இலங்கையில் நாடாளுமன்றத்தை அரசியல் யாப்பு உருவாக்கச் சபையாக இயங்கச் செய்வதற்கான தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்துள்ளார்.
இதன்படி, சபாநாயகரின் தலைமையில் அரசியல்யாப்பு உருவாக்கச் சபை அமைக்கப்படவுள்ளது.
இதனையடுத்து, புதிய அரசியல்யாப்புக்கான சட்டமூலம் அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டால் அதற்கு மக்களின் அனுமதியை பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்புக்காக சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரத்தின் பின்னர் பண்டாரநாயக்க, டட்லி சேனாநாயக்க ஆகிய பிரதமர்கள் புதிய அரசியல் திருத்தங்களை அறிமுகப்படுத்த எடுத்த முயற்சிகள், அவற்றுக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்புக்கள் காரணமாக கைவிடப்பட்டதாகவும், அந்த முயற்சிகள் வெற்றி பெற்றிருந்தால் பிரபாகரன் என்று ஒரு நபர் எமது சமூகத்தில் உருவாகியிருக்கமாட்டார் என்று கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக புதிய அரசியல்யாப்பொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கங்கள் முயற்சித்தப் போதிலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு இல்லாத காரணத்தால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவது அவசியம் என்று கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கு சகல தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இன்றைய அமர்வின் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 16ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment