புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், செய்த படுகொலைகளை விசாரிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை கோருமா?



வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்ரவன் அவர்களை இணைத்தலைவராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் பணிகளில் முக்கியமான ஒன்று கடந்த காலத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதியாளர்களின் முன் நிறுத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மட்டுமன்றி அதற்கு முற்பட்ட காலத்தில் கல்விமான்கள், பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள் என பலரை சிறிலங்கா இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்துடன் இணைந்து தமிழ் இயக்கங்கள் படுகொலை செய்தன.

இதில் தமிழ் மக்கள் பேரவைக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. அதுவும் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் துணிச்சலுடனும் நேர்மையுடனும் செய்யப்பட வேண்டிய பொறுப்பு உண்டு.
தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், மற்றும் புளொட் இயக்கங்கள் செய்த படுகொலைகளை போர்க்குற்றங்களை விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு அதன் இணைத்தலைவராக இருக்கும் விக்னேஸ்வரன் போன்றவர்களுக்கு உண்டு.

தங்களுக்கு உள்ளேயே கொலைகாரர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு நீதி கோரி நிற்க முடியும்? எனவே தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய பங்காளிகளாக இருக்கும் புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கங்கள் செய்த படுகொலைகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டியது தமிழ் மக்கள் பேரவையின் கடமையாகும்.

புளொட் இயக்கம் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடியும் வரை இராணுவத்தினருடன் நேரடியாக இணைந்து தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர் என்பது வெளிப்படையான விடயம் என்றாலும் புளொட் இயக்கம் செய்த மிகக்கொடூரமான கொலைகள் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

யாழ். நகரில் புளொட் இயக்கம் செய்த கோரக்கொலைகளில் ஒன்று கரவெட்டி கன்பொல்லை வீதியை சேர்ந்த 23வயதுடைய இராசரத்தினம் இராஜேஸ்வரன் என்ற இளைஞரை 1999ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி கடத்தி சென்று அந்த இளைஞரை சித்திரவதை செய்து அவரின் தலையை வெட்டி யாழ். வைத்தியசாலை வீதியில் போட்ட சம்பவம் முக்கியமானதாகும்.

யாழ். நகரில் உள்ள புடவைக்கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த இராஜேஸ்வரன் என்ற இளைஞர் வேலை முடிந்து கரவெட்டிக்கு சென்று கொண்டிருந்த போது காணாமல் போனார்.

அந்த இளைஞரை கடத்தி சென்ற புளொட் இயக்கத்தினர் நெல்லியடியில் உள்ள புளொட் முகாமில் வைத்து சித்திரவதை செய்தனர். இரண்டு நாள்கள் வைத்து சித்திரவதை செய்த பின் அந்த இளைஞரின் தலையை வெட்டி எடுத்து சென்று யாழ். வைத்தியசாலை வீதியில் போட்டனர். 23ஆம் திகதி அதிகாலை உடல் இல்லாத தலை மீட்கப்பட்டது. சித்திரவதை செய்து படுகொலை செய்வதில் பிரசித்தி பெற்ற புளொட் இயக்கத்தினர் யாழ். நகர மக்களுக்கு அச்சத்தை உருவாக்கும் வகையிலேயே தலையை யாழ். நகரில் போட்டனர் என அக்காலப்பகுதியில் பலரும் பேசிக்கொண்டனர்.

பின்னர் அத்தலைக்கு உரிய உடல் புளொட் இயக்கத்தின் நெல்லியடி அலுவலக மலசல கூட குழியிலிருந்து மீட்கப்பட்டது. அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட போதிலும் புளொட் இயக்கம் அரச படைகளுடன் சேர்ந்து இயங்கிய காரணத்தால் அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
இக்கொலையின் மூலம் யாழ். நகர மக்களை அச்சத்தில் வைத்திருக்கலாம், பயமுறுத்தி வைத்திருக்கலாம் என எண்ணிய புளொட் இயக்கத்திற்கு அது தோல்வியாகவே அமைந்தது. இக்கொலை உட்பட யாழ். நகரில் அக்காலப்பகுதியில் புளொட் இயக்கம் செய்த கொலைகளால் யாழ். குடாநாட்டில் புளொட் இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

யாழ். குடாநாட்டில் புளொட் இயக்கத்தை மக்கள் வெறுத்து ஒதுக்கியதால் யாழ். குடாநாட்டை விட்டு வெளியேறி வவுனியாவில் நிலை கொள்ள வேண்டி ஏற்பட்டது.

அதேபோன்று வவுனியாவில் மாணிக்கதாசன் தலைமையிலான புளொட் கொலைக்குழு கடத்தல் கப்பம் பெறுதல், பாலியல் பலாத்காரம், படுகொலை என அவர்கள் செய்த அட்டூழியங்களின் பட்டியல் மிக நீளமானது.

அது போன்று மட்டக்களப்பில் புளொட் இயக்கம் செய்த படுகொலைகள், அட்டூழியங்கள் எண்ணில் அடங்காதவை.

2004ஆம் ஆண்டு ஒகஸ்ட் முதலாம் திகதி கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட புளொட் மோகன் செய்த படுகொலைகளின் பட்டியலை வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் பற்றி விசாரித்த நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் விபரமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி 158 பொதுமக்களை கடத்தி சென்று படுகொலை செய்த சம்பவத்தில் புளொட் மோகன் முக்கியமானவர் என நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1990ஆம் ஆண்டு யூன் மாதத்திற்கு பின்னர் அப்பாவி பொதுமக்களை பிடித்து மட்டக்களப்பில் வீதிகளில் உயிருடன் ரயர் போட்டு எரித்த சம்பவங்களை தினசரி காணமுடிந்தது. இக்கொலைகளை கப்டன் முனாசுடன் சேர்ந்து புளொட் மோகனும் ஏனைய புளொட் இயக்கத்தினருமே செய்தனர்.
இராணுவ கட்டுப்பாட்டில் இல்லாத வவுணதீவு பகுதியில் மறைந்திருந்து பொதுமக்களை சுட்டுக்கொன்ற சம்பவங்கள் தினசரி இடம்பெற்றன.

1988ஆம் ஆண்டு புளொட் மோகன் தலைமையிலான புளொட் இயக்கத்தினர் கல்லடி பாலத்திற்கு அருகில் வைத்து வீரகேசரி மட்டக்களப்பு செய்தியாளர் ஆர்.நித்தியானந்தனை பிடித்து கழுத்தை அறுத்து விட்டு சென்றனர். நித்தியானந்தன் இறந்து விட்டார் என நினைத்தே புளொட் இயக்கத்தினர் சென்றனர். ஆனால் அவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் காப்பாற்றப்பட்டார்.
அதன் பின்னர் நித்தியானந்தன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். 1992ஆம் ஆண்டு புளொட் மோகன் மறைந்திருந்து நித்தியானந்தனை சுட்டுக்கொன்றான்.

புளொட் இயக்கத்தின் அலுவலகம் மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் இருந்தது. படுவான்கரை கிராமங்களிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு வரும் மக்கள் புளொட் அலுவலகம் இருக்கும் வீதியால் செல்லவே அச்சம் அடைவார்கள். படுவான்கரையில் இருந்து விறகு கொண்டு வந்து விற்று விட்டு 300ரூபா பணத்துடன் சென்ற ஒரு ஏழைத்தொழிலாளியை கூட புளொட் இயக்கத்தினர் 300ரூபாவுக்காக கடத்தி கொலை செய்த சம்பவமும் உண்டு.

தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில் நடந்த கொடுமைகளுக்கு மனித உரிமை மீறல்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக நீதியரசர் விக்னேஸ்வரனை இணைத்தலைவராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை இந்த கொலைகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவையில் புளொட் இயக்கம் ஒரு முக்கிய பங்காளியாக இருப்பதால் இக்கொலைகள் பற்றி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் பேரவையும் இக்கொலைகளின் பாவத்தை சுமக்க வேண்டி ஏற்படும்.

அதேபோன்று தமிழ் மக்கள் பேரவையில் பங்காளியாக இருக்கும் மற்றொரு இயக்கம் ஈ.பி.ஆர்.எல்.எவ்.

இந்த இயக்கத்தின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கனடா செல்வதற்கு அந்நாடு தடை செய்திருக்கிறது. இதற்கு காரணம் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமும் படுகொலைகளில் ஈடுபட்டதாக கனடா அரசாங்கத்திற்கு ஆதாரம் கிடைத்ததால் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு கனடா அரசாங்கம் இத்தடையை விதித்துள்ளது.

இதில் முக்கியமான சம்பவம் முரசொலி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த திருச்செல்வத்தின் மகன் அகிலன் என்ற மாணவனை சித்திரவதை செய்து கொன்றதாகும்.

அக்காலப்பகுதியில் நான் முரசொலி பத்திரிகையில் உதவி ஆசிரியராக கடமையாற்றி வந்தேன்.   அக்காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தில் மண்டையன்குழு என்ற கொலைப்படை இயங்கி வந்தது.

யாழ்ப்பாணம், வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய இடங்களில் மண்டையன் குழு இயங்கி வந்தது.

1989ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கொக்கோ கோலா போத்தல் ஒன்று சத்திரசிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.
அச்செய்தி முரசொலி பத்திரிகையில் மட்டுமே வெளியாகியது. இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கோலா போத்தல் மீட்கப்பட்டது. அந்த இளைஞர் சில தினங்களுக்கு முதல் சிலரால் கடத்தி செல்லப்பட்டிருந்தார் என இறுதியில் எழுதப்பட்டிருந்தது.

அந்த இளைஞரை கடத்தியவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் என பின்னர் பலருக்கும் தெரியவந்தது. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தை சுட்டுக்கொல்வதற்கு திட்டமிட்டனர்.

முரசொலி பத்திரிகை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்து வந்த படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தி வந்தது.

அன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கு யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்திய இராணுவத்துக்காகவும் தங்கள் மீது புலிகள் மேற்கொள்கின்ற தாக்குதலுக்காகவும் பழிக்குப் பழி வாங்குகின்ற படுகொலைகளை முன்னின்று நடத்தி வந்தார்.

புலி ஆதரவாளர்கள் புலிகளுக்கு உதவியவர்கள், புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் எனப் பலர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.   திருச்செல்வத்தையும் கடத்தி கொலை செய்வதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் திட்டமிட்டது.

எஸ்.திருச்செல்வம் அவர்களைக் கடத்துவதற்காக அவருடைய வீட்டுக்கு மண்டையன் குழுவினர் சென்ற போது திருச்செல்வம் வீட்டின் பின் பக்கத்தால் தப்பியோடிவிட்டார். அதனால் அங்கிருந்த அவரது மகன் அகிலனை மண்டையன் குழுவினர் கடத்திச் சென்றனர். திருச்செல்வம் தங்களிடம் வந்தால் மகனை விடுவிப்போம் என்று எச்சரித்துச் சென்றனர். தான் அவர்களிடம் சென்றால் கொல்லப்படுவேன் என்பதை நன்கு அறிந்திருந்த திருச்செல்வம் தான் செல்லாவிட்டால் தன் மகனைக் கொல்வார்கள் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்நிலையில் மண்டையன் குழு அகிலனை படுமோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கியது. அகிலனின் மலவாசலினூடாக சோடாப் போத்தலை செலுத்தினார்கள். அவருடைய நகங்களைப் பிடுங்கினார்கள். மறுநாள் அகிலன் பிணமாக வீதியில் வீசப்பட்டார்.

எஸ்.திருச்செல்வம் தம்பதிகளுக்கு கனடிய அரசு அரசியல் தஞ்சம் வழங்கி அவர்களை கனடாவுக்கு அழைத்தது. திருச்செல்வம் தனது மகனின் கொலை தொடர்பாக கனடிய அரசுக்கு வழங்கிய சாட்சியத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரனைக் குற்றம்சாட்டி இருந்தார். அதனால் சுரேஸ் பிரேமச்சந்திரனின் பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவருக்கு விசா வழங்க கனடிய அரசு மறுத்து வருகின்றது.
இந்த இயக்கங்கள் மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளைத் திருப்பிய சம்பவங்கள் எண்ணிலடங்கா. அரச படைகளுக்கு எவ்விதத்திலும் குறையாமல் சித்திரவதைகளிலும் படுகொலைகளிலும் இந்த இயக்கங்கள் ஈடுபட்டன. ஒருவரைக் கொல்வதற்கு எவ்வித காரணங்களும் கொடுக்கப்பட வேண்டிய தேவையே இருக்கவில்லை.

திருச்செல்வத்தின் மகன் அகிலனை நான் நன்கு அறிந்திருந்தேன். அமைதியான சுபாவம் கொண்ட படிப்பு விளையாட்டு என சகல துறைகளிலும் சாதனை படைத்த மாணவன்.

கல்லூரியின் மிகத் திறமையான மாணவனான அகிலன் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாக க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தது. அதில் அகிலன் நான்கு பாடங்களிலும் ‘ஏ’ பெற்று மிகத் திறமையாக சித்தியடைந்திருந்தார்.  தான் கல்வி கற்ற கல்லூரியின் கிரிக்கட் குழுவின் தலைவனாகவும் அகிலன் விளங்கினான்.

மாணவன் அகிலன் திருச்செல்வனின் கொலை ஒரு போதுமே நியாயப்படுத்தப்பட முடியாத படுகொலை. தகப்பனுக்காக ஒருபோதுமே மகனைக் கடத்திப் படுகொலை செய்தது யாராகவிருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத படுகொலை.
அதேபோன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராகவும் பிரஜைகள் குழு துணைத்தலைவராகவும் இருந்த வணசிங்க மற்றும் மட்டக்களப்பு பிரஜைகள் குழுத்தலைவர் வணபிதா சந்திரா பெர்ணாண்டோ ஆகியோரின் கொலைகளையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமே செய்தது.

வந்தாறுமூலையில் பிறந்த வணசிங்க அவர்கள் 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் தொடக்கம் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டவர்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்த வணசிங்க அவர்கள் இந்திய இராணுவ காலத்தில் தமிழ் மக்களின் பாகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கினார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் உறுப்பினராகவும், பின்னர் அதன் துணைத்தலைவராகவும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தார்.

அநீதியும் உரிமை மீறலும் எங்கு நடக்கிறதோ அங்கு சென்று அவற்றைத் தட்டிக்கேட்டு நியாயம் தேடும் ஒரு தலைவனாக அவர் விளங்கினார்.  ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்த அட்டூழியங்கள் படுகொலைகளை தட்டிக்கேட்டார்.

இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் இவரை படுகொலை செய்ய திட்டமிட்டது. 1989ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியில் அவர் வீட்டில் இருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்த இருவர் அங்கு சென்றனர். அவருடன் பேச வேண்டும் என்றனர். வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தீடிரென ஒருவர் வணசிங்காவை சுட்டுக்கொன்று விட்டு தப்பி சென்றனர்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் மட்டக்களப்பில் புரிந்த படுகொலைகளில் வணபிதா சந்திரா பெர்னாண்டோ அடிகளாரை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் முக்கியமானதாகும்.

1988ஆம் ஆண்டு யூன் 6ஆம் திகதி மட்டக்களப்பு புளியந்தீவில் உள்ள புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வரும் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவருமான வணபிதா சந்திரா பெர்னாண்டோ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தேவாலயத்திற்குள் வைத்து தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வணபிதா சந்திரா அவர்கள் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராக இருந்து ஆற்றிய பணிகள் பல. ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் செய்யும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தி வந்தார்.

அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முதல் மட்டக்களப்பு நகரில் வைத்து சுகுணா என்ற தமிழ் இளம் பெண்ணையும் ரிபாயா என்ற முஸ்லீம் இளம் பெண்ணையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் கடத்தி சென்றனர். இவர்களை வாவிக்கரை வீதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் வைத்து கூட்டாக பலரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். வணபிதா சந்திரா இவர்களை மீட்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். இந்திய இராணுவ கட்டளை தளபதி ஒருவருடன் தொடர்பு கொண்டதன் பின் சுகுணா என்ற தமிழ் பெண் மீட்கப்பட்டார். ஆனால் ரிபாயா என்ற முஸ்லீம் பெண்ணை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்து விட்டனர்.

இந்த விடயத்தை வணபிதா சந்திரா மனித உரிமைகள் அமைப்புக்கள் மட்டத்திற்கு கொண்டு சென்றார். இதற்கு பழிவாங்குவதற்காகவே ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் வணபிதா சந்திரா அவர்களை படுகொலை செய்தது.

அதேபோன்றுதான் 1989ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரஜைகள் குழு தலைவராக இருந்த சிவானந்தசுந்தரம்  அவர்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் சுட்டுக்கொன்றது. யாழ்ப்பாணம் அரியாலையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றி விட்டு பருத்தித்துறை நோக்கி சென்ற போது அவரை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் சுட்டுக்கொன்றனர்.

அக்காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மக்களின் குரலாக ஒலித்த மக்கள் தலைவர்களை படுகொலை செய்த சம்பவங்கள் இலகுவில் மறந்து விடக் கூடியவை அல்ல. அந்த கொலைகளை புரிந்தவர்கள் அதற்கு உத்தரவிட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவையும் அதன் இணைத்தலைவராக இருக்கும் நீதியரசர் விக்னேஸ்வரனும் இந்த கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்துவார்களா?
கொலையாளிகளை அருகில் வைத்துக்கொண்டு மனித உரிமை பற்றி எப்படி பேச முடியும்?

-இரா.துரைரத்தினம்.


thinakathir

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com