தமிழ் மக்கள் இதுவரை அறியாதிருந்த அல்லது மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக வெளி, தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தின் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானதல்ல என்பதை அதன் இணைத்தலைவர்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ் மக்கள் பேரவையின் உதயம் குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்டமைப்பு சார் நிறுவனமாக முன்வைக்கப்பட்ட தமிழ் தேசிய சபை என்னும் கருப்பொருளுக்கு தற்பொழுது தமிழ் மக்கள் பேரவை மூலம் செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அரசியலுக்கும் அப்பால் அனைத்து மக்களையும் ஒருங்கிணைப்பதற்கான களம் ஒன்று அவசியமானது என்பதன் அடிப்படையிலேயே தமிழ் தேசிய சபையின் முக்கியத்துவம் முன்னிலைப்படுத்தப்பட்டது.
மக்கள் வெறுமனே தேர்தலில் வாக்களிக்கும் இயந்திரம் அல்ல. அவர்களின் பங்களிப்பில்லாமல் எந்தவிதப் போராட்டமும் பயனளிக்காது. இந்த யதார்த்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை புறக்கணித்ததன் விளைவே இன்று பல்வேறு அமைப்புகளும், துறைசார் நிபுணர்களும், புத்திஜீவிகளும், சமூக அக்கறைகொண்ட ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த அமைப்பை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகவே இதனை எந்தவொரு கட்சியும் தமக்கு எதிரான அமைப்பு என்று எண்ணாமல், அதன் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அதனுடன் எவ்வாறு இணைந்து சென்று எமது அரசியல் இலக்கை அடையலாம் என்று சிந்திப்பதே இராஜதந்திர அரசியலை மேற்கொண்டுள்ள அனைத்து தரப்பினரதும் சாதுர்யமான நடவடிக்கையாக அமையும்.
பல்வேறு தரப்பினரையும் ஒரே அரங்கில் அமரவைத்து தமது அங்குரார்ப்பணத்தைச் செய்துள்ள தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழுவினரை மனதாரப் பாராட்டுகின்றோம். தமிழ் மக்களின் சமூக, அரசியல், பொருளாதார அபிலாசைகளை முன்வைத்து கட்சி மற்றும் தேர்தல் அரசியலுக்கு அப்பால் சென்று அனைத்து மக்களினதும் கருத்துக்களைக் கேட்டறிவதற்கும் அவர்கள் தமது ஜனநாயக உரிமையை நிலைநாட்டிக்கொள்வதற்குமான வெளி திறக்கப்பட்டுள்ளது. இதை எதிர்ப்பது நாம் எந்த ஒரு இனத்தின் உரிமைக்காகப் போராடுகின்றோமோ அந்த இனத்தின் உரிமைகளை நாமே பறிப்பதற்கு ஒப்பாகும்.
தமிழ் மக்கள் பேரவை தேர்தலில் யாருக்கும் போட்டியாக களம் இறங்கப்போவதில்லை. ஆகவே கூட்டமைப்பின் தேர்தல் அரசியலுக்கு அது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. மக்களின் நலன்சார்ந்து மக்களின் பங்களிப்புடனேயே அனைத்தும் வெற்றிபெறும் என்று உண்மையாக நம்புபவர்கள் இந்த அமைப்பைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. ஏமாற்று அரசியல் செய்பவர்களே இத்தகைய அமைப்புக்களைக் கண்டு அஞ்சவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இனியாவது ஜனநாயக விழுமியங்களை மதித்து அங்கத்துவக் கட்சிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்து கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பாக உருவாக்குவதற்கு முன்வரவேண்டும். அதுவரையில் அங்கத்துவக் கட்சிகளை சமத்துவத்துடன் நடத்துவதற்கு திடசங்கற்பம் எடுக்க வேண்டும். இதுவொன்றுதான் எமது மக்களின் சகவாழ்விற்கும் சமாதானத்திற்கும் சுயமரியாதையைக் காப்பதற்கும் ஏற்ற உகந்தவழியாக அமையும்.
விடுதலைக்காக தற்போதுவரையில் போரடிக்கொண்டிருக்கும் சமூகத்திற்காக தோளோடுதோள்நின்று போராடிவரும் நாம் கடந்த காலங்களில் பல்வேறு மக்கள் அமைப்புக்களை உருவாக்கிய அனுபவம் உள்ளவர்கள். அதன் அடிப்படையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினராகிய நாம் தமிழ் மக்கள் பேரவையை முழு மனதுடன் வரவேற்கிறோம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம் என்றுள்ளது.
0 comments:
Post a Comment