியாக இருக்க வேண்டும் என 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிங்கள தேசம் எதிர்பார்த்தது போல இரண்டாக பிளவு பட்டு தமிழ் மக்கள் பேரவையாக உருவெடுத்துள்ளது.
சிங்கள தேசமும் தமிழ் மக்களை அழித்த சக்திகளும் இத்தோடு நின்றுவிடப்போவதில்லை, ஆயுதப்போராட்ட காலத்தில் பல இயக்கங்கள் உருவாகி தங்களுக்குள் மோதி அழிந்து போவதற்கு எந்த சக்திகள் துணைநின்றவோ அந்த சக்திகள் இப்போதும் உயிர்ப்புடன் செயல்படுகின்றன.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com