
இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் மக்களின் கருத்துக்களையும் திரட்டுவதற்கான சிறப்புக் குழுவொன்று அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் லால் விஜேநாயக்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட 20 பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
புதிய அரசியலமைப்பு எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதே இந்தக் குழுவின் நோக்கம் என்று மூத்த வழக்கறிஞர் லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசியல் யாப்பும் அதற்கு முந்தைய யாப்பும் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாத காரணத்தினாலேயே அவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இலங்கை வரலாற்றில் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி உருவாக்கப்படும் முதல் அரசியல் யாப்பு இதுவாக இருக்கும் என்றும் லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் சென்று தங்களின் குழு மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள உள்ளதாகக் கூறிய விஜேநாயக்க, வரும் 18 ம் திகதி கொழும்பு மாவட்ட மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்வாறாக, வரும் மார்ச் மாதம் 31 ம் திகதி வரை பொது மக்களின் கருத்துக்கள் திரட்டப்பட்டு, அதன்பின்னர் தங்கள் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, புதிய அரசியல் யாப்பு தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதற்கு தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும் முன்வர வேண்டும் என்றும் லால் விஜேநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment