முள்ளியான் காட்டுக்குள் புராதன வீடு கண்டுபிடிப்புகிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட இயக்கச்சிக் கோட்டையிலிருந்து தென்கிழக்கே ஏழு கிலோமீற்றர் தொலைவிலுள்ள நித்தியவெட்டை முள்ளியான் என அழைக்கப்படும் காட்டுப்பகுதியில், அழிவடைந்த புராதன வீடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் இணைப்பாளர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், குறித்த பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியற் சிறப்புக்கலை மாணவர்களுக்கு, அங்குள்ள காட்டுப்பகுதியில் அழிவடைந்த அரண்மனை ஒன்று இருப்பதாக அவ்வூர் மக்களால் கூறப்பட்ட தகவலையடுத்து, அவ்விடத்துக்குச் சென்று தொல்லியல் ஆய்வை மேற்கொண்டோம்.

இக்கட்டடத்தை, அவ்வூர் மக்களில் பலர் அரண்மனை எனவும் வேறு சிலர் இயக்கச்சி கோட்டையுடன் தொடர்புடைய சிறைக்கூடம் எனவும் அழைக்கின்றனர். ஆனால் கட்டடத்தின் அமைப்பையும் அதன் காலத்தையும் நோக்கும் போது, அது பண்டைய காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களது வீடாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

இவ்வீடு, காட்டின் நடுவேயுள்ள பெரியகுளத்துக்கு அருகேயுள்ள உயர்ந்த மேட்டுநிலத்தில், செங்கட்டிகள், களிமண், சுதை என்பன கொண்டு கட்டப்பட்டுள்ளது. இரண்டு அறைகளைக் கொண்ட இக்கட்டடம், ஏறத்தாழ ஒன்பது மீற்றர் நீளமும் நான்கரை மீற்றர் அகலமும் கொண்டது. இவ்வீட்டின் பின்பக்க அறைச் சுவரில், சிறிய யன்னல் ஒன்று இருந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது.

கட்டடத்தின் பெரும்பாலான சுவர்கள் அழிவடைந்து விட்டாலும் கட்டத்தின் மூன்று பக்க அத்திபாரங்களை தெளிவாகப் பார்க்க முடிகிறது. இந்த கட்டடத்தின் கூரை, கூரைமரங்கள், பனை ஓலைகள் கொண்டு வேயப்பட்டிருக்கலாம் எனக் கருதலாம். இவ்வீட்டை அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட செங்கட்டிகளின் அளவும், அவற்றின் தொழில் நுட்பமும் ஐரோப்பியர் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட செங்கட்டிகளின் காலத்துக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன.

மேலும், இக்கட்டட அழிபாடுகளுக்கிடையே இருந்து எடுக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட நீர்ப்பாசனக் குழாய்கள் என்பவற்றின் காலம், ஏறத்தாழ கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் காணப்படுகிறது. இவற்றை ஆதாரங்களாகக் கொண்டு, இவ்வீடு அமைக்கப்பட்ட காலம் யாழ்ப்பாண அரசுக்காலம் அல்லது அதற்கு முந்தியகாலத்தைச் சேர்ந்ததெனக் கூறமுடியும்.

ஆகவே, வட இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட காலத்தால் முந்திய குடிமனையாக இதைக் கருத முடியும். வட இலங்கையில் புராதன குடியிருப்புக்ளைக் கொண்ட இடங்களில், வடமராச்சி கிழக்கு பிரதேசமும் ஒன்றாகும். வெற்றிலைக்கேணி, உடுத்துறை, செம்பியன்பற்று, முள்ளியான், கட்டைக்காடு ஆகிய இடங்களில் மேற்கொண்ட ஆய்வுகளில், இவ்விடங்களில் இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

யாழ்ப்பாண அரசுகாலத்தில் கடல்வழிகளாலும் வன்னியிலிருந்து தரை வழியாகவும் கொண்டுவரப்பட்ட பொருட்களுக்கான வரி அறவிடும் கடவைகள் மேற்கூறப்பட்ட இடங்களில் இருந்ததற்கு வரலாற்று இலக்கியங்களில் ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனால், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சியைத் தொடர்ந்து இவ்விடங்களில் வாழ்ந்த மக்கள் படிப்படியாகப் பிற இடங்களுக்குச் சென்றதாக இவர்களின் ஆட்சிக்கால ஆவணங்கள் கூறுகின்றன.

ஆயினும் இவ்விடங்களிலிருந்து கடல்வழியாகவும் தரைவழியாகவும் பொருட்கள் கடத்தப்பட்டதால், அவற்றைத் தடுப்பதற்காகவே ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான கோட்டைகளை இயக்கச்சி, ஆனையிறவு, வெற்றிலைக்கேணி போன்ற இடங்களிலும், கடற்கரையை அண்டிய இடங்களில் காவல் அரன்களையும் அமைத்தனர்.

இந்நிலையில், முள்ளியான் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டட அழிபாடுகள், ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் செறிவான தமிழர் குடியிருப்புக்கள் அங்கிருந்ததன் அடையாளமாகக் காணப்படுகிறது. இது போன்ற வீடுகளின் சிதைவுகளும் பாழடைந்த ஆலயங்களின் அழிபாடுகளும் இவ்வட்டாரத்தின் காட்டுப் பகுதிகளில் இருப்பதாக இப்போது தெரியவந்துள்ளது. எதிர்கால ஆய்வுகளால் அவை புதுவெளிச்சம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com