வவுனியா பிராந்திய ஊடகவியாளர்களில் ஒருவரான இளம் சுதந்திர ஊடக செயற்பாட்டாளர் பாஸ்கரன் கதீசன் அவர்களின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலினை வன்மையாக கண்டிப்பதுடன், சம்பந்தப் பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும் என இளைஞர் கழகத்தின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அறிக்கையில், வவுனியா தர்மலிங்கம் வீதியில் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமது விளம்பரங்களை காட்சிப்படுத்தியும், பந்தல்கள் அமைத்தும் வியாபாரம் மேற்கொண்டவர்களை வவுனியா நகரசபை, பொலிசாரின் துணையுடன் அகற்றிய போது செய்தி சேகரப்பில் ஈடுபட்டிருந்த சுயாதீன ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீசன் மீது தனியார் நிறுவன ஊழியர் நடாத்திய தாக்குதலினை வன்மையாக கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்டவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் என்பதனை தமிழ் தேசிய இளைஞர் கழகமாகிய நாம் வலியுறுத்துவதுடன், இவ்வாறான தீர்ப்புக்கள் ஓர் முன்னுதாரணமாக இருப்பதுடன், இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்கள் இடம்பெறாமல் இருக்க இவ் தீர்ப்பு நல்லாட்சியில் எடுத்துக் காட்டாக அமைதல் வேண்டும்.
ஒவ்வொரு ஊடகவியலாளரும் எமது தேசத்தின் உரிமை, அபிவிருத்தி, சமூக விழுமியங்களின் மீது பற்றுடன் செயற்படுவதினாலும், தமது உயிரை கூட பணயம் வைத்து மக்களின் நலனுக்காக உண்மைச் சம்பவங்களை வெளிக்கொணரும் சுயாதீன ஊடக செயற்பாட்டாளர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள், அவர்களின் சுதந்திர செயற்பாட்டிற்கு என்றும் எமது கழகம் துணை நிற்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்வதோடு இனி வரும் காலங்களில் ஊடக சுதந்திரத்திற்கு இவ் நல்லாட்சி அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்த வேண்டுமெனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment