கடந்த சிலநாட்களாகப் பெய்துவரும் தொடர்மழையால் எமது தொப்புள்கொடி உறவுகள் அனுபவிக்கும் தாங்கொனா துன்பங்களிலும் துயரங்களிலும் ஈழத்தமிழர்களாகிய நாங்களும் பங்குகொள்கிறோம். எமது தமிழக உறவுகள் இயற்கையின் கோரத்தாண்டவத்திலிருந்து விரைவில் விடுபட்டு மீண்டும் இயல்புவாழ்விற்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டுகின்றோம்.
தமிழக உறவுகள் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் நிலைகுறித்து அவதானம் செலுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
இயற்கை அன்னை இம்முறை தனது கோபத்தைத் தமிழகத்தின்மீது திருப்பியிருப்பதையிட்டு நாம் மிகுந்த கவலை அடைகின்றோம். எப்பகுதியிலிருந்து வெள்ளம் வருகிறது எங்கு செல்வது என்ன செய்வது என்று தெரியாமல் எமது தமிழகத்தின் தலைநகர் உறவுகள் அல்லல்படுவதை காட்சி ஊடகங்களில் கண்டதும் நெஞ்சம் பதறியது. இந்நிலையில் சிலர் மடிந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சடுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக அகாலமரணமடைந்த எமது உறவுகளின் குடும்பத்தினருக்கும் அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் புரட்டிப்போட்டுள்ள வெள்ளத்தின் சீற்றம் விரைவில் அடங்கவேண்டும் என்று விரும்புகின்றோம். வெள்ளநீர் வடிநது; அதன் பின்னரான நிலையை நினைக்கும்போதும் மிகவும் கவலையடைகின்றோம்.
மக்கள் அனைவரும் ஒற்றுமையாக நின்று கூடி உழைத்து இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுப்பதை நினைக்கும்போது சற்று ஆறுதல் அடைகின்றோம்.
போர்க்காலங்களில் அதிகமான இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர்கள் என்ற வகையில் எமது தமிழக தலைநகர மக்களின் துயரங்களை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சொந்தங்கள் அருகில் இருந்தாலும் ஒருவரோடொருவர் தொடர்புகொள்வதில்கூட சிக்கல் ஏற்பட்டுள்ளதையறிந்து மிகவும் வேதனையடைகின்றோம். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் தகவல் தொடர்புகள்கூட ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை மிகவும் வருத்தமளிக்கிறது.
மக்கள் தூய நீருக்காகவும், உணவிற்காகவும் இன்னபிற அத்தியாவசியத் தேவைக்காகவும் ஏங்குகின்ற நிலை தோன்றியிருக்கின்றது. போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருக்கிறது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து அனர்த்தத்தின் கோரத்தை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அனர்த்தத்தில் உயிரிழப்புக்கள் இல்லாமலிருக்க வேண்டுகின்றோம். வந்தாரை வாழவைக்கும் வையகமாம் தமிழகமும் அதன் தலைநகரும் விரைவில் மீண்டும் வழமைக்குத் திரும்பி புதுப்பொலிவுடன் பழைய மிடுக்குடன் பீடுநடைபோட இயற்கை அன்னையை வேண்டுகின்றோம்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எமது உறவுகளின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்கிறது. அத்துடன் தமிழக முதல்வருடனும் அமைச்சர் பெருமக்களுடனும் ஈழத் தமிழ் மக்கள் சார்பாக எமது கவலையைப் பகிர்ந்துகொள்கின்றோம்.
0 comments:
Post a Comment