தமிழ் மக்கள் பேரவை அரசியல் நோக்கமற்றதாக அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தெரியாமல் மூடிமறைத்து ஏன் உருவாக்கப்பட்டது? என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் உண்மை உருவம் இதுவரை வெளிவரவில்லை எனவும் அதனை மக்கள் சார்ந்த அமைப்பாக எவ்வாறு கருத முடியும்? என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் எனக்கு தனிப்பிட்ட விதத்தில் எந்த முறுகலும் இல்லை. எனினும் கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பிற்கு சார்பாக அல்லாமல் அவர் செயற்பட்ட விதம் குறித்து தற்போது தமிழ் மக்கள் பேரவையிலுள்ள உறுப்பினர்கள்கூட அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.
தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் அரசியல் நோக்கம் அற்றது என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அதன் உண்மை உருவம் இன்னும் வெளிவரவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மூடிமறைக்கப்பட்டு இந்த பேரவை உருவாக்கப்பட்டதன் இரகசியம் என்ன?
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமிழ் மக்கள் பேரவை இதுவரை எந்தவிதத்திலும் பேச்சுக்களை நடத்தவில்லை. கூட்டமைப்பு பல ஆண்டுகளாக தீர்வுத்திட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்படும் தீர்வுகளை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள்?
அதேவேளை தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் பேச்சு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.
0 comments:
Post a Comment