இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் நம்பிக்கை அளிக்கவில்லை என்று கூறி, அதன் அமர்வுகளை புறக்கணிக்குமாறு காணாமல்போனவர்களை கண்டறியும் குழுக்களின் பிரதிநிதிகள் கோரியிருந்தனர்.
எனினும், யாழ் மாவட்டத்தில் நடைபெறுகின்ற அந்தக் குழுவின் விசாரணைகளில் பலர் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் மாவட்டத்திலிருந்து கிடைத்த 2500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு, மூன்றாவது நாளாக இன்று ஞாயிறன்று பருத்தித்துறையில் விசாரணைகளை நடத்தியிருந்தது.
இந்த விசாரணைகள் கட்டம் கட்டமாக யாழ் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இம்மாதம் 16 ஆம் திகதி வரையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
யாழ் மாவட்ட அரச செயலகத்தில் நடைபெற்ற முதல் இரண்டு-நாள் விசாரணைகளின்போது 165 பேர் சாட்சியமளித்ததாகவும், இன்றைய விசாரணைகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனதாகக் கூறப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பண்பாட்டுத்துறை தலைவரான கவிஞர் புதுவை இரத்தினதுரையை கண்டுபிடித்துத் தருமாறு, அவருடைய சகோதரி யாழ் அரச செயலகத்தில் நடைபெற்ற விசாரணைகளில் கோரியிருக்கின்றார்.
0 comments:
Post a Comment