புதிய அரசியல் யாப்பு தொடர்பாக அரசாங்கம் தமிழ்த் தரப்புடன் விரைவில் பேச்சு நடத்தக்கூடிய வாய்ப்புள்ளதாக அமைச்சரவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் சில பொது அமைப்புகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
புதிய அரசியல் யாப்புக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தாலும் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி முறைதான் தீர்வாக அமைய வேண்டும் என்றும் அந்த விடயங்கள் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவது அவசியம் எனவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தி வருகின்றார்.
அதேவேளை வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி முறைதான் சிறந்த அரசியல் தீர்வு என்றும் தமிழ் மக்களின் இறைமை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் பேரவை அழுத்தம் கொடுத்து வருகின்றது.
இந்த நிலையில் தமிழ்த்தரப்புடன் பேச்சு நடத்தி சுமுகமான தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அரசாங்கம் விரும்புவதாகவும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் அதற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அமைச்சரவைத் தகவல்கள் கூறுவதாக எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை புதிய அரசியல் யாப்பு ஒற்றை ஆட்சியின் அடிப்படையில் அமையும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அரசாங்கத்துடன் பேசுவதில் பயனில்லை என தமிழ் கட்சி ஒன்றின் மூத்த உறுப்பினர் கூறியதாகவும் எமது கொழும்புச் செய்தியாளர் குறிப்பிட்டார்.
ibc
0 comments:
Post a Comment