இந்தியாவும் தமிழ் மக்கள் பேரவையும் -அ.நிக்ஸன்இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்திய பிரதமரை சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவது பின்னர் அந்த சந்திப்பு தொடர்பாக அதீத நம்பிக்கையுடன் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வது வழமை.
ஆனால் கடந்த ஒரு வருடமாக இந்தியா பற்றிய பேச்சுக்களை விட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பேசுகின்ற பண்பை காணமுடிகின்றது. அதுவும் இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன்தான் என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஜனாதிபதியின் நம்பிக்கை
இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கின்றார்.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் வைக்கமுடியாத நம்பிக்கையை நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ்த்தரப்பு வைத்துள்ளமை ஸ்ரீலங்கா அரசு என்ற கட்டமைப்பை அவர்கள் ஏற்றிருக்கின்றனர் என்ற கருத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் அந்த கூற்று அமைந்துள்ளதை காணமுடிகின்றது.
இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணிய காலத்திலும் ஸ்ரீலங்கா அரசு அதன் ஒற்றையாட்சித் தன்மை என்ற கோட்பாட்டை ஏற்று அதன் மூலம் குறைந்தபட்ச அதிகாரபகிர்வை காணலாம் என்ற நம்பிக்கையுடன் கூட்டமைப்பு செயற்பட்டதையும் காணமுடிந்தது.
இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை முன்வைப்பதற்காக இந்திய மத்திய அரசு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை புதுடில்லிக்கு அழைத்து பேசவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு இந்திய மத்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகள் இருந்தன.
அதுமாத்திரமல்ல இனப்பிரச்சினைக்கான தீர்வு எப்படி அமைய வேண்டும் என்ற கருத்துக்கள் கூட இந்திய மத்திய அரசினால் அவர்களுக்கு அன்று முதல் போதிக்கப்பட்டும் வந்தன.
போதனை செய்ய முயற்சி
ஆனால் விடுதலைப் புலிகள் போராட்டம் நடத்திய அந்த 30 வருடகாலத்தில் இந்திய அரசின் அந்த போதனைகளை தமிழ்த் தலைவர்களினால் செயற்படுத்த முடியாமல் போனது.
இருந்தாலும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் அந்த போதனைகளை மீண்டும் செயற்படுத்தக்கூடிய வசதிகள் இந்திய மத்திய அரசுக்கும் அவர்களை அணுகிச் செல்லும் தமிழ்த் தரப்புக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது.
இந்த இடத்தில்தான் விக்னேஸ்வரன் விதிவிலக்காகிவிட்டார். ஆகவே இந்திய மத்திய அரசு அவரையும் அழைத்து போதனை செய்வதன் மூலம் ஸ்ரீலங்கா அரசு என்ற கட்டமைப்புக்குள் நின்று கொண்டும் அதன் ஒற்றையாட்சித் தன்மையை பாதுகாக்கும் வகையிலும் தீர்வு ஒன்றை நோக்கி செல்லக்கூடிய சூழல் ஒன்றை உருவாக்கலாம் என நம்புகின்றனர்.
தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் பின்னணியில் விக்னேஸ்வரனை இந்தியாவுக்கு அழைக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள சில மூத்த உறுப்பினர்கள் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்.
இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மை ஆதரவுடன் செயற்படும் வடமாகாண சபை தேசியம் என்ற கருத்துநிலையில் இயங்கினால் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் குறிப்பாக புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கருதியிருக்கலாம்.
ஏனெனில் இந்திய மத்திய அரசு உட்பட மிதவாத சிங்கள தலைவர்கள் என்று கூறப்படுகின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்கா ஆகியோர் கூட தமிழ்த் தேசியம் சார்ந்து தீர்வை முன்வைக்க விரும்புவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை.
இந்திராகாந்தி காலம்
இந்த நிலையில் விக்னேஸ்வரனை அழைத்து பேசினால் பேரவையின் செயற்பாடுகளை நிறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டுடன் அவரை ஒத்துப்போகச் செய்வதன் மூலம் தமது புவிசார் அரசியலை முன்னெடுக்க வசதியாக அமையும் என்பதுடன் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் ஆயுட்காலத்தையும் சிங்கள கடும்போக்குவாதிகளையும் திருப்திப்படுத்தலாம் என அவர்கள் கருதியிருக்கலாம்.
இந்திய மத்திய அரசின் இந்த நிலைப்பாடு இந்திரா காந்தி காலத்தில் இருந்தது என்பதுதான் விமர்சகர்களின் கருத்து. ஏனெனில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஒத்த அல்லது இந்திய மாநில அதிகாரங்களையும் விட குறைவான அரசியல் தீர்வு ஒன்றையே அன்று இந்திரா காந்தி தீர்மானித்திருந்தார் என்பதற்கு வரலாறுகள் உண்டு.
இந்திரா காந்தி காலத்தில் அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்ற தமிழ்த் தலைவர்களுக்கு அரச கௌரவம் இந்தியாவில் கிடைத்து என்ற ஒரு செய்தியைத் தவிர வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அதிகார விடயத்தில் ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சித் தன்மைக்கு பங்கம் ஏற்படக் கூடாது என்பதில் இந்திரா காந்தியும் அவதானமாக இருந்தார் என்பதுதான் உண்மை.
ஏனெனில் இந்தியாவில் சமஸ்டி முறை ஆட்சி இருந்தாலும் அங்கு ஒற்றையாட்சி தன்மை கொண்ட அரசுதான் உள்ளது. பிராந்திய பாதுகாப்பு என இந்திரா காந்தி கூறியது இந்தியாவின் ஒற்றையாட்சித் தன்மையை பாதுகாக்கும் நோக்கில் என்பதை தமிழ்த் தலைமைகள் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
அதன் காரணத்தினால் தான் 1987 இல் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமான மாகாணசபை முறையை அவர்கள் அன்று ஏற்றிருந்தார்கள். விடுதலைப் புலிகள் அதனை விரும்பவில்லை என்ற ஒருவகை அச்சத்தினால் பின்னர் 13 ஆவது திருத்தம் தீர்வு ஆகாது என்ற கருத்தையும் தமிழ் தலைமைகள் அன்று முன்வைக்கத் தவறவில்லை. 
சாதகமான அரசியல் சூழல்
2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் இந்தியாவின் விருப்பத்தை முழுமையாக ஏற்கக்கூடிய நிலைமை சம்பந்தன் போன்ற தமிழ்த் தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
நரேந்திரமோடி காங்கிரஸ் அல்லாத வேறு அரசியல் கட்சியை சேர்ந்திருந்தாலும் ஸ்ரீலங்கா தமிழர் விவகாரத்தில் 13 ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வு என்பதை ஏற்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழல் அவருக்கும் உண்டு.
ஏனெனில் இந்தியத்தேசிய பாதுகாப்பு என்ற எல்லைக்குள் ஸ்ரீலங்கா விவகாரம் நோக்கப்படுவதால் இந்தியாவில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் இந்திரா காந்தி அன்று எழுதி வைத்த 13 ஆவது திருத்தச்சட்டம்தான் இறுதிவரை நடைமுறையில் இருக்கும் என்பது வெளிப்படையானது.
ஆகவே தமிழ் தலைமைகள் செய்ய வேண்டியது என்ன? 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள காணி பொலிஸ் அதிகாரங்கள் 18 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் எவ்வாறு பறிக்கப்பட்டன என்பது பற்றிய விடயங்களை அரசியலமைப்பு ரீதியாக சுட்டிக்காட்ட வேண்டும்.
1947 ஆண்டு சோல்பரி யாப்பில் இருந்து தமிழ் மக்களுக்கு ஏற்ற முறையில் இருந்த சட்டங்கள் படிப்படியாக எவ்வாறு இல்லாமல் செய்யப்பட்டன. சட்டத்திற்கு மாறான காணி அபகரிப்புகள், தமிழ் பகுதிகளில் புதிய சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகள் உருவாக்கப்படுகின்றமை போன்ற பல்வேறு விடயங்களை உதாரணப்படுத்தலாம்.
தமிழ் மக்களுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புகளையும் எடுத்துக் கூறலாம். ஆக அரசியலமைப்பும் அதனைப் பாதுகாக்கின்ற நீதிமன்றமும் சிங்கள மயப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு ஒற்றையாட்சி முறையை ஏற்பது? என்ற கேள்விகள் இயல்பாகவே எழும்.
இந்த நிலையில் தமிழ்த்தேசியக் கோட்பாடு எதற்காக எழுந்தது என்ற சர்வதேச சமூகத்தின் வினாவுக்கும் இயல்பாகவே பதில் கிடைக்கலாம்.
-அ.நிக்ஸன்-

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com